முகப்புரை
நாட்டுப்புறவியல் என்பது மரபுகள், வழக்கங்கள், நம்பிக்கைகள், சடங்குகள், நாட்டுப்புற இலக்கியங்கள் ஆகியவை நாட்டுப்புற மக்களிடம் மட்டுமின்றி நகர்ப்புற மக்களிடமும் எப்படி உள்ளன என்பதைப் பற்றி ஆராய்வதை நோக்கமாகக் கொண்டதாகும்! நாகரிக சமுதாயம், நாகரிகமற்ற சமுதாயம், படித்த சமுதாயம், படிக்காத சமுதாயம் என்ற எந்தவிதமான வேறுபாடின்றி அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்வியல் வழக்காறுகளை நாட்டுப்புறவியல் உள்ளடக்கியதாகும். அதைப் பழக்கவழக்கங்கள், கலைகள், தொழில்நுட்பம், மருத்துவம், இலக்கியம் ஆகிய ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கலாம். இலக்கியமென்பது பாடல்கள், கதைகள், பழமொழிகள் போன்ற பகுப்பைக் கொண்டவையாகும். இவ் வியலில் முக்கியத்துவம் கருதிப் பாடல்களின் வகைகள் அவற்றில் தொழில்பாடல்கள் பெறும் இடமும், தொழில் பாடல்களில் களப்பகுதி மீனவர் பாடல்கள் பெற்றுள்ள சிறப்புகளும் ஆராயப் பெறுகின்றன.
2.2. பாடல்கள்
நாட்டுப்புறப் பாடல்கள் எளியவை; பகட்டில்லாதவை; பொய்க்கலப்பில்லாதவை; பரிசுத்தமானவை; நேரானவை; உள்ளத்தை ஈர்க்கும் இனிமையும் இசைப் பொலிவும் நிறைந்தவை; செழுமையின் மனோபாவமும் கற்பிக்கப்படாத கட்டுப்பாடற்ற கற்பனையும் கொண்டவையாகும்.’ இப்பாடல்களைக் கதைப் பாடல்கள், தனிப்பாடல்கள் என இருபிரிவாகப் பிரிக்கலாம். ஒரு நீண்ட கதை பாடலாகப் பாடப்படும்போது அது கதைப்பாடலாக அமைகின்றது. இவை பெரும்பாலும் தனி நபர் வரலாறுகளை மையமாக வைத்துப் பாடப்படுபவையாகும். தனிப்பாடல் என்பது அன்றாடம் மக்கள் தம் வாழ்க்கையில் சந்தித்த நிகழ்வுகளை மையமாக வைத்துப் பாடப்படுவதாகும். இதில் பெரும்பகுதி மக்களின் வாழ்க்கைச் செய்திகள் உதிரிகளாக இடம்பெறுகின்றன. இவற்றின் வகைகள் குறித்துத் தொடர்ந்து காணலாம்.