ஓர் இலக்கணநூலின் விதிகள் ஒரு குறிப்பிட்ட காலத்தைச் சேர்ந்த இலக்கியங்களில் எவ்வகையில் பொருந்தி வந்துள்ளன என்பதனை ஆய்தல் என்பது பல்வேறு வகையிற் பயன்தரக்கூடியதாகும். அவ்வகையில் இடைச்சங்ககால இலக்கண நூலான தொல்காப்பியத்தைச் சங்க இலக்கியப்பாடல்களோடு ஒப்பிட்டு ஆய்வதன்வழிப் பல புதிய முடிவுகளைக் காணலாம். தொல்காப்பியத்தின் பழமை, சங்க கால இலக்கண விதிகளின், மொழிநிலை வளர்ச்சி, சொற்பெருக்கம் ஆகியவற்றை இவ்வாய்வு நூலின்வழித் தெளிவு செய்துள்ள முறையில் காணலாம். சங்க இலக்கியங்களுக்கும் தொல்காப்பியத்திற்கும் இடையேயான கால இடைவெளியினை அறிதலுக்கான ஆய்வுகளினை முன்னெடுப்பதற்குச் சிறந்த கருவூலமாக இந்நூல் அமைந்துள்ளது.
இந்நூல், தொல்காப்பியத்தின் சிறப்புப்பாயிரம் தொட்டு எழுத்து, சொல், பொருள் என்னும் முப்பாற்பிரிவுகளுடன் சங்க இலக்கியங்களைப் பொருத்திக் காணும் ஒப்பீட்டு நூலாகின்றது. இலக்கணவிதிகளின் பொருத்தப்பாட்டோடு தொல்காப்பிய உரையாசிரியர்களான இளம்பூரணார், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையர், சேனாவரையார், கல்லாடனார், பேராசிரியர் முதலானவர்களின் கூற்றுகளும் அவர்களது மேற்கோள்களும் தொல்காப்பிய – சங்க இலக்கிய ஒப்பீட்டு நிலையில் எவ்வகையான நோக்கினைக் கொண்டிருந்தன எனும் அடிப்படையில் அமைக்கப்பட்ட இந்நூலின் ஆய்வுப் போக்கானது சிறப்பிற்குரியதாகின்றது.
இந்நூலில் சங்க இலக்கியத்தில் பயிலாத தொல்காப்பியச் சொற்களும், விதிகளும் பட்டியலிட்டமைக்கு ஒப்பவே தொல்காப்பியர் காலத்திற்குப் பிற்பட்டுச் சங்க காலத்தில் ஏற்பட்ட விதிமாறுதல்களும் புதுமைகளும் சுட்டப்பட்டுப் பட்டியலிட்டுள்ளமை சிறப்பிற்குரியனவாம். இதன் வழித் தொல்காப்பியத்தின் பழமையும், சங்க இலக்கியங்களின் பழமையும் மேலும் மேல்நோக்கிச் செல்வதினையும், தொல்காப்பிய-சங்க இலக்கியக் கால இடைவெளி மேலும் விரிவடைதலையும் காணலாம். இவ்வாய்வு நூல், பல ஆய்வுகளுக்கு முன்னோடியாக அமையும் சிறப்பிற்குரியது.