இந்தியா மீது 17 முறை படையெடுத்த கஜினி முகமது, சோமநாதர் ஆலயத்தை கி.பி 1026-ல் தாக்கிக் கொள்ளையடித்த சம்பவம் வரலாற்றுப் பாடம் வழியாக நமக்குப் பள்ளிப் பருவத்திலேயே பரிச்சயமானதுதான். நவீன இந்திய வரலாற்றின் மீதும் அரசியலின் மீதும் மீண்டும் மீண்டும் தாக்கம் ஏற்படுத்தும் நினைவாக, வெகுமக்கள் மனதில் பதிந்துபோன ஒரு கதையாக சோமநாதர் ஆலயத் தாக்குதல் இருக்கிறது. இந்தியா சுதந்திரம் பெற்றவுடன், சோமநாதப் படையெடுப்பு நாடாளுமன்றத்திலேயே பேசுபொருளாக்கப்பட்டது. 1951-ல் சோமநாதர் ஆலயம் புனரமைக்கப்பட்டது.
கஜினி முகம்மதின் ஆலயத் தாக்குதலுக்குப் பதிலடி என்று சொல்லப்பட்டு 1990-ல் சோமநாத்திலிருந்து அயோத்தி நோக்கி அத்வானியால் தொடங்கப்பட்ட ரதயாத்திரைதான் பாபர் மசூதி தகர்ப்புக்கும், நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சி பெற்ற செல்வாக்குக்கும் காரணமானது. சோமநாதர் படையெடுப்புப் பின்னணி குறித்து மதச்சார்பற்ற வரலாற்று ஆய்வாளர்கள் கடந்த சில தசாப்தங்களாகப் பல்வேறு மாற்றுக் கருத்துகளை முன்வைத்துள்ளனர். இச்சூழலில், நிகழ்காலத்தையும் அதிரச் செய்துகொண்டிருக்கும் இந்த வரலாற்றுச் சம்பவத்தைப் பற்றி பல்வேறு சமயத்தினரின் வெவ்வேறு மொழிகளில் எழுதப்பட்ட கல்வெட்டுகள், பயணக் குறிப்புகள், வாய்மொழி வரலாறுகளை ஆராய்ந்து மிக விரிவாக வரலாற்றாய்வாளர் ரோமிலா தாப்பர் எழுதிய ‘சோமநாதா: த மெனி வாய்ஸஸ் ஆஃப் எ ஹிஸ்டரி’ என்ற நூலின் சுருக்கம் இது. இதைச் சுருக்கித் தமிழில் தந்துள்ளார் சஃபி.சோமநாதர் ஆலயம் மீது தாக்குதல் நடந்தது உண்மைதான் என்று கூறும் ரோமிலா தாப்பர், கஜினியின் தாக்குதலுக்குப் பின்னணியாக சமயப் பகையோ மதரீதியான மேலாண்மையோ மட்டும் காரணமாக இருந்திருக்க முடியாது என்று வாதிடுகிறார். அத்துடன் சோமநாதர் ஆலயம் தாக்கப்பட்டதே தவிர நிர்மூலம் ஆக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை என்பதையும் குறிப்பிடுகிறார். அத்துடன் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு சமயத்தவர்களால் சோமநாதர் ஆலயம் பராமரிக்கப்பட்டுவந்ததன் ஆதாரங்களையும் இந்நூலில் நிறுவுகிறார்.
