தேவாங்கர்களின் தாய்த் தெய்வ வழிபாடு
தேவாங்கர்கள் கன்னடம், தெலுங்கு மொழி பேசும் இரு பிரிவினராக வாழ்கின்றனர். இவர்கள் கர்நாடகத்திலிருந்தே தமிழகம் வந்தவர்களாதலால் கன்னடம் பேசுபவர்கள் மிகுதியான எண்ணிக்கை யினராக உள்ளனர். இன்று இவர்கள் அதிகமான எண்ணிக்கையில் வாழும் சேலம், கோயம்புத்தூர், போடி, சின்னாளபட்டி, அருப்புக்கோட்டை போன்ற நகரங்களில் சௌடாம்பிகை அம்மன் என்னும் பெண் தெய்வத்திற்குத் தனிக்கோயில் அமைத்து வழிபடுகின்றனர். இச்சௌடாம்பிகை அம்மன் என்பது மைசூரில் குடிகொண்டுள்ள சாமுண்டீசுவரியே. சிவபெருமானின் மனைவியான உமையன்னையின் மற்றொருபெயரே சௌடாம்பிகை அல்லது சாமுண்டீசுவரி என்பது. ஏழுகன்னியர்களில் ஏழாவதாக வைத்து எண்ணப்படும் சாமுண்டா என்னும் கோபக்குணம் கொண்ட காளியே இத் தெய்வம். கோயிலின் கருவறையில் தனிச்சிறப்புடன் பிரதிட்டை செய்யப்பட்டுள்ள இப்பெண் தெய்வத்தின் சைவத்தொடர்பைக் காட்டும் வகையில் கோயிலில் ஒருபுறம் இராமலிங்கேசுவரர் என்ற பெயரில் சிவலிங்கம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். எனவே இக்கோயில் பெரும்பாலும் இராமலிங்க சௌடாம் பிகை அம்மன் கோயில் என்றே அழைக்கப்பட்டு வருகிறது.
வணிகத் தொடர்பும் வழிபாடும் :
தேவாங்கர் இன மக்கள் மிகுதியாக வாழும் நகரங்களிலும், சில கிராமங்களிலும் சௌடாம்பிகை அம்மனுக்கென்று தனிக் கோயில் கட்டியுள்ளனர். அது வடக்கு நோக்கியே அமைந்துள்ளது. கருவறையில் சௌடாம்பிகை அம்மன் நின்ற நிலையில் சமபங்கமாக (நேராக வளைவுகள் எதுவும் இல்லாமல்) பிரதிட்டை செய்யப்பட்டுள்ளாள். நான்கு கைகளுடன் தலையில் கரண்ட மகுடம், காதுகளில் மகரக்குழையும், பத்ரகுண்டலமும் அழகு செய்ய வடிக்கப்பட்டுள்ளாள். இவ்வாறு சிலை பிரதிட்டை செய்யப்பட்டுள்ள கோயில்களில் தினந்தோறும் பூசாரிகளைக் கொண்டு பூசை செய்யப்படுகிறது. சில வசதியற்ற சிறு கோயில்களில் நாள் வழிபாடு தவறாமல் செய்ய இயலாது என்பதால் சிலை பிரதிட்டை செய்யப்படுவதில்லை. அதற்கு மாறாக மூங்கில் பெட்டி ஒன்றை வைத்து வழிபடுகின்றனர். இதற்கு ‘சுத்தியப்பெட்டி’ என்று அவர்கள் பெயரிட்டு அழைக்கின்றனர். இப்பெட்டியினுள் ஜமுதாடு என்னும் ஒரு குறுங்கத்தியும் (Dagger) துணியாலான சிறு பை ஒன்றும் வைக்கப்பட்டிருக்கும். இது இத்தேவாங்கர்கள் வணிகம் செய்தவர்கள் என்பதன் அடையாளமாகும். சிறு பை பசும்பை என்பதாகவும், ஜமுதாடு என்பது இடையில் செருகப்பட்டிருக்கும் ஓர் ஆயுதம் என்றும் கருத்தாகும். தமிழகத்தில் பல ஊர்களில் வணிகக் குழுவினர் தொடர்பான கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. கோவை மாவட்டம் எல்காம் வலசு, திண்டுக்கல மாவட்டம் ராஜாபுரம் போன்ற ஊர்களில் காணப்படும் வணிகக் குழுவினர் பற்றிய கல்வெட்டுகளில், வாள், கத்தி, சுருள்பட்டா, விளக்கு, உடுக்கை, பசும்பை, கலப்பை போன்ற பல்வேறு உருவங்களையும் செதுக்கியுள்ளனர். இவ்வணிகக் குழுவினரில் ஐந்நூற்றுவர், திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர், நானாதேசி, வளஞ்சியர். மணிக்கிராமத்தார், பெரு நிரவியார் எனப் பல பிரிவினர் இருந்துள்ளனர். இவர்களில் ஒரு பிரிவினராகத் தேவாங்கர்கள் திகழ்ந்திருக்கலாம். பல கல்வெட்டுகளில் ‘சிலை செட்டி’ எனும் ஒரு வகையினர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் சேலை செட்டி, சீலை செட்டி என அழைக்கப்பட்டுப் பின்னர் மருவி சிலை செட்டி என அழைக்கப்பட்டிருக்கலாம். இவர்களே தறி வைத்து ஆடை நெசவு செய்யும் தேவாங்கர்களாக இருக்கலாம்.
சௌடாம்பிகையின் திருவிழாக்கள் :
சௌடாம்பிகை அம்மன் தேவாங்கர் குல மக்களுக்கு
வளமும், நலமும் கொடுத்து, நோய்களிலிருந்தும்
பகைவர்களிடமிருந்தும் பாதுகாப்புக் கொடுப்பதாகவும் நம்பப்படுகிறது. இதனால் தங்களது ஆழ்ந்த பக்தியையும், அம்மனுக்காகத் தங்களது அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தும் வகையில் பல திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அவற்றில் முக்கியமானவை.
1.சக்திக்கரகம் எடுத்தல்
2. சக்தி நிறுத்துதல்
3. மகர்நோன்பு என்னும் நவராத்திரிவிழா என்பன.
சக்தி கரகம் :
தமிழகத்தில் கரகம் எடுத்தல், அதாவது சக்தி கரகம் எடுத்தல் என்னும் விழா அனேகமாக எல்லாத் தாய்த்தெய்வ வழிபாடுகளிலும் இடம்பெறுகிறது. சௌடாம்பிகை அம்மன் விழாவில் இதுவே முக்கியப் பங்கு ஆற்றுகிறது. ஓர் உருண்டை யான பித்தளைச் செம்பின் வாயில் தேங்காயை வைத்து மாவிலைகளால் அலங்கரித்து நூலால் சுற்றி கூம்பு வடிவில் அமைப்பது கரகம் எனப்படும். மேலும் செம்பினுடைய முன் பகுதியில் (நடுப் பகுதியில்) அரைத்த மஞ்சளால் தேவியின் முகம் கண், வாய் போன்று வடிவமைத்துக் கொண்டு அதனைக் குறிப்பிட்ட இடத்திலிருந்து பூசாரி ஒருவர் தலையில் சுமந்து கொண்டு அம்மன் கோயில் கருவறைக்குள் கொண்டுவந்து கருவறையில் வைப்பது சக்தி கரகம் எடுத்தல் என்னும் விழாவாகும். இங்கு அலங்கரிக்கப்பட்ட செம்பு ஒரு பெண்ணின் வயிறாகக் கருதப்படுகிறது. அதன் மேல் வைக்கப்படும் தேங்காய் மூன்று கண் கொண்டுள்ளதால், அது சிவபெருமான் எனக் கருதப்படுகிறது. ஒரு பெண்ணும், ஆணும் இணைவது என்னும் பொருளிலேயே இக்கரகம் அலங்கரிக்கப்படுகிறது. இது வளமை வழிபாட்டின் அடையாளமே. அலங்கரிக்கப்பட்ட கரகத்தைப் பூசாரி தலையில் வைத்துக் கொண்டு கையால் பிடிக்காமல் கோயிலுக்கு கொண்டுவருதல் வேண்டும். அவ்வாறு தடையின்றிக் கொண்டுவந்து சேர்த்துவிட்டால் அவ்வாண்டில் வளம் பெருகும். நலம் சிறக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவுகிறது. ஆனால் இது அவ்வளவு எளிதாக நடைபெறுவ தில்லை.
மண்டு கூடுதல் :
கரகம் அலங்கரிக்கும் பணி ஊரில் ஒரு பொது மன்றத்தில் நடைபெறும். மன்றத்தில் சக்தி கரகம் சேர்த்தல் என்னும் செயல்காலங்காலமாக தமிழகத்தின் பல ஊர்களின் பல்வேறு குல மக்களாலும் நடத்தப்பெறும் ஒரு விழாவாகும். குறிப்பாக தருமபுரி மாவட்டத்தில் இதனை மண்டு கூடுதல் (மன்று>மண்டு) என்று பெயரிட்டு அழைப்பர். பொதுமன்றத்தில் ஆண் கரகமும் பெண் கரகமும் எதிர் எதிரே வந்து ஒன்றோடு ஒன்று முட்டிக்கொள்ளும் விழாவே மண்டு கூடுதல் என்பதாகும். இதுவே தேவாங்கர் குல மக்களால் இன்றும் சக்திக்கரகம் எடுக்கும் விழாவாக நடத்தப்படுகிறது. பெண்ணின் வயிறாக உருவகப்படுத்தப்படும் செம்பும், ஆணாக உருவகப்படுத்தப்படும் (முக்கண்ணுடைய சிவன்) தேங்காயும் இணைவதால் ஏற்படும் சக்தி வெளிப்பாடு அல்லது உயிர் உற்பத்தியே ஒரு சடங்காக உருவகப்படுத்தப்பட்டு இவ்விழாவில் நடத்திக் காட்டப்படுகிறது.
தண்டகம் பாடுதல் :
ஊர்ப்பொது மன்றத்தில் கரகம் அலங்கரிக்கப்படும் போதே இளைஞர்கள் சிலர் சௌடாம்பிகை அம்மனை (சக்தியை) அழைத்துச் சில பாடல்களைப் பாடுவர். இந்த இளைஞர்கள் மஞ்சள் வேட்டி அணிந்து கையில் வீரக்கங்கணம் கட்டிக்கொண்டு நீராடி ஈர உடையுடன் கையில் நீண்ட வாள் ஒன்றைத் தாங்கி இப்பாடலைப் பாடுவர். பாடலைப் பாடும்போது வீரமும், கோபமும் கொப்பளிக்க ஒரு எதிரியுடன் போரிடுவது போலக் கையில் உள்ள வாளைச் சுழற்றி கால்களை மாற்றி மாற்றி அடி எடுத்து வைத்து ஆடுவர். இந்த வீரர்களை அலகு வீரர்கள் என்று இம்மக்கள் அழைப்பர். எங்கோ உறைந்திருக்கும் சக்தியை அந்தக் கரகத்திற்குள் (சொம்புக்குள்) கொண்டுவந்து குடிபுக வைக்க வேண்டும் என்பதே அலகு வீரர்களின் வீராவேசப் பாடலின் நோக்கம். அவர்கள் பாடும் பாடல்களில் பெரிதும் தமிழும் ஓரளவு கன்னடமும் கலந்திருக்கும். தேவாங்கர்களின் தோற்றம், நெசவுக் கலையின் தொடக்கம், அவர்களுக்கு நேர்ந்த இடர்பாடுகள், அவற்றை எதிர் கொள்ள சௌடாம்பிகை அம்மன் உதவிய விதம் ஆகியவை பாடற்பொருளாக அமைந்திருக்கும். இவ்வீரர்கள் பாடப் பாட சுற்றி நிற்கும் மற்ற பக்தர்கள் பின்பாட்டுப் பாடுவர். எடுத்துக்காட்டாக ஒரு பாடல்
“ஆஹாஹா வீரா!
சாம்பகி பிகுபிராக் சடாச்சரி பிகுபிராக்
லோகமாதா பிகுபிராக் லோகரட்சகி பிகுபிராக்”
என்பது பாடலின் தொடக்கமாகும். பராக் என்பது வருகையைக் குறித்து முன்னறிவிக்கும் ஒரு வடசொல். தேவி வரப்போகிறாள் என்பதையே இப்பாடல் வரிகள் சுட்டிக்காட்டும்.
“ஆதி சௌண்டம்ம நீனே
அத்துசாவரெ குலன
ஆதரிசுதவளு நீனு
ஹரிநாதரிட தல்லி
நூலெத்தி பருவாக
அசுராதிகளு பந்துமோத
நாதாந்த பிருதெத்தி
சிங்கவாகன வேறி
அசுர சம்ஹார மாடி
தாராபுர தல்லி
தங்கித்த தாய் சாமுண்டீஸ்வரி நீனு”
என்னும் பாடல் வரிகளில் தேவாங்கர் குல முன்னோன் தேவலன், திருமாலிடம் நூல் பெற்று வந்தமையும் அதைப் பறிக்க அசுரர்கள் முயன்றதையும், அப்போது சாமுண்டீஸ்வரி அன்னை சிம்மவாகனத்தில் வந்து அசுரர்களைக் கொன்று தேவர்க்கு உதவியமையும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு பாடப்படும் பாடல்கள் ‘தண்டகம்’ என்னும் பெயரால் அழைக்கப் படுகின்றன.
சக்தி அழைத்தல் :
இப்படி வீரர்கள் பாடிக்கொண்டிருக்கும் பொழுதே கரகம் அலங்கரிக்கப்பட்டு விடுகிறது. அதன்பின்னர் தேவாங்கர் குல பக்தர்கள் அனைவரும் மூன்று வரிசைகளில் அணி வகுத்து வடக்கு நோக்கி நின்று அம்மனை வரவேண்டும் என்று வருந்தி அழைக்கின்றனர். ஏழுகடல் தாண்டி, ஏழுமலை தாண்டி, நீ எங்கு குடிகொண்டிருந்தாலும் உன் மக்களாம் தேவாங்கர்கள் அழைத்த குரலுக்கு வருவேன் என நீ எங்களுக்கு ஆதியில் கொடுத்த வாக்குறுதியின்படி வந்து சேரவேண்டும் என்று மன்றாடுவர். ஒவ்வொரு அடியாக மூன்று அடிகள் முன்னேறி அம்மனை அழைப்பர். இவ்வாறு வடக்கு நோக்கி அழைக்கும் போது யாரும் எதிரில் நிற்கக்கூடாது. குறுக்காக நடக்கக் கூடாது. குறிப்பாகப் பெண்கள் சற்றுத் தள்ளியே நிற்க வேண்டும். பிற சாதியினர் ஊடுருவக் கூடாது எனக் கவனமாகப் பார்த்துக் கொள்வர்.இவ்வளவு முன்னேற்பாடுகளுடன் பக்திப் பரவசத்தோடு ஆக்ரோசமாகக் குரலெடுத்துக் கூப்பிடும் தன் மக்களைத் திருப்திப்படுத்தும் வகையில் அம்மன் அருள் பூசாரியின் மேல் இறங்கும். அவர் நிலைகொள்ளாமல் தவித்துக் குதித்து அலங்கரிக்கப்பட்ட சக்தி கரகத்தைத் தன் தலை மீது எடுத்து வைத்துக்கொண்டு ஒரு கையில் பிரம்பு ஒன்றைப் பிடித்துக் கொண்டு கோயில் நோக்கி நடைபோடுவார்.
அப்போது ஒரு பக்தர் குழுவினர் தம் தலையில் எலுமிச்சம் பழங்களைத் தலை முடியில் கோத்துக் கொண்டு ஆக்ரோசமாக எதிர்ப்படுவர். இவர்கள் தேவாங்கர் குல மக்களில் சின்னு கொட்டலார், செவ்வேலர் என்னும் இரண்டு திகை (வகை)யைச் சேர்ந்தவர்களாக இருப்பர், இவர்களது பெயர்கள் பெரும்பாலும் வீரபத்திரன்,வீரப்பன் என்றே இருக்கும். இவர்கள் சௌடாம்பிகை அம்மனை எதிரிகளிடமிருந்து காத்து தம் ரத்தத்தைச் சிந்தி பாதுகாப்போடு அழைத்துச் செல்வதாகச் செயல்படுவர். இதனைப் பழமையான தாய்த் தெய்வ வழிபாட்டின் எச்சத்தின் வெளிப்பாடாக நாம் கருதலாம்.
காபாலிகத் தாக்கம் :
தமிழகத்தின் பல கோயில்களிலும் கி.பி. 8-9-ஆம் நூற்றாண்டளவிலேயே சப்தமாதர் (ஏழு அன்னையர்) வழிபாடு தோன்றிவிட்டது. அவர்களுக்கு தனியே சிற்பங்கள் செதுக்கப்பட்டு ஒரு தொகுதியாகத் தென்பிரகாரத்தில் வைக்கப்படும். இவ்வெழு கன்னியர்க்கு முன் கணபதியும், ஏழாவதாக சாமுண்டியும், அவள் அருகில் காவலுக்காக வீரபத்திரர் சிற்பம் வைக்கப்படுவது மரபு. அந்தக் காவல் மரபுதான் இன்றும் செயல்வடிவம் பெற்றுத் தேவாங்கர் மக்களால் தொடர்ந்து பின்பற்றப்படுகிறது எனலாம். வீரபத்திரன் சிற்ப உருவம் பைரவரின் ஒரு அம்சமாக, மனிதத் தலைகளை (முண்டமாலை) மாலையாக அணிந்த வண்ணம் காட்டப்படும். அந்த மனிதத் தலைகளின் எச்சமாகத்தான் இங்கு சின்னு கொட்லார் வம்சத்து பக்தர்கள் தங்கள் தலைமுடியில் எலுமிச்சம் பழங்களை வரிசையாகக் கோர்த்துக் கொண்டு அம்மனை எதிர்கொண்டு அழைக்கின்றனர். இச்செயல், இவர்கள் தலையில் அணியும் எலுமிச்சம்பழ மாலை ஆகியவை இவர்களது சமய நம்பிக்கையில் சைவ சமயத்தின் ஒரு பிரிவான
காபாலிகத்தின் தாக்கம் இருப்பதைக் காட்டுகிறது.
மேலும் அம்மன் சக்தியாக வடிவவெடுத்துப் பூசாரியின் தலை மீது அமர்ந்து மெதுவாக நடந்து கோயிலுக்கு வரும்போது சில குறிப்பிட்ட இடங்களில் தயங்கி நிற்கும். அதாவது பூசாரி மேலே நடக்க முடியாமல் திணறுவார். கரகம் தலையிலிருந்து சாயும். அப்போது அலகு வீரர்கள் தங்கள் மார்புகளில் கத்தியைப் பாய்ச்சி ரத்தம் பீரிட அம்மனை அழைப்பர். அப்போது உணர்ச்சி பிழம்புகளாக பக்தர்கள் கூட்டம் மாறிவிடும். வீரர்களின் மார்பிலிருந்தும் தோள்களிலிருந்தும் வடியும் ரத்தத்தை நிறுத்துவதற்குப் ‘பண்டாரம்’ என்னும் ஒருவகை மருத்துவப் பொடியைத் தூவுவர். இப்பொடி மஞ்சளும் விபூதியும் கலந்ததாக இருக்கும். உடனே ரத்தம் உறைந்துவிடும். அம்மன் சற்று முன்னேறி நடைபோடுவாள்.
இவ்வாறு தமது ரத்தத்தைக் கொண்டு அம்மனை அழைக்கும் வழக்கம் நீண்டகாலமாக தமிழகத்தில் நிலவிவரும் ஒரு வழக்கமாகும். அதன் எச்சமாகவே தேவாங்கர் குல மக்கள் இன்றும் இப்பழக்கத்தைக் கடைப்பிடித்து வருகின்றனர் எனலாம்.
நவகண்டம் கொடுத்தலுடன் தொடர்பு :
சக்தியின் வடிவமான அம்மன் முன்பாக மண்டியிட்டுத் தன் தலையைத் தானே அறிந்து கொடுக்கும் வழக்கம் கி.பி. 7-8-ஆம் நூற்றாண்டிலேயே இருந்துள்ளது என்பதற்குப் பல சிற்ப, கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. மாமல்லபுரம் ஐந்து ரதங்களில் ஒன்றான திரெளபதி ரதத்தில் அம்மன் முன்பாக மண்டியிட்ட ஒரு வீரன் தன் கழுத்தில் கத்தியை வைத்த நிலையில் செதுக்கப்பட்டுள்ளான். இது தன் உடலை ஒன்பது துண்டுகளாக வெட்டி (நவ கண்டம்) அம்மனுக்குப் படைக்கும் ஒரு வீரமிக்க தற்பலி வழக்கத்தைச் சுட்டும் சிற்பமாகும். இதன் காலம் கி.பி. எட்டாம் நூற்றாண்டாகும். இது போன்ற சிற்பங்கள் தமிழகத்தில் பல பகுதிகளில் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, தஞ்சை மாவட்டம் புள்ளமங்கை என்னும் ஊரில் உள்ள கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு முற்காலச் சோழர் கோயிலில் காணப்படும் மகிசா சுரமர்த்தினி சிற்பத்தின் காலடியில் ஒரு வீரன் தன் தலையைத் தானே அறுப்பதாகச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளான்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டத்தில் உள்ள
மடப்புறம் காளியம்மன் கோயில் மதுரை நகருக்கு மிக அருகில்உள்ளதாகும். இக்கோயிலில் ஒரு சப்தமாதர் சிற்பத் தொகுதி கி.பி. எட்டாம் நூற்றாண்டு கலை அழகுடன் மிளிர்கிறது. இச்சிற்பங்கள் இடம் பெற்றுள்ள கோயிலின் வாயிலில் நிலைப்பகுதியில் பக்கத்திற்கு ஒருவராக, இரண்டு வாயிற்காவலர் சிற்பம் போன்று, இரண்டு சிற்பங்கள் உள்ளன. ஆனால் இவை சாதாரணமான வாயிற்காவலர் சிற்பங்களை போல இல்லை. மாறாக மண்டியிட்ட நிலையில் தம் கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு அரியும் பாவனையில் உள்ள நவசுண்டச் சிற்பங்களாகும். ஒவ்வொரு சிற்பத்தின் கீழும் அவ்வீரனின் பெயர் கி.பி. 10-ஆம் நூற்றாண்டு எழுத்தமைதியில் பொறிக்கப் பட்டுள்ளது.
‘தூங்கு தலை கொடுத்தான் சித்திரசரிதன்’
‘தூங்கு தலை கொடுத்தான் வல்லபன்’
என்பவை அக்கல்வெட்டுகளின் பாடங்களாகும். எனவே தமிழ்நாடு முழுவதும் கி.பி. எட்டாம் நூற்றாண்டு முதலே தற்பலி கொடுக்கும் வழக்கம் இருந்துள்ளது என இச்சான்றுகள் மூலம் நம்பலாம்.
தமிழ் மக்களிடையே இவ்வழக்கம் தொடர்ந்ததை நாம் கலிங்கத்துப்பரணி வாயிலாகவும் அறியலாம்.
‘அடிக்கழுத்தின் நெடுஞ்சிரத்தை அரிவராலோ அரிந்தசிரம் அணங்கின் கைக் கொடுப்பராலோ கொடுத்த சிரம் கொற்றவையைப் பரவுமாலோ குறையுடலம் கும்பிட்டு நிற்குமாலோ
(கலிங்கத்துப்பரணி, 111)
என்னும் பாடல் இவ்வுண்மையைப் புலப்படுத்தும்.
சலியாத தனி ஆண்மைத் தறுகண் வீரர்
தருவரம்! வரத்தினுக்குத் தக்கதாய்
பலியாக உறுப்பரிந்து தருவதும் என்று
பரவும் ஒலி கடல்ஒலி போல் பரக்குமாலோ’
(கலிங்கத்துப்பரணி 109)
என்ற பாடலும் காளி வழிபாட்டின் போது வீரர்கள் தங்கள் அங்கங்களை வெட்டிப் பலியிட்டதைக் குறிக்கும். தமிழகத்தில் கி.பி.12-ஆம் நூற்றாண்டில்தான் சக்தி வழிபாடு (சாக்தம் என்னும் பிரிவு) மிகவும் உச்ச நிலையை அடைந்துள்ளது. ஒட்டக்கூத்தரின் தக்கயாகப்பரணி நூலில் சக்தி வழிபாட்டின் முழுப் பரிமாணமும் வெளிப்படுவதாக அறிஞர்கள் கருதுவர். தாராசுரத்தில் உள்ள ஐராவதேசுவார் கோயில் சக்தி வழிபாடு உச்சம் பெற்றிருந்த காலத்தில் கட்டப்பட்டதாகும். தக்கயாகப்பரணி அக்கோயிலைப் பார்த்துப் பாடப்பட்ட நூல் என்றுகூடக் கூறுவர்.
இந்தக் கால அளவில்தான் தமிழகம் எங்கும் சிவன் கோயில்களில் திருக்காமக் கோட்டம் என்னும் பெயரில் அம்மனுக்கு என்று தனிக் கருவறைகள் (சந்நிதிகள்) கட்டப் பட்டன. அதுவரை பரிவாரத் தேவதைகளில் ஒன்றாகச் சிறு தெய்வ சந்நிதிகளில் ஒன்றாக இருந்த அம்மன் வழிபாடு சிவனுக்கு இணையான தகுதியைப் பெற்றுத் தனிச் சன்னதி பெற்றதும் இந்தக்கால அளவில்தான், மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத் தனிச் சன்னதியும் இதே காலகட்டத்தில்தான் ஜடாவர்மன் குலேகேசர பாண்டியனால் (கி.பி. 1190-1216) கட்டப்பட்டது.
இந்த வரலாற்றுப் பின்னணியில் தேவாங்கர் குல மக்களின் அம்மன் வழிபாட்டை நோக்குதல் வேண்டும். ஏறக்குறைய இந்தக்கால அளவில்தான் (கி.பி. 12-13-ஆம் நூற்றாண்டில்) கர்நாடகப் பகுதியிலிருந்து ஹொய்சாளர் என்னும் மரபினர் தமிழகத்தில் ஊடுருவத் தொடங்கினர். அவர்கள் மிகுந்த சமயப் பற்றாளர்கள். அவர்களோடு வந்தவர்களில் தேவாங்கர்களும் உண்டு. எனவே அவர்கள் அக்காலகட்டத்தில் நிலவிய சக்தி வழிபாட்டு முறைகளைத் தாங்களும் பின்பற்றியிருக்கலாம். அதுவே இன்றுவரை தொடர்கிறது என்றும் கூறலாம்.
தங்களது மார்பில் வாளைப் பாய்ச்சி ரத்தம் சொட்டச் சொட்ட அம்மனைக் கோயிலுக்கு அழைத்துவரும் பக்தர்கள் தீசுக்கோ, தீசுக்கோ என முழக்கமிட்டபடியே மார்பில் வாளைப் பாய்ச்சுவர். தீசுக்கோ என்பது ஒரு தெலுங்கு மொழிச் சொல்லாகும். இதன் பொருள் ‘வாங்கிக் கொள்’ என்பதாகும். கலிங்கத்துப்பரணி 109-ஆம் பாடலில் கூறப்பட்டுள்ளதைப் போன்று “எம் அங்கங்களை வெட்டிப் பலி கொடுக்கிறோம். நீ வாங்கிக்கொள். எமக்கு வேண்டும் வரம் தருவாய்’ என்ற பொருளில்தான் தேவாங்கர் குல அலகு வீரர்கள் தம் அங்கங்களில் வாளைப் பாய்ச்சிக் கொண்டு ரத்தம் சிந்துகின்றனர்.
முச்சந்திகள், முட்டுச் சந்துகள், நாற்சந்திகள் ஆகிய பகுதிகளை அம்மனின் சக்திகரகம் பூசாரியின் தலையில்இருந்தபடி கடந்து வரும்போது சில தீய சக்திகளால் (ஆவிகள்) தடுக்கப்படுகிறது. அச்சமயம் ஆவேசமாகத் தங்கள் மார்புகளில் வாளைப் பாய்ச்சி ரத்தப்பலி கொடுப்பர். எலுமிச்சம் பழங்களும் அரிந்து திசைக்கொன்றாக வீசி எறியப்படும். சிறிது நேரத்தில் ஆவிகளின் கொட்டம் அடங்குவதாகவும் நம்பப்படும். இவ்வாறு கடுமையான போராட்டத்தின் பின்னர் சக்திகரகம் கோயிலை அடையும். கர்ப்பகிரகத்தில் கரகம் வைக்கப்படும். இத்துடன் அலகு வீரர்கள் ஓய்வு பெறுவர். தாம் தேவியைக் கொண்டுவந்துவிட்ட திருப்தி அவர்களிடம் நிலவும். அதன் பின்னர் ஒரு வெள்ளைப் பூசணிக்காயைச் சன்னதியின் முன்பாக வைத்து வாள் ஒன்றால் ஒரே வெட்டில் இரண்டு துண்டாக வெட்டுவர். இதனைச் சௌண்டம்மனை எதிர்த்த சண்டர். முண்டர் என்னும் அசுரர்களைப் பலி கொண்டதன் அடையமாகச் செய்யப்படும் ஒரு சடங்காகக் கருதலாம். இப்பூசணிக்காய் பலி கொடுப்பது செவ்வேளாளர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் பொறுப்பில் விடப்படும். அவரே ஒரே வீச்சில் பூசணிக்காயை வெட்டிஎறிவார். இத்துடன் முதல் நாள் விழா நிறைவு பெறும். அலகு வீரர்கள் மீண்டும் குளித்து வந்து அம்மன் சன்னதியில் விபூதி பெற்றுக் கொள்வர். அதிகமான காயம் அடைந்தோர் பண்டாரம் என்னும் மருந்துப் பொடியைத் தங்கள் காயங்களில் வைத்துக்கொள்வர். ஓரிரு நாளில் அக்காயங்கள் மறைந்துவிடுவதுண்டு.
இரண்டாம் நாள் விழா – சக்திமாவு சேர்த்தல் :
இரண்டாம் நாள் (புதன் கிழமை) காலை 10.00 மணி அளவில் தொடங்கும். இவ்விழாவில் அம்மன் அருளால் அரிசி மாவையும், வெல்லத்தையும் தண்ணீர் சேர்க்காமல் வெல்லம் தானாக இளகி மாவுடன் சேர்ந்துக் கட்டியாகும். ஒரு அதிசய நிகழ்வு (Miracle) நடைபெறும். இதிலும் பலவிதமான சடங்குகளும் உண்டு.
இவ்விழாவுக்கான அரிசி மாவு சுமார் 7படி (10 கிலோ)
அரிசியை பருவம் அடையாத சிறுபெண்களைக் கொண்டுஇரண்டு நாட்கள் முன்பே இடித்துத் தயார் செய்து கொள்வர்.இம்மாவு தேவாங்கர் குல மக்களின் கிராமத் தலைவரானசெட்டுமை அல்லது அம்பலம் என்பவர் வீட்டில் வைக்கப்பட்டிருக்கும். பக்தர்கள் அனைவரும் மேளதாளத்துடன் சென்று அம்பலம் வீட்டிலிருந்து கோயிலுக்குப் பயபக்தியுடன் எடுத்துவந்து வைப்பர். பின் அலகு வீரர்கள் அனைவரும் நீராடி வந்து சக்தி மாவு சேர்க்கும் அற்புத நிகழ்ச்சிக்குத் தயார் நிலையில் கையில் வாள்களுடன் நிற்பர். அம்மன் கருவறையின் முன்பாக உள்ள மண்டபத்தில் ஓலைப்பாய் விரிக்கப்பட்டு அதன்மேல் வெள்ளைத் துணியை விரிப்பர். அத்துணியில் அரிசி மாவு பரப்பப்படும். அதற்குத் தேவையான அளவு மண்டை வெல்லம் என்னும் நாட்டுச் சர்க்கரை வெல்லத்தையும் வைப்பர். பாயின் அருகில் வட்டமாக தெரிந்தெடுக்கப்பட்ட ஐந்து நபர்கள் தங்கள் வாயில் வெள்ளைத் துணிகளைக் கட்டிக்கொண்டு அமர்வர். அவர்களே வெல்லத்தையும், அரிசிமாவையும் ஒன்று சேர்க்கும் நிகழ்ச்சியைச் செய்பவர்கள். அவர்கள் தங்களுக்குள் ஏதேனும் பேசிக்கொள்ள நேரிடும்போது எச்சில் மாவில் தெரிக்கக்கூடாது என்பதற்காகவே வாயில் துணி கட்டப்பட்டிருக்கும். அவர்கள் தயார் நிலையை அடைந்தவுடன் அலகு வீரர்களுக்குக் கட்டளை வழங்கப்படும்.
உடனே அலகு வீரர்கள் அன்னையை அழைக்கும் வகையில் தங்களுடைய மார்புகளில் வாள்களைப் பாய்ச்சிக்கொண்டு கோயிலின் முன்னும் பின்னுமாக ஓடிவருவர். தீசுக்கோ, தீசுக்கோ, என்று தங்கள் ரத்தத்தை அன்னைக்குப் பலியாகக் கொடுக்கும் சடங்கு இதுவாகும். ரத்தம் சொட்டும் இடங்களில் பண்டாரம் என்னும் மஞ்சளும் விபூதியும் கலந்து தூள் தூவப்படும். பரபரப்பாக இயங்கும் அலகு வீரர்கள் அரிசிமாவும், வெல்லமும் உருகிப் பாலாகி ஒன்று சேரும் வரை மார்பில் வாள் கொண்டு தாக்கிக் கொள்வர். குறைந்த பட்சம் 10 நிமிடங்களில் வெல்லம் இளகி முழுமையாக மாவிலும் பரந்து கட்டியாகிவிடும். அலகு வீரர்களின் கடுமையான பக்திக்கும், தற்பலிக்கும் இரங்கி அம்மன் அருள்பாலித்து விட்டதாக மக்கள் திருப்தி அடைவர். இத்துடன் இரண்டாம் நாள் விழா முடிவுறும். பின் அலகு வீரர்கள் மீண்டும் நீராடிக் கோயிலுக்கு நேராக வந்து விபூதி பிரசாதம் பெற்றுக்கொள்வர். அதிகமான காயம் பெற்றோர்க்கு மீண்டும் பண்டாரம் என்னும் மருந்துப்பொடி காயங்களில் வைக்கப்படும். சுமார் ஒரு மணி அளவில் இந்நிகழ்ச்சிகள் முடிவுறும்.
முளைப்பாலிகை எடுத்தல் :
பெண்தெய்வ வழிபாட்டோடு பெரிதும் தொடர்பு
உடையது முளைப்பாலிகை எடுத்தல் விழாவாகும். இது
பெண்ணே வேளாண்மையைக் கண்டுபிடித்தவள் என்ற நம்பிக்கையின் எச்சமாக வழிவழியாக நடத்தப்பட்டு வரும் ஒரு சடங்காகும் (Ritual). வேட்டைச் சமூகமாக மனித சமூகம் வாழ்ந்தபோது ஆண்கள் உணவு தேடி வேட்டைக்குச் சென்றுவிட உறைவிடத்தில் தங்கியிருந்த பெண் தன் சுற்றுப்புறத்தில் தற்செயலாய் போட்ட விதைகள், கொட்டைகள் முளைத்து, செடியாகி, மரமாகி பலப் பல கனிகளை, காய்களைக் கொடுப்பதைக் கண்டு அதிசயித்து தொடர்ந்து செயல்பட்டதன் விளைவே வேளாண்மையாகும். எனவே வேளாண்மை பெண்ணால்தான் முதல் முதலாகக் கண்டறியப்பட்டது என்பது சமூகவியல் அறிஞர்களின் கருத்தாகும். எனவேதான் ஒன்றுக்குப் பலவாக விளைச்சலைக் கொடுக்கும் பூமிக்கும் பூமிதேவி எனப் பெயர் வழங்கப்படுகிறது. வேளாண் மக்கள் தம்மை
பூமிதேவியின் புத்திரர்கள் என்றும் கூறிக்கொள்வர்.
பூமிதேவிக்கு என்று தனிக்கோயிலும் கட்டப்பட்டு, மேழித் தோரணமும் (மேழி = கலப்பை) கட்டப்பட்டதாக திருக்கோயிலூர்க் கல்வெட்டு ஒன்று கூறும். எனவேதான் பெண் தெய்வ வழிபாட்டோடு முளைப்பாலிகை எடுக்கும் ஒரு சடங்கையும் தமிழகத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் மேற்கொள்கின்றனர்.
முளைப்பாலிகை வளர்க்கும் முறை :
சக்திகரகத் திருவிழா நடைபெற பத்து நாட்கள் முன்னதாகவே முளைப்பாலிகை வளர்ப்பதற்கான சடங்குகள் தொடங்கப்படுகின்றன. இதில் அனுபவமிக்க பெண்கள் முன்னின்று கண்காணிக்கின்றனர். இது முற்றிலும் பெண்களுக்கே உரிய ஒரு சடங்கு சார்ந்த விழாவாகும். இளம் பெண்கள் மாதவிலக்கு அடையும் பெண்கள் இல்லா ஒரு வீட்டில், அல்லது பள்ளி போன்ற ஒரு பொதுவான கட்டிடத்தில் முளைப்பாலிகை வளர்க்கப்படும். ஒரு கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்களுக்கு என ஒரு பாத்திரத்தில் முளைப்பாலிகை வளர்ப்பர். ஒரு மண் பாத்திரத்தில் மண் நிரப்பி நவதானியங்களைத் தூவி தண்ணீர் தெளித்து வளர்ப்பர். தினமும் முன்னிரவு நேரத்தில் இளம் பெண்கள் கூடி கும்மி அடித்து அம்மனை வாழ்த்திப் பாடுவர். இவ்வாறு 11 நாட்கள் வளர்ந்த முளைப்பாலிகையை இரண்டாம் நாள் திருவிழாவன்று மாலை வேளையில் ஊர்வலமாக எடுத்துவந்து அம்மன் கோயிலில் வைத்துக் கும்மி அடித்துப் பாடுவர். மூன்றாம் நாள் மாலைமுளைப்பாலிகையை மீண்டும் ஊர்வலமாகச் சுமந்து சென்று ஏரி நீரில் கரைத்து வருவர். இச்சடங்கின் மூலம் பிள்ளைச் செல்வம் இல்லாத பெண்களுக்குப் பிள்ளைகள் பிறக்கும் என்றும், திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்றும், நம்பிக்கை மக்கள் மத்தியில் வலுப்பெற்றது.
மூன்றாம் நாள்விழா – அம்மன் பவனி வருதல் :
மூன்றாம் நாளில் பகலில் எவ்விதமான விழா நிகழ்ச்சிகளும் இராது. இரவு 10 மணிக்கு மேலாக அம்மன் பூக்களால் நன்கு அலங்கரிக்கப்பட்டு சிம்மவாகனத்தில் அமர்த்தப்பட்டு நகர வீதிகளில் ஊர்வலமாகக் கொண்டுவரப்படுவாள். இதனையே அம்மன் பவனி வரும் விழாவாகக் கூறுவர். இது எல்லாக் கடவுளர்களின் திருவிழாக்களிலும், எல்லா ஊர்களிலும் நிகழும் ஒரு நிகழ்வே ஆகும். இவ்வாறு வீதியுலா வருவதற்காகவே இறைத் திருமேனிகளை செப்புத் திருமேனிகளாகச் செய்து கோயில்களில் வைத்தனர் தமிழ் மக்கள். இவற்றிற்கு உற்சவ மூர்த்திகள் என்றும் பெயர் வழங்கப்பட்டது. உற்சவத்தின் போது கருவறையில் உள்ள இறை உருவின் பிரதிநிதியாக (பதிலியாக) இத்திருமேனிகள் வீதியுலாவில் கொண்டுவரப்படும். இதற்கு ஒரு சிறப்பான காரணமும் கூறப்படுகிறது. கோயில்களுக்கு வர இயலாத உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர், வயது முதிர்ந்தோர், நோயாளிகள் போன்றவர்களுக்கு அவரவர் வசிக்கும் வீதிகளுக்கு இறைவனே நேரில் வந்து காட்சி கொடுத்து அருள்பாலிப்பதாகவே இவ்வீதியுலா நடத்தப்படுகிறது என்பர்.
மதுரையில் சொக்கநாதரும், மீனாட்சி அம்மையும் இவ்வாறு வீதியுலா வரும் வேளையில் மூன்றாம் குலோத்துங்கன் என்னும் சோழ மன்னன் வீதியில் மக்களோடு மக்களாக நின்று இறைவனை வழிபட்டதாகக் கூறப்படும் செய்தி ஒன்று உண்டு. இதன் மூலம் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பே இத்தகு வீதியுலா நிகழ்வுகள் தமிழகத்தில் நடைபெற்றுள்ளன என்பது உறுதிப்படுகிறது. மதுரை வீதிகளில் கணிச்சிப் படை தரித்த இறைவன், வீதி உலா வந்ததாக சங்க இலக்கியமான மதுரைக் காஞ்சி கூறுவதும் நோக்கத்தக்கது.வீதியுலா வரும் போது ஒவ்வொரு வீட்டின் வாயிலின்முன்பாகவும் அம்மன் பார்வை படும்படியாக நிற்பதுண்டு.
ஒவ்வொரு வீட்டாரும் நம் இல்லம் தேடி வரும் இறைவியைவரவேற்கும் வகையில் வீட்டு வாயிலில் குத்து விளக்கேற்றி, தேங்காய், பழம் வைத்து எதிர்பார்த்து நிற்பர். உடன் வரும் பூசாரிகள் தேங்காயை உடைத்து அம்மனுக்குக் காட்டி விபூதி பிரசாதம் கொடுப்பார். இதற்குத் ‘திருக்கண்’ வைத்தல் எனப் பெயர். அம்மனின் திருக்கண் (அருட்பார்வை) தம் இல்லத்தில் படவேண்டும் எனும் நோக்கத்தில் செய்யப்படும் சடங்கே திருக்கண் வைத்தலாகும். இவ்வாறு ஓர் ஊரின் எல்லாத் தெருக்களிலும், எல்லா வீடுகளுக்கும் அம்மனைக் கொண்டு சென்று மீண்டும் கோயிலுக்குத் திரும்பி வரும் போது இரவுப் பொழுது முடிந்து வைகறை தொடங்கிவிடும். இத்துடன் மூன்று நாள் கரகத் திருவிழா இனிதே நிறைவு பெறும்.
முடிவுரை:
இத்தகைய பெண் தெய்வ வழிபாட்டு முறைகள் தமிழகத்தின் அனைத்துப் பிரிவு மக்களாலும் நடத்தப்படுவதால், தாய்த்தெய்வ வழிபாடே தமிழகத்தின் தொன்மையான வழிபாடாக இருந்தது என்பதை உறுதிப்படுத்தலாம்.
சித்திரமேழி – முனைவர் சொ.சாந்தலிங்கம்
விலை: 140/-
Buy this book online: https://www.heritager.in/product/kayaththaaru-trisanam/
WhatsApp to Order: wa.me/919786068908
Call to Order: 097860 68908
Social Media Handles:
Join our WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
Telegram:
Website: www.heritager.in
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு
#books #tamilbookstore #Heritager wwww.heritager.in
Buy History and Heritage Related book online:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/