இந்திய சுதந்திரத்துக்கும் இந்திய உணர்வுக்கும் மகத்தான பங்களிப்பு செய்தவர் ஆஸாத். அவர் 1956-ல் வெளியிட்ட ‘இந்திய விடுதலை வெற்றி’ நூலில் அவருடைய வேண்டுகோளுக்கிணங்க, சில பகுதிகள் அப்போது சேர்க்கப்படாமல், அவர் மறைந்து 30 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் பகுதிகள் சேர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்திய சுதந்திரப் போரில் அவர் பங்கேற்றதிலிருந்து ஆரம்பித்து இறுதிக்கட்டம்வரை என்ன நடந்தது என்பதை தீர்க்கமான பார்வையில் ஆஸாத் சொல்கிறார். முக்கியமாக, பிரிவினையின்போது பட்டேலின் செயல்பாடுகளைக் குறித்து ஆஸாத் எழுதியது மிகுந்த சர்ச்சைக்குள்ளானது. ‘நண்பரும் தோழருமான ஜவஹர்லால் நேரு அவர்களுக்கு’ ஆஸாத் இந்தப் புத்தகத்தைச் சமர்ப்பித்திருக்கிறார். மகத்தான இந்தியர் ஒருவரின் மகத்தான புத்தகம் இது.