இலக்கிய மானிடவியல் (Literary Anthropology) என்பது பற்றிய ஒரு முறையியல், மானிடவியலர்கள், இலக்கியவாதிகள் ஆகியோரால் 1980களில்தான் அமெரிக்கா, இந்தியா, ஜெர்மனி, கனடா உள்ளிட்ட நாடுகளின் பல்கலைக்கழகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஃபெர்னாண்டோ பொயத்தோஸ், இலக்கிய மானிடவியல் குறித்த கருத்துருவத்தினை அறிமுகம் செய்து வைத்ததன் பின்னணியில் (1983) வேறு சில அறிஞர்களும் அந்நெறி முறையினைக் கையாண்டு உலகின் வெவ்வேறு மொழிகளில் வெளிவந்திருந்த இலக்கியப் படைப்புகளை குறிப்பாக நாவல்களை – ஆராய்ந்துத் தத்தம் கட்டுரைகளை எழுதி வெளியிட்டனர். அத்துடன், இலக்கிய மானிடவியலின் கருத்துருவம், முறையியல் உள்ளிட்ட கருத்துப்பரப்பை மையப்படுத்திய கூட்டு விவாதம் (symposium) ஒன்றும் 1983ஆம் ஆண்டு நடைபெற்ற ‘மானிடவியல் மற்றும் இன அறிவியலின் பதினொன்றாம் சர்வதேசக் காங்கிரசின் ஒரு பகுதியாக நடைபெற்றது. இலக்கிய மானிடவியல் பற்றிய கட்டுரைகளும், மேற்கண்ட கூட்டு விவாதங்களின் தொகுப்பும் ஃபெர்னாண்டோ பொயத்தோஸ் தொகுத்து வெளியிட்ட இலக்கிய மானிடவியல் (Literary Anthropology, 1988)இடம்பெற்றுள்ளன.