தமிழகத்தில் பிளாட்வாஸ்கி, ஆல்காட் ஆகியோர் பெளத்தத்தைப் பரப்பினர். இவர்கள் 1880களின் தொடக்கத்தில் ஆதி திராவிடர் சங்கங்களின் முக்கியத் தலைவர்களான அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியருடன் நட்பு கொண்டனர். தலித்துகளின் விடுதலை குறித்துச் சிந்தித்த இவர்கள் இந்துமதத்தை வெறுத்தனர். தலித்துகள் இந்துக்கள் அல்லர் என்பதை, “இந்துக்கள் அனுசரிக்கும் நாலு வர்ணங்களிலொன்றிலேனும் சேர்ந்திராததால் தாழ்த்தப்பட்டோர் இந்துக்கள் அடக்கத்திலில்லை” என இரட்டைமலை சீனிவாசன் கூறுவது இதற்குச் சாட்சி. இவருக்கு பிளாவட்ஸ்கி, ஆல்காட் ஆகியோருடன் 1882ஆம் ஆண்டு நட்பு ஏற்பட்டபோதிலும் அவர்கள் பெளத்தத்தைத் “தாழ்த்தப்பட்ட சமூகத்தில் நுழைக்கத் தொடங்கியதால்” அதை எதிர்த்தார். மதமாற்றம் “சமூகத்தில் பிரிவினையுண்டாகும்” எனக் கருதினார் அவர். அவருடைய “சமூகப் பிரிவினை” என்ற ஊகம் மட்டும் பெளத்த மறுப்புக்குக் காரணமாக இருக்க இயலாது. ஏனென்றால், அவர் ‘ஊகத்தால் மட்டும் எந்த முடிவையும் எடுக்கும் ஆளுமை அல்லர்’. நீலகிரியில் பணியாற்றிய காலத்தில் “தீண்டாமை என்பதை எப்படி ஒழிப்ப தென்னும் கவலை எனக்குள் ஓயாமலிருந்தது” எனக் குறிப்பிடும் இரட்டைமலை சீனிவாசன்
ஆராய்ச்சி மூலம் முடிவெடுக்கும் பண்பு கொண்ட இரட்டைமலை சீனிவாசன் ஊகத்தால் பெளத்தத்தைப் புறக்கணிக்க நிச்சயம் வாய்ப்பு இல்லை. அதற்காகவும் அவர் ஆராய்ச்சி செய்தது திண்ணம். இதற்குச் சாட்சி சுமார் 118 ஆண்டுகளுக்கு முன்னர் இரட்டைமலை சீனிவாசன் எழுதிய இரங்கோன் சுயதேக்கன் கோபுர சரித்திரம் நூல்.
இந்துமதப் படிநிலைச் சாதியின் தீண்டாமைச் சிறையிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள பெளத்தம் தழுவல் குறித்து தலித்துகள் உரையாடினர். அயோத்திதாசர் தலைமையில் சிலர் பெளத்த ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தனர். கர்னல் ஆல்காட்டுடன் நிகழ்ந்த உரையாடலைத் தொடர்ந்து 1898ஆம் ஆண்டு அவர் தன்னுடன் பி. கிருஷ்ணசாமியையும் அழைத்துக் கொண்டு கொழும்புக்குப் பயணித்தார். தமிழ்ப் பெளத்தம் குறித்து அயோத்திதாசர் தான் நடத்திய தமிழன் பத்திரிகையில் எழுதினார்; நூல் வெளியிட்டார். பெளத்தச் சங்கத்தைச் சேர்ந்தோரும் எழுதினர். அவர்களில் ஏ.பி.பெரியசாமி புலவர் குறிப்பிடத்தக்கவர். இவர் பெளத்தத்தைப் போற்றி வெளியிட்ட குறு நூல் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. இதில் பூலோகவியாசன் பத்திராதிபர் பூஞ்சோலை முத்துவீர நாவலர், மஹாவிகட தூதன் பத்திராதிபர் சுவாமிக்கண்ணு புலவர் ஆகியோரும் எழுதியுள்ளனர். அயோத்திதாசர் மறைந்த பின்னரும் அவருடைய வழித்தோன்றல்கள் பெளத்தம் குறித்து அவர் எழுதிய நூலை வெளியிட்டனர். இந்தப் பிரிவினரைப் பெளத்தச் சிந்தனைப் பள்ளி என வரையறை செய்யலாம். இந்தச் சிந்தனைப் பள்ளி அன்றைய காலங்களில் வலுவாக வேரூன்றியது.
இரட்டைமலை சீனிவாசன் பெளத்தச் சிந்தனைப் பள்ளியின் மீது பற்றற்று இருந்தார். தலித்துகளில் ஒரு பிரிவினர் பெளத்தத்தைப் பற்றிக் கொள்கிறபோது அது குறித்து அறியாமல் எதிர்க்கக் கூடாது என்ற முடிவை இரட்டைமலை சீனிவாசன் எடுத்திருக்கலாம். பெளத்தத்தை அறிவதற்காக அயோத்திதாசர் கொழும்புக்குச் சென்றபோது இரட்டைமலை சீனிவாசன் பர்மாவுக்குப் பயணித்தார். இது குறித்து எந்தப் பதிவுகளும் அவர் எழுதிய ஜீவிய சரித்திரச் சுருக்கம் நூலில் இல்லை. இரங்கோன் சுயதேக்கன் கோபுர சரித்திரம் நூலிலிருந்துதான் அறிய முடிகிறது. இந்நூல் 1899ஆம் ஆண்டு வெளியானது.
இரட்டைமலை சீனிவாசன், “இரங்கோன் சுயதேக்கன் கோபுர சரித்திரம்” நூல் எழுதுவதற்காக எழுதப்பட்ட ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டதோடு பர்மாவுக்குச் சென்று கள ஆய்வும் செய்தார். ‘உள்ளதை உள்ளவாறு விவரித்தல்’ என்ற வரலாறு எழுதும் முறையியலைப் பின்பற்றி அந்த நூலை எழுதினார். ஆசிய நாடுகளில் பெளத்தர்களிடம் முக்கியத்துவம் பெற்றிருக்கும் அந்தக் கோபுரம் குறித்த தப்பெண்ணங்களை நேர்செய்தலே நூலின் நோக்கம் எனக் கூறுகிறார். உண்மையில், அதுதான் அவருக்கு நோக்கமா? அவருடைய உண்மையான நோக்கம் வேறு என்பதை அந்த நூல் தெரிவிக்கிறது.
ஆக இப்புத்தகம் இரட்டைமலை சீனிவாசனின் மதநிலைப்பாடு பற்றி விவரிக்கிறது.
இப்புத்தகத்தின் பொருளடக்கம்
முன்னுரை
1. இரட்டைமலை சீனிவாசனின் மதநிலைப்பாடு: கோ. ரகுபதி
2. இரங்கோன் சுயதேக்கன் கோபுர சரித்திரம்- இரட்டைமலை சீனிவாசன்
பிண்ணிணைப்புகள்
1. புத்த பகவான் ஸ்தெளத்யப் பத்து கீர்த்தனைகள்- A.P. பெரியசாமிப் புலவர்
2. ஆதிதிராவிடர் ஒற்றுமைக்கு ஆபத்து
3. பெளத்த நூற்பட்டியல்