வால்மீகி இராமாயணத்தில் செய்யப்பட்ட பல இடைச்செருகல்களை சுலோகங்களின் அளவு, வகைமையை வைத்தே அம்பலப்படுத்துகிறார்.
ஆதிக்க வர்க்க கருத்தியலான பிராமணியம், பேரரசுகளின் ஆதரவு கருத்தியலாக, பிரபுத்துவமாக பரிணமித்தது. அப்போது அதற்கு, பெரும்பகுதி உழைக்கும் மக்களை கருத்தியல் ரீதியாக கவ்வி, உட்பட செய்தல் பெரும் தேவையாக இருந்தது. வேதங்களில், பிராமணங்களில், ஆரண்யகங்களில், உபநிடதங்களில், தர்ம சாத்திரங்களில், சூத்திரங்களில் சமஸ்கிருத மொழியில், ஒரு சிலருக்கு மட்டுமானதாக இருந்த பிரமணிய கருத்தியல் பரவலாக்கப்பட வேண்டிய தேவை ஏற்பட்டது. இதன் பகுதியாகவே, இந்த கருத்தியலை கதைவடிவில் உள்ளடக்கிய இதிகாச புராணங்கள் தோன்றின. கருத்தியல் விரிவாக்கத்தை நோக்கமாகக் கொண்டே, பேரரசர், பிரபுத்துவ ஆதரவுடன் அவை பிரதேச மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்டன. உட்படுத்துதல் தேவையை முன்னிட்டே இடைச்செருகல்கள் இடம் பெற்றன.
உழைக்கும் மக்களை பலன் எதிர்பாராத சேவைக்கு உட்படுத்த வேண்டியே, ஒரு முன்மாதிரி சேவகன் உருவாக்கப்படுகிறான். இராமனுக்கு சேவை செய்வதே தனது பிறவி இலக்காகக் கொண்ட அனுமன் என்கிற முன்மாதிரி சேவகன் பிற்கால இராமாயணங்களில் படைக்கப்படுகிறான். அந்த முன்மாதிரி சேவகன் ஒவ்வொரு கிராமத்தின் நுழைவாயிலில் முதல் கடவுளாக நிறுத்தப்படுகிறான்.
ஒரு மலை உச்சி சமவெளியில் இருந்த லங்கா, தென்கோடி இராமேஸ்சுவத்திற்கு அருகில், கடலில் இருக்கும் ஒரு தீவான இலங்கையாக இடைச்செருகல்கள் மூலம் பிற்கால இராமாயணங்களில் இடம் பெற்றதில் சோழ பேரரசின் அரசியலை ஆசிரியர் அம்பலப்படுத்துகிறார். அன்றுதொட்டு இராமாயண அரசியல் தொடர்கின்றன. நவீன காலத்தில், காந்திய அரசியலில் இராம ராஜ்ஜியம் என ஒரு கனவு அரசு, குழப்பமாக பேசப்பட்டது. இராம ஜன்மபூமி என அயோத்தி பிரச்சனை அரசியலாக்கப்பட்டு, பாபர் மசூதி இடிக்கப்பட்டது. தமிழர்களின் கனவு திட்டமாக இருந்துவந்த சேது சமுத்திர திட்டத்தை எதிர்க்க, அங்கே இராமர் கட்டிய பாலம் இருப்பதாகக் கூறி, இந்து வகுப்புவாதிகள் அதை அரசியலாக்கி, பிறகு அந்த திட்டத்தை பாதியில் நிறுத்திவிட்டார்கள்.
இராமாயண அரசியலை பயன்படுத்தி இந்து வகுப்பு வாதம் ஆளும் கட்சியாக வளர்ந்த நிலையில், இராமாயண மூலத்தையும், அதன் அரசியலையும் நேர்மையாக அம்பலப்படுத்தும் இந்த ஆய்வு நூல், மிக தாமதமாக தமிழுக்கு வந்தாலும் சம காலத்திற்கு மிகவும் தேவையானதே. இந்த ஆய்வுகளை மேலும் முன்னெடுத்துச் சென்று இந்து வகுப்புவாதத்தை கருத்தியல் ரீதியாக எதிர்க்கொள்ள இந்த சிறு முயற்சி பயன்படும் என எதிர்ப்பார்க்கிறோம்.