தொல்காப்பியம், இன்றுவரை நமக்குக் கிடைத்துள்ள உலக மொழி இலக்கண நூல்களுள் காலத்தால் முதன்மையானதும், பொருண்மையால் முழுமையானதும் என்பதோடு மட்டுமின்றி, ஈடு இணை அற்றதும் ஆகும் என்பதை இந்நூலில் உள்ள இருபத்தேழு கட்டுரைகள் சான்றுகள் தந்து நிறுவுகின்றன. இது வெறும் புகழ்ச்சியோ, வெற்றுரையோ ஆகாது என்பது நூலைக் காய்தல், உவத்தல் இன்றிப் படிப்பார் யாவர்க்கும் தெளிவாகப்புலப்படும். தொல்காப்பியத்தின் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று அதிகாரங்களில் இருபத்தேழு இயல்களும் தெரிவிக்கும் கருத்துகள் கிரேக்க, ரோமானிய, ஆரிய, எபிரேய, இன்றைய மேலை ஐரோப்பிய மொழிகளின் மரபிலக்கண, மொழியியல் நூல்களில் காணப்படும் விளக்கங்களைக் காட்டிலும் அளவிலும் தரத்திலும் மிக உயர்ந்தவை. தொல்காப்பியத்தின் ஒப்பில்லாப் பெருமை தமிழின் உட்பகைவர்களாலும், புறப்பகைவர்களாலும் பலமுறைகளில் மறைக்கப்பட்டு வந்துள்ளதைத் தமிழகத்து ஆய்வவறிஞர்களும் இளந்தலைமுறையினரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே இந்நூலின் தலைநோக்கமாகும்.