(தமிழில் – ப.ஜெகநாதன், சு.தியோடர் பாஸ்கரன்); பக். 230;
இந்த நூலில் ஆசிரியரின் கவனம் போர் யானைகளைப் பற்றியது.
காலாட்படை, குதிரைப்படை, தேர், இவற்றுடன் யானைப்படையும் ஒன்றாக இருந்தது. ஒரு காலகட்டத்தில் இந்திய மன்னனின் படையில் குதிரைகளைவிட யானைகள் மிகுந்திருந்தன. குதிரையை இறக்குமதி செய்தாக வேண்டும். ஆனால் முதிர்ந்த யானைகளைக் காட்டிலிருந்து பிடித்துக் கொண்டுவந்து பழக்கினார்கள்.
ஏறக்குறைய மூவாயிரம் ஆண்டுகளாக யானைகள் ஆசியாவின் பல போர்க்களங்களிலும் இயங்கின. முற்றுகையிடுதலிலும் கோட்டைக் கொத்தளங்களைத் தாக்குவதிலும் யானைகள் முக்கியப் பங்காற்றின. அரசர்கள் யானையின் சிறப்பை உணர்ந்திருந்ததால் காடுகளைப் பாதுகாப்பதின் தேவையை அவர்கள் அறிந்திருந்தார்கள் என்கிறார் நூலாசிரியர். இந்தியாவிலிருந்து போர்யானை எவ்வாறு மேற்கு நாடுகளுக்கும், கிழக்கு நாடுகளுக்கும் பரவியது என்பதையும் டிரவுட்மன் விளக்குகிறார்.
கானுயிர்கள் குறித்து வெளிவந்துள்ள ஆய்வு நூல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு ஆவணப் பதிவாக வெளியாகியுள்ளது தாமஸ் ஆர்.டிரவுட்மனின் இந்நூல்.இந்தியாவில் உள்ள யானைகளின் உருவ அமைப்பு, குணாதிசயங்கள், பண்புகளை நூலில் விவரித்துள்ளார் அதன் ஆசிரியர்.
யானைகள் போருக்கு எவ்வாறு பயன்படுத்தப்பட்டன, பயிற்சிகள், காடுகளின் பாதுகாப்பு உள்ளிட்ட விவரங்கள் விரிவாக சான்றுரைக்கப்பட்டுள்ளன.ஆசிய யானைகளின் அழிவுக் காலம் இந்தியாவில் காலனி ஆதிக்கம் காலூன்றத் தொடங்கியதில் இருந்துதான் எனக் கூறும் தாமஸ் ஆர்.டிரவுட்மன், தந்தங்கள், தும்பிக்கைகள், பொழுதுபோக்கு ஆகியவற்றுக்காக ஓர் ஆகப்பெரிய உயிரினம் அழிக்கப்பட்ட கதையையும் எடுத்துரைக்கிறார். யானைகளுக்கு மதம் பிடித்தால்தான் அவை நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது என அர்த்தம் உள்பட பல அறியப்படாத தகவல்கள் இடம்பெற்றுள்ளன. சீனாவில் யானைகளை போருக்குப் பயன்படுத்தவில்லை;
காடுகள் அழிப்பால் அந்த உயிரும் அழிந்தொழிந்ததைப் பற்றியும் நூலில் பேசப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து யானைகள் மேற்கு, கிழக்கு நாடுகளுக்கு எவ்வாறு புலம்பெயர்ந்தன என்ற வரலாறும் உள்ளது. வாழ்விடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால் வனத்தை தொலைத்துவிட்டு திக்கின்றி நிற்கும் அந்த பிரமாண்ட உயிரினத்தின் ஈராயிரம் ஆண்டு கால பயணத் தடம் இந்நூல்.