தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளரான மறைந்த தொ. பரமசிவன் எழுதிய 27 கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. நூல் அறிமுகங்களுடன் அணிந்துரைகளும் மதிப்புரைகளும் இடம்பெற்றிருக்கின்றன. அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய பல தகவல்கள் விரவிக் கிடக்கின்றன.
தாய்த் தெய்வ வழிபாடு பற்றிய கட்டுரையில் மதுரை மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் பற்றிய தரவும் பெண் தெய்வங்களின் பெயர் வழங்குவது பற்றிய தரவும் பலரும் அறியாதவை. பெண் விலங்குகளை ஏன் பலியிடுவதில்லை என்பதைக் கூறும் பரமசிவன், சேர்ந்தே சூலாடு குத்துதல் பற்றியும் விளக்குகிறார்.
இசக்கியம்மனின் தோற்ற மூலத்தையும் நேமிநாதர் பற்றியும் தெரிவிக்கும் சிங்கிகுளம் கோயில் விரிவான ஆய்வுக்குரியது. எல்லா மதங்களின் இருப்பையும் வாழ்வையும் தன் இயல்பாகவே அல்லது இயற்கையாகவே எளிய மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார் நூலாசிரியர்.
ஆழ்வார்களின் பாசுரங்களில் ஓர் இடத்தில்கூட ஆழ்வார் என்ற சொல் காணப்படவில்லை என்ற தகவலும் வெள்ளிக்கிழமை விசேஷம் எப்படி வந்தது என்பதெல்லாம் வியக்க வைக்கும் தகவல்கள்.
இஸ்லாமிய மரபு சாராத தம்பி என்கிற பெயர் வழக்கு வரலாற்றுக் காலந்தொட்டு எவ்வாறு கீழக்கரை முஸ்லிம்களிடையே வந்தது என்பது பற்றி பரமசிவன் தெரிவிக்கும் கருத்துகளும் மேற்கோள்களும் விரிவான ஆய்வுக்குரியவை.
‘தமிழ்நாட்டுக் கோசாம்பி’ நா. வானமாமலை, ‘நம்பமுடியாத புலமையாளர்’ சி.சு. மணி பற்றிய இரு கட்டுரைகளும் அளவில் சிறியவை என்றபோதிலும் நல்ல அறிமுகங்கள்; தமிழர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய, கற்க வேண்டிய ஆளுமைகள். சிவஞான மாபாடியத்துக்கு ஆயிரம் பக்கங்களில் சி.சு. மணி எழுதிய எளிய உரைச் சிறப்பையும் குறிப்பிடுகிறார் ஆசிரியர்.