இரும்புத் தொழில்நுட்பத்தின் வாயிலாக வேளாண்மைத் கருவிகளும், தற்காப்பு மற்றும் தாக்குதல் ஆயுதங்களும் உருவாக்கப்பட்டன. வேளாண்கருவிகள் மூலம் பெற்ற உணவு உற்பத்தி பெருக்கம் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியிக்கு அடிகோலியது. வேளாண் உற்பத்தியானது வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் செழுமைக்கு வித்திட்டது. இரும்புத் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் சமகாலத்திய வாழ்க்கையை முழுமையாக மாற்றியது. முதன்முறையாக, மயிலாடும்பாறை அகழாய்வு மூலம் பெற்ற காலக்கணிப்பு தமிழ்நாட்டில் 4200 ஆண்டுகளுக்கு முன்னரே இரும்பு அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது என்ற செய்தியினை அளித்துள்ளது. இந்த முக்கிய சான்றினை பொது மக்களிடம் கொண்டு செல்வது அரசின் கடமை என எண்ணினோம். இந்த சிந்தனையின் வெளிப்பாடே இச்சிற்றேடு தற்பொழுது உங்கள் கைகளில் தவழ்கிறது. தமிழக அரசு பல்வேறு அகழாய்வுத் திட்டங்களின் மூலம் நமது கடந்த கால மாண்பினை வெளிக்கொணர அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறது, மேலும், அறிவியல் தரவுகளின் மூலம் பெறும் ஆய்வு முடிவுகளை பொதுமக்களுக்கும் இளைய தலைமுறையினருக்கும் வழங்குவதன் மூலம் அவர்களின் கல்வியறிவினை மேலும் மெருகேற்ற முயல்கிறது என்பதைச் சொல்லத் தேவையில்லை.
மயிலாடும்பாறை அகழாய்வு பற்றிய இந்த சிற்றேடு உங்கள் இதயத்தின் உணர்வுகளை உரசி பெருமை மிகு கடந்த காலத்தை புரிந்து கொள்ளவும், பண்பட்ட பழமையை புரிந்து கொள்ள வேண்டும் என்ற உங்களின் தீராத தாகத்திற்கும் துணைபுரியும் என்று நாங்கள் நம்புகிறோம். – அமைச்சர். தங்கம் தென்னரசு
——–
கிருஷ்ணகிரிமாவட்டம் பர்கூர் வட்டத்திலுள்ள தொகரப்பள்ளிகிராமத்திலிருந்து 3 கி.மீ. மேற்கே உள்ள மலையடிவாரத்தில் மயிலாடும்பாறை என்னும் சிற்றூர் அமைந்துள்ளது. தர்மபுரிப் பகுதியில் 9600 சதுர மீட்டர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்ட விரிவான தொல்லியல் களஆய்வில் பழையகற்காலம் தொடங்கி வரலாற்று இடைக்காலம் வரையிலான காலக்கட்டத்தைச் சார்ந்த வளமானத் தரவுகள் கிடைத்தன. பேராசிரியர் கா. ராஜன் 1989-ஆம் ஆண்டு மேற்கொண்ட தொல்லியல் கள ஆய்வில் இரண்டு பழையகற்கால இடங்கள், ஐந்து புதியகற்கால இடங்கள், 170 இரும்புக்கால இடங்கள் மற்றும் குறிப்பிடத்தக்க அளவிலான வரலாற்றுக்கால இடங்களும் வெளிக்கொணரப்பட்டன. அத்துடன் பத்துப் பாறைஓவியங்களும் தொடக்க மற்றும் இடைக்காலத்தைச் சார்ந்த 125 நடுகற்களும் கண்டறியப்பட்டன. அவற்றுள், இப்பகுதியிலுள்ள முக்கியத் தொல்லியல் தளங்களில் ஒன்றான மயிலாடும்பாறையில் நுண்கற்காலம் முதல் தொடக்க வராலாற்றுக்காலம் வரையிலான பண்பாட்டுத் தொல்பொருட்கள் கிடைத்துள்ளன