உலகச் சீர்குலைவு ஒன்று புதிதாகத் தலைதூக்குகிறது. இதில் இயற்கை வளங்களுக்காக நடத்தப்படும் போர்கள் அவசரமாக முக்கியத்துவம் கொள்கின்றன. இந்த வளங்களைக் கைப்பற்றுவதில் உலகின் சக்திவாய்ந்த அரசுகள் மேற்கொள்ளும் தன்னிச்சையான இராணுவ பலத்துடன்கூடிய அயல்நாட்டுக் கொள்கைகள் எண்ணெயின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. உலகின் தென்பகுதியில் உள்ள எண்ணெய் வளமிக்க நாடுகள் தங்களின் இறையாண்மை, பண்பாட்டு ஒற்றுமை, மனித உரிமைகள், அழிவின் விளிம்பிலிருக்கும் சுற்றுப்புறச் சூழல் போன்றவற்றைக் காப்பாற்ற இந்தப் போரில் கட்டாயப்படுத்தி இழுக்கப்படுகின்றன.
எண்ணெய் அரசியல்
உலகின் எண்ணெய் வளமிக்க நாடுகளில் அமெரிக்க அரசாங்கம் திணிக்கும் இராணுவ, பொருளாதாரக் கொள்கைகளை விரிவாக ஆராய்கிறது. குறிப்பாக, சமூகப் பொருளாதாரம், மனித உரிமைகள் ஆகியவற்றில் இக்கொள்கைகள் ஏற்படுத்தும் விளைவுகளையும், உலகின் தென் பகுதியில் உள்ள எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் மக்களிடையே அது ஏற்படுத்தும் விளைவுகளையும் ஆராய்கிறது. உலக மக்கள்தொகையில் 4 சதவீதமே கொண்ட அமெரிக்கா உலகில் தயாரிக்கப்படும் எண்ணெய் வளத்தில் 25 சதவீதத்தைத் தனக்கே எடுத்துக்கொள்கிறது. எரிசக்திக்கான தாகம் அண்மை பத்தாண்டுகளில், அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கையைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கேற்கிறது. எண்ணெய் கிடைக்கும் என்று நம்பத்தகுந்த இடங்களைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஆசை ஜார்ஜ் புஷ் அரசின் வெளிநாட்டுக் கொள்கையைத் தீர்மானிப்பதில் முந்தைய அரசுகள் காட்டியதைவிட மிகப் பெரிய பங்கு வகித்திருக்கிறது.
இராக், மத்திய ஆசியா, மேற்கு ஆப்பிரிக்கா, கொலம்பியா, வெனிசுலா போன்ற நாடுகளில் அமெரிக்கா வகிக்கும் பங்கை வெளிச்சமிட்டுக் காட்டுவதன் மூலம் இந்தப் புத்தகம் எரிசக்திக்காக அமெரிக்கா காட்டும் ஆர்வம், பயங்கரவாதத்துக்கு எதிரான போர், உலகமயமாக்கல், மனித உரிமை அத்துமீறல்கள் போன்றவற்றுக்கும், உலகில் எல்லோரும் ஆர்வமுடன் நாடும் வளங்களை நிரம்பப் பெற்றுள்ள தென்பகுதி மக்களுக்குமிடையே உள்ள தொடர்பை நிரூபிக்கிறது.