தமிழ்நாட்டின் மறவர்சமுதாயத்தினர், ஏறத்தாழ இரண்டாயிரம் காலத்திலிருந்தே, ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, சங்க சேர, சோழ, பாண்டியர் என மூவேந்தர்களாகவும், முத்தமிழ்க் காவலர்களாகவும் இருந்து பழந்தமிழ் நாட்டையும் நாட்டு மக்களையும் ஆட்சி புரிந்து வந்துள்ளனர். மூவேந்தர்களுக்கும் அரசியல் ஆலோசகர் களாகவும், படைத்தலைவர்களாகவும், நால்வகைப் படை வீரர்களாகவும் இருந்தவர்களும் மறவர்களே. குறுநிலத் தலைவர்களில், சிற்றரசர்களில் பெரும்பாலானோர் மறவர்களே. இந்த நிலை பதினேழாம் நூற்றாண்டு வரையிலும், இடையிடையே அன்னியர் ஆதிக்கம் இருந்த போதிலும் நீடித்தது. இந்தியாவில் ஆங்கிலேயர் எப்போது நுழைந்தனரோ, அப்போதிருந்தே மறவர்கள் கொத்தடிமைகள் ஆக்கப்பட்டனர். குற்றப் பரம்பரையினர் என முத்திரை குத்தப்பட்டனர்.
“மண்வெட்டிக் கூலி தின்னாலச்சே – எங்கள் வாள்வலியும் தோள்வலியும் போச்சே” என்று மறவர் வருந்திப் பாடுவதாகப் பாரதி பாடினானே அந்த நிலை பத்தொன்பதாம் நூற்றாண்டிலும், இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் மறவர்களுக்கு இருந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், இப்போதுதான் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர். புறநானூற்றுப் போர் மறவன், தாய் வயிற்றிலிருந்து வெளியே வரும்போதே வீரம், விவேகம், வெற்றி, வள்ளல்தன்மை, நீதி என்ற கிரீடத்தையும் அணிந்து கொண்டேதான் வந்தான். பாண்டிய அரசன் ஒருவனுக்கு சங்கப் புலவர் ஒருவர் கீழ்க்கண்டவாறு அறிவுரை கூறுகிறார். பாண்டியன் நன்மாறனே! நீ வலிமையான நால்வகைப் படைகளையும் பெற்றிருப்பது பெருமையாகத்தான் இருக்கிறது ஆனால் அதனைவிடப் பெரியது எது தெரியுமா? ‘அறநெறி முதற்றே அரசின் கொற்றம்’ என்பதாகும். அதனால், நம்மவர் என்று அறங்கோணாது, அயலார் என்று அவர்தம் நற்குணங்களை வெறுத்து அவரைக் கொல்லாது நடுநிலையோடு ஆட்சி செய்க என்று மருதன் இளநாகனார். பாண்டிய அரசனுக்கு நீதிக் கலையை அறிவுறுத்துகிறார். (புறநா. 55).
நீதிமன்ற பரிபாலனத்தில் தலைமை முன் மாதிரியாக இருக்க வேண்டும் கொற்கைப் பாண்டியன் வரலாறு ரத்த சாட்சியாக எடுத்துரைக்கிறது. பொற்கைப் பாண்டியனைக் கொற்கைப் பாண்டியன் என்று கூறுவதும் உண்டு.
சங்க காலத்து மறக்குடி மறத்தியரான வீரத்தாய்மார்கள், நாட்டு நலனுக்காக, நாட்டையாளும் அரசனின் வெற்றிக்காக போரில், பெற்ற தந்தைமார்களையும், உடன் பிறந்த தமையன்மார்களையும், கட்டிய கணவரையும், பெற்றெடுத்த வீரப் புதல்வர்களையும் இழந்து விதவைக் கோலத்தில் தனிமரமாய் நின்றாலும், தன் உற்றார் உறவினர் நாட்டுக்காக, நாட்டையாளும் நல்லரசனுக்காக போரில் விழுப்புண்பட்டு வீரமரணம் எய்திய தியாகத்தை நினைந்து பெருமைப்பட்டனர். கவலை கொள்ளவில்லை.