அத்துடன் அத்தாக்குதல் போரில் நிகழ்ந்த மரணங்களின் எண்ணிக்கையும் கொள்ளையடிக்கப்பட்ட செல்வத்தின் மதிப்பும் புலவர்களின் மிகு புகழ்ச்சிக்காகக் காலப்போக்கில் அதிகரிக்கப்பட்டுவிட்டன என்பதையும் ரோமிலா தாப்பர் இப்புத்தகம் வழியாக நிறுவுகிறார். அத்துடன் மத்திய ஆசியா முழுவதையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைத்த ஷன்னி பிரிவைச் சேர்ந்த இஸ்லாமியரான முகம்மது கஜினி, ஷியா பிரிவைச் சேர்ந்த மன்னர்களின் வழிபாட்டு இடங்கள் மீதும் தாக்குதல் நடத்தியிருப்பதை ஆதாரங்களுடன் குறிப்பிடுகிறார்.சோமநாதர் ஆலயத் தாக்குதல் சார்ந்து துருக்கிய, பாரசீக ஆவணக் குறிப்புகளை மட்டுமே கொண்டு காலனிய ஆய்வாளர்கள் உருவாக்கிய சோமநாதர் படையெடுப்பு தொடர்பான விவரங்களை ரோமிலா தாப்பர் கேள்விக்குட் படுத்துகிறார். ஜேம்ஸ் மில் போன்ற ஆங்கிலேயர்கள் இந்திய வரலாற்றை இந்து, முஸ்லிம், பிரிட்டிஷ் என்று மூன்று காலகட்டங்களாகப் பிரித்து பிரிட்டிஷ் ஆட்சியாளர்களைத் தரப்படுத்தியதாகவும் ரோமிலா தாப்பர் விமர்சனத்துக்குள்ளாக் குகிறார். சமணப் பண்டிதர்கள் எழுதிய குறிப்புகள், சமஸ்கிருதக் கல்வெட்டுகள், உள்ளூர் வழக்காறுகள் ஆகியவை சோமநாதர் ஆலயப் படையெடுப்பு பற்றி எழுதிய வரலாற்றாசிரியர்களால் பொருட்படுத்தப்படவேயில்லை என்கிறார். அத்துடன் சோமநாதர் ஆலயப் படையெடுப்புக்கு முன்னரும் பின்னரும் அப்பிராந்திய மக்களின் வணிக உறவுகள் மற்றும் வாழ்க்கை நிலை, ஆட்சி நிர்வாகம் பற்றிய சுவாரசியமான தகவல்களையும் இந்நூல் கொண்டுள்ளது. இதன் வழியாகக் கடந்த கால வரலாறு ஒரு திரைப்படக் காட்சி போல நம்முன்னர் விரிகிறது.
நவீன இந்தியாவில் இந்து, முஸ்லிம் மக்களின் நல்லிணக்க வாழ்வுக்குப் பெரும் அபாயத்தையும் மோதல்களையும் ஏற்படுத்தும் குறியீடாக சோமநாதர் ஆலயத் தாக்குதல் சம்பவம் உள்ளது. அந்தத் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியை ரோமிலா தாப்பர் பல தரவுகளுடன் இந்நூலில் பரிசீலிக்கிறார். கஜினியின் தாக்குதலுக்கு முன்னரும் பின்னரும் சாதாரண இந்து மக்களும் இஸ்லாமியரும் அந்தப் பிராந்தியத்தில் மிகுந்த நல்லிணக்கத்துடன்தான் இருந்துள்ளனர் என்ற குணமூட்டும் செய்தியை இந்நூல் மூலம் ஆசிரியர் சொல்கிறார். இறந்த காலத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் இழப்புகளுக்காகத் தற்காலத்தில் பலிகோருவதற்கு வரலாறு ஒரு எளிய கதை அல்ல என்பதை ரோமிலா தாப்பர் இந்தப் புத்தகம் வழியாக நிர்மாணிக்கிறார்.ஒரு இறந்தகாலச் சம்பவம், கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டு களுக்குப் பின்னரும் பின்விளைவுகளையும் அதிர்வுகளையும் ஏற்படுத்திக்கொண்டே இருக்க முடியும் என்பதற்கான உதாரணம் சோமநாதர் ஆலயப் படையெடுப்பு. வரலாறு எழுதுதல் என்பது எத்தனை நேர்மையும் கடப்பாடும் கொண்ட பணி என்பதை இந்த நிகழ்வினூடே நமக்குச் சுட்டிக்காட்டுகிறது இந்த நூல்.
எழுத்தாளர்: Kamalaalayan|Romila Thappar
பக்கங்கள்: 328
பதிப்பு – முதற் பதிப்பு – 2017
அட்டை – காகித அட்டை