கி.மு. 300ஆம் ஆண்டிலிருந்து கி.பி. 1200 ஆம் ஆண்டுவரை ஏறக்குறைய ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுக்காலம் பௌத்த மதம் தமிழர்கள் பேணிய முக்கிய மதங்களில் ஒன்றாக விளங்கி வந்திருக்கிறது. மணிமேகலை, குண்டலகேசி, உதயணன் காதை, பிம்பிசாரம், சித்தாந்தத் தொகை, சூடாமணி, திருப்பதிகம். வீரசோழியம் போன்ற பௌத்த காப்பியங்களைப் படைத்துத் தமிழ் பௌத்த அறிஞர்கள் தமிழன்னையை அழகூட்டிய காலம் அது!
பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கும் பௌத்தத்திற்குமிடையேயிருந்த தொடர்புகள் அற்றுப்போய் இன்று எட்டு நூற்றாண்டுகளாகிவிட்ட போதிலும் – கொல்லாமை, புலால் உண்ணாமை, கள்ளுண்ணாமை போன்ற பல வாழ்வியற் கோட்பாடுகளைச் சைவ மதத்திற்குக் கொடுத்துவிட்டே பௌத்தம் நம்மைவிட்டுப் பிரிந்துபோனது. பௌத்தத்தின் பெயரால் இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைத்த அட்டூழியங்களைத் தொடர்ந்து இன்றைய தமிழர்கள் பௌத்தத்தை ஒருவிதமான வெறுப்புணர்வுடன் பார்ப்பது தவிர்க்க முடியாதுள்ளது. ஆனால், அச் செயல்கள் பௌத்த மதக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்பதையும், வரலாற்றுக் காலத்தில் தமிழ் மக்கள் பௌத்தத்திற்களித்த கொடையையும், பெளத்தம் தமிழர் நாகரிகத்திற்களித்த பங்கையும் எடுத்துக் காட்டுவதே இந்நூலின் நோக்கமாகும்.