‘கௌடலீயம் பொருணூல்’ என்னும் இம்மொழிபெயர்ப்பு நூலுக்கு முதனூலாக உள்ளது ‘கௌடலீய அர்த்த சாஸ்திரம்’ என்ற வடமொழிநூலாகும். இந்நூல், அதிகரணம் பிரகரணம் அத்தியாயம் என்ற மூவகைப் பிரிவினைத் தன்னுட் கொண்டதாகத் திகழ்கின்றது. அதிகாரமெனத் தமிழில் கூறப்படுவதுபோல், அதி கரணம் என்ற இவ் வடமொழிப் பெயரும், பல உட்பிரிவுகளைத் தன்னகத்தேகொண்ட ஒரு பெரும் பிரிவினை உணர்த்துவதாகும். இந் நூலில் நூற்றெண்பது சூத்திரங்கள் உள்ளன.
இச்சூத்திரங்களைப் பாடிய (பாஷ்ய) முறையில் விரித்து விளக்கும் ஒவ்வொரு சூத்திரப் பொருளே ஒவ்வொரு பிரகரணப் பொருளாக அமைந்துள்ளது. ஒரு பிரகரணத்தின் பகுதியையோ அன்றி, பல பிரகரணங்களின் தொகுதியையோ விரிவாக விளக்கிக்கூறும் பகுதியை அத்தியாயம் என வழங்குவர் முதனூலாசிரியர். சூத்திரமெனப்படும் பிரகரணங் கள் நூற்றெண்பதை விளக்கிக்கூறுவதாக நூற்றைம்பது அத்தியா யங்கள் இந்நூலில் அமையப் பெற்றுள்ளன. பிரகரணம் எனப்படும் ஒரு சூத்திரத்தின் பாடியமாகவுள்ள பொருள் பல கூறுபாடுகளைத் தன்னகத்தே கொண்டிருப்பின், அப்பொருளை அக் கூறுபாடுகளுக் கேற்ற முறையில் பல அத்தியாயங்களால் விளக்கிக் கூறுகின்றார். அதே நிலையில் பல பிரகரணங்களிற் கூறப்படும் பொருள்கள் தம் முள் நெருங்கிய தொடர்புடையவாயின், அப்பொருள்களை ஒரே அத்தியாயத்தாலும் சிலவிடங்களில் கூறுகிறார். ஆகவே நூற்றெண் பது சூத்திரங்களுக்குப் பாடியமாக அமைந்துள்ள (நூற்றெண்பது பிரகரணங்களைத் தன்பாற் கொண்ட) நூற்றைம்பது அத்தியாயங் களாம் உட்பிரிவினையுடைய பதினைந்து அதிகரணங்களாகிற பெரும் பிரிவினைக் கொண்டது இம் முதனூலாகும்.
மேற்கூறப்பட்ட பதினைந்து அதிகரணங்களின் பெயர்களையும், அவ்வதிகரணங்களில் விளக்கப்படும் பிரகரணங்களின் பெயர்களை யும் தொகுத்துக் கூறுவதாக இந்நூலின் முதல் அத்தியாயம் அமைந் துளது. எனவே, நூல் நுதலிய பொருளனைத்தையும் தொகுத்து விளக்கிக் கூறும் பதிகமாக இவ்வத்தியாயம் கூறப்பட்டிருக்கிறது எனப் பகர்தல் ஏற்புடையதாகும்.
