நடுவில்நாடு-நாடுகள் மற்றும் ஊர்கள் வரலாறு (பொ.ஆண்டு.மு.300 – பொ.ஆ.1300) – வஞ்சியூர் முனைவர் க.பன்னீர்செல்வம்
தமிழ்நாட்டின் வரலாற்றில் தொல்குடி ஆட்சியாளர்கள், அரையர்கள், சிற்றரசர்கள், சங்ககால மன்னர்கள் (கிமு. 200 – கி. பி300) பல்லவர்கால அரசர்கள் (கி.பி.586- 888) சோழர்கால மாமன்னர்கள் (கி.பி.846-1279) விசயநகரர் கால பேரரசர்கள், நாயக்கர் மற்றும் பாளையக்காரர்கள் ஆகியவர்கள் ஆட்சி செய்துள்ள நிலப்பகுதிகள் நடுவில்நாடு என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை அறிந்துகொள்வதற்கு இலக்கியங்கள், கல்வெட்டுகள், செப்புப்பட்டயங்கள் நாணயங்கள் முதலிய முதல்நிலை சான்றுகளாக அமைந்துள்ளன. இவற்றின் அடிப்படையில் முனைவர் க. பன்னீர்செல்வம், “நடுவில்நாடு – நாடுகள் மற்றும் ஊர்களின் வரலாறு (பொ.ஆண்டு.மு.300- பொ.ஆ.1300)” என்ற தலைப்பில் நூலை எழுதியுள்ளார். இதில் சங்ககாலம் முதற்கொண்டு ஆட்சி செய்துள்ள மன்னர்கள், தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த நிலப்பகுதிகள் நாடு அல்லது ஆட்சிப்பகுதி என்ற பெயரில் அழைக்கப்பட்டுள்ளதை விவரமாக விவாதித்துள்ளார். இவற்றின் எல்லைப் பகுதிகளையும், பெயர்களையும், பெயர்மாற்றமடைந்துள்ள முறைகளையும், சிறப்புகளையும், காலவரிசையின்படி வகைப்படுத்தியுள்ள இந்நூலின் ஆசிரியர் முனைவர் க.பன்னீர்செல்வம் அவர்களை முதலில் பாராட்டி மகிழ்கிறேன். இந்நூலின் ஆசிரியர் தொல்குடிகள், அரையர்கள், சிற்றரசர்கள், மன்னர்கள், மாமன்னர்கள், பேரரசர்கள் ஆகியோர்களின் வேறுபாடுகள் என்ன என்பதைப்பற்றியும். அவர்கள் ஆட்சிசெய்துள்ள நிலவியல் நிர்வாகப்பிரிவுகளின் பெயர்கள் எப்படி வேறுபட்டுள்ளன என்பதைப்பற்றியும், அவற்றின் தனிச்சிறப்புகளைப் பற்றியும் மிகத்தெளிவாகப் புலப்படுத்தியுள்ளார்.
எடுத்துக்காட்டாக சங்ககாலத்தில் ஆட்சியாளர்களாக இருந்த அருவாளர், ஓய்மான் என்ற தொல்குடிகளின் ஆட்சிப்பகுதிகள் அவர்களின் பெயர்களுடன் நாடு – என்ற பின்னொட்டுடனும், (அருவாநாடு, ஒய்மான்நாடு) இருங்கோளரையர், முனையரையர், வாணகோவரையர் என்ற அரையர்களின் ஆட்சிப்பகுதிகள் நாடு என்ற பின்னொட்டுடனும், (முனையரையர்நாடு) சேரர், சோழர்,பாண்டியர் என்ற வமிசவழி மன்னர்களின் ஆட்சிப்பகுதிகள் அவர்களின் வமிசவழிப் பின்னொட்டுடனும் (சோழநாடு, பாண்டியநாடு, சேரநாடு) அழைக்கப்பட்டுள்ளதை மிகத்தெளிவாக வேறுபடுத்திக்காட்டியுள்ளார். இந்நூல் தமிழ்நாட்டின் அரசியல் நிலவியலை அறிவதற்கு முயலும் அனைத்து ஆய்வாளர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
இந்நூலில் சோழர்கால நடுவில்நாட்டின் அரசியல் நிலப்பரப்பியலைப் பற்றி வரலாற்றுமுறையில் விரிவாக ஆய்வுசெய்துள்ளார். பலபுதிய செய்திகளை வெளிக்கொணர்ந்துள்ளார். பல ஆண்டுகளாக வரலாற்று நிலப்பரப்பியல் தொடர்பாக அவர் ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவற்றின் முழு உருவமாக இந்நூலைக் கருதலாம். தோராயமாக வடக்கே பெண்ணையாற்றுப் பள்ளத்தாக்கு தெற்கே வெள்ளாறு ஆகியவற்றின் இடையே அமைந்த நிலப்பகுதியே பொது ஆண்டு 1100ஐ ஒட்டி நடுவில்நாடு எனப்பெயர்பெற்றது. அதற்கு முன்னர் இப்பகுதியில் மிலாடு. திருமுனைப்பாடி, வாணகோப்பாடி போன்றபல குறுநில அரசுகள் ஆண்டுவந்தன. முதல் ராஜராஜன் காலத்தில் செய்யப்பட்ட சில நிர்வாக மாற்றங்கள் காரணமாக, குறிப்பாக குறுநில அரசுப்பகுதிகள் வளநாடுகளாக மாற்றப்பட்டதின் தொடர்விளைவாக இந்த நடுவில்நாடு உருவாயிற்று.
குறுநில ஆட்சிப்பகுதிகள் தவிர நாடு அல்லது கூற்றம் எனப்பட்ட சிறு சமூகநிலப்பிரிவுகள் பல பல்லவர் காலந்தொட்டே இருந்துவந்துள்ளன. அவற்றுள்ளும் அவ்வப்போது சில சிறுமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இவையாவற்றுக்கும் அடிப்படை நிலஅலகு ஊர் ஆகும். ஊர்களும் ஆங்காங்கு வாழும் சமூகங்களின் அடிப்படையில் ஊர், பிரமதேயம், நகரம், நல்லூர், தனியூர் என வகைப்பட்டன. இந்த நூலில் வளநாடு, நாடு, ஊர்கள் ஆகியவற்றில் காலந்தோறும் ஏற்பட்ட மாற்றங்கள் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன. அந்த விவரங்களுக்கு அடிப்படையான கல்வெட்டுச் சான்றுகளைத் தொகுத்து பல விரிவான அட்டவணைகளும் ஆசிரியர் சேர்த்துள்ளார். புதிய தரவுகள் மூலம் ஏற்கெனவே வரலாற்றுநூல்களில் நிலவி வரும் சில முடிவுகளைத் திறனாய்வும் செய்துள்ளார். காட்டாக மேற்கூர்நாடு மற்றும் மேற்காநாடு ஆகிய இரு நாடுகள் தொடர்பாக நானும் முனைவர் இல. தியாகராஜனும் குறிப்பிட்டுள்ள கருத்துக்களை மறுத்துள்ளார். இத்திறனாய்வு வரவேற்கத்தக்கது. ஆயினும் இவை மேலும் ஆய்வுக்குரிய முடிவுகள். இந்த நூலில் ஆசிரியர் கொடுத்துள்ள நிலப்படங்கள் நாடு, ஊர் முதலியவற்றின் அமைவிடங்களைத் தெளிவாக அறிந்துகொள்ள உதவும். பல புதிய ஆய்வுகளுக்கு இந்த நூல் தூண்டுதலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
வரைப்பட விவரங்கள்
1. நடுவில்நாட்டின் தற்கால அமைவிடம்
2. சோழர்கால நடுவில்நாடு
3. நடுவில்நாட்டுப் பகுதியில் செயங்கொண்ட சோழமண்டலம்
4. நடுவில்நாடு – வளநாட்டுப் பிரிவுகள்
5. நடுவில்நாடு – வளநாடுகள் (ஆ)
6. முற்கால சோழர்காலத்தில் சிறியநாட்டுப் பிரிவுகள் (..850-1001)
7. சோழர்காலத்தில் தொல்குடிகளின் நாட்டுப்பிரிவுகள்
8. நடுவில்நாட்டுப் பகுதியில் சோழர்கால அரையர்களின் அமைவிடம்
9. நடுவில்நாட்டுப் பகுதியில் சோழர்கால சிற்றரசர்களின் அமைவிடம்
10. பல்லவர் காலத்தில் சிறியநாட்டுப்பிரிவுகள் (..300-..1001)
11. பல்லவர் காலத்தில் தொல்குடிகளின் நாட்டுப்பிரிவுகள் (..775-..888)
12. பல்லவர் காலத்தில் அரையர்களின் நாடுகள் – பாடிகள் (..817-..850)
13. நடுவில்நாட்டுப் பகுதியில் சங்ககால நாட்டுப்பிரிவுகள் (..300-..300)
14. நடுவில்நாட்டுப் பகுதியில் பல்லவர்கால பாடல் பெற்ற ஊர்கள் (..550-.9.900)
15. நடுவில்நாட்டுப் பகுதியில் சங்ககால ஊர்கள்
16. தமிழ்நாடு – நடுவில்நாடு