கோயில், அரண்மனை மற்றும் குடும்பப் பெண்கள்: காலனியத்துக்கு முந்தைய தமிழ்நாட்டில் பெண்களின் அடையாளங்களின் கட்டமைப்பு என்ற கட்டுரையின் மொழிபெயர்ப்பு இந்நூல்.
கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்ட பழங்காலப் பெண்களில் பலரும் அவர்களது கணவர்களைக் கொண்டோ அல்லது வேறு ஆண் உறவினரைக் கொண்டோ அடையாளப் படுத்தப்படவில்லை, சாஸ்திர விதிகளின் முழுமையான செல்வாக்குக்கு உட்பட்டவர்கள் என்று நாம் எதிர்பார்க்கக்கூடிய பிராமணப் பெண்களேகூட கல்வெட்டுகளில் மனைவிகளாக மட்டுமே விவரிக்கப்பட்டிருக்கவில்லை. பெண்கள் வேறு தனிநபர் அடையாளங்களுடன் அடிக்கடி குறிப்பிடப்படுவதால், தந்தையர், கணவர்கள். மகன்கள் ஆகியோரைச் சார்ந்து மட்டுமே சமூக அடையாளங்கள் வரையறுக்கப்படவில்லை என்பது தெரிகிறது. கல்வெட்டில் பெயர் குறிப்பிடப்பட்ட பெண்களில் பெரும்பாலானவர்கள் சொத்துடையவர்களாகவும், சொத்தின்மீது கட்டுப்பாடு செலுத்தியவர்களாகவுமே விவரிக்கப்படுகிறார்கள்.
சொத்துகளை மாற்றித் தரும் நடவடிக்கை, பெண்களால் அடிக்கடி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாக இருந்தது. இது மதப் பின்னணியில் கொடையளிக்கும் செயல்பாடாக இருந்தது. பல பெண்கள் நிலவுடைமை பெற்றிருந்தவர்களாக விவரிக்கப் படுகிறார்கள். பெயர் குறிப்பிடப்பட்டவர்களில் பாதிப்பேர் கொடையளித்தவர்களாகவோ, அல்லது கல்வெட்டின் மையமான நபராகவோ இருப்பது, அவர்களது தற்சார்புத் தன்மையையும், அதிகாரத்தையும் தெளிவாக அடையாளங் காட்டுகிறது.