ஒன்று முதல் ஐந்து வரையிலுள்ள ஐந்து அதிகரணங்களை ஒரு பகுதியாகவும், ஆறு முதல் பதின்மூன்று வரையிலுள்ள எட்டு அதிகரணங்களை ஒரு பகுதியாகவும், பதினான்காம் அதிகரணத்தை ஒருபகுதியாகவும் பதினைந்தாம் அதிகரணத்தை ஒரு பகுதியாகவும் கொள்ளும் இம்முறையால் மேற்கூறிய பதினைந்து அதிகரணங்களை யும் நான்கு கூறாகப் பிரிக்கலாம். இந்நான்கனுள் முதற்பகுதியாய் அமைந்த ஐந்து அதிகரணங்களில், ‘பயிற்சி பகர்தல்’ என்ற அதிகரணம் முதலாவதாகும். கல்விகற்றலைப்பற்றிக் கூறுதல் என்பது இதன்பொருள். காவற்சாகாடுகைத்தற்றொழிலை மேற் கொண்ட அரசன், கல்வியறிவு உலகியலறிவு முதலியவற்றைப் பெற்றவனாதல் வேண்டும். இன்றேல் உற்றார் உறவினருடன் அவன் அழிவெய்தி, நாட்டு மக்களையும் கேடுறச் செய்வான். இதுபற்றியே திருவள்ளுவரும் இறை மாட்சியை அடுத்து, ‘கல்வி ‘ என்ற அதி கர்ரத்தையமைத்து, அரசனுக்குக் கல்விப் பயிற்சியின் இன்றியமையா மையை வற்புறுத்தியுள்ளார். இவ்வதிகரணத்தில், அரசன் பயில வேண்டிய கல்வி வகைகள் அவற்றின் இயல்புகள், அக்கல்வியிற் சிறந்தோரைத் துணையாகக் கோடல், கேள்வியறிவு முதலியவற்றின் சிறப்பு, வருணாச்சிரம தருமங்கள், அத்தருமங்களின் வழீஇயினாரைத் தண்ட முதலியவற்றால் ஒறுத்து நன்னெறியுய்த்தல், பொறியடக்கத் தை மேற்கோளாத தாண்டக்கியன், இராவணன், துரியோதனன் முதலியவர்களை எடுத்துக்காட்டு முகமாக, பொறியடக்கத்தை அறிவின் பயனாக மேற்கொள்ளுதலை வற்புறுத்துதல், குடிமக்களின் தூய்மை தூய்மையின் மைகளை ஒற்றர்வாயிலாகத் தெளிந்து கொள்ளுதல், அமைச்சர் முதலியோருடன் செயன் முறைகளைப் பற்றிச் சூழ்ந்தறியும் முறை, நாளைப் பல கூறாக்கி, ஒவ்வொரு கூற்றிலும் அரசன் செய்யவேண்டிய கடமைகள், மனைவி மக்கள் முதலியோரால் தனக்கு நேரும் கேடுகளைப் போக்கிக்கொள்ளுதற் குரிய விதிமுறை, உணவுப்பொருளில் நஞ்சு கலக்கப்பெற்றிருத்தலைக் கண்டுகொள்ளு,தற்குரிய நெறிகள், முதலிய செய்திகள் விளக்கப்படுகின்றன.
இவ்வதிகரணம் 18 பிரகரணங்களை விரித்துரைக்கும் இந்நூலின் 20 அத்தியாயங்களைத் தன்பாற் கொண்டுள்ளது. முதலத்தியாயம் அதிகரணப் பிரகரணங்களின் பெயர்க்குறிப்பாக அமைந்துளதால் அதைச் சேர்த்து 21 அத்தியாயங்களுடன் முதலதிகரணம் முடிவுறுகிறது.
முதலதிகரணத்திற் கூறிய கல்வி கேள்வி முதலியவற்றைப் பெற்றுத் திகழும் அரசன், தன்னாட்டுக்கு வேண்டிய காரியங்களை, அவ்வத் தொழிற்றலைவர்மூலமாகவே நடத்தவேண்டியவனாகலின், அரசியல்வினை புரியும் தலைமையதிகாரிகளாக யார் யார் நியமிக்கப் பெற வேண்டியவர் என்பதையும், அவர்களுடைய செயன்முறைகள் எவை என்பதையும் விளக்குதற்குத் தொழிற்றலைவர்செயன்முறை என்ற அதிகரணம் இரண்டாவதாக அமைந்துள்ளது.
நாட்டையமைக்கு முறை, உழவர் உழவுத்தொழில்களைக் கண் காணித்தற்குரிய விதிகள், மனைவிமக்களைப் போற்றா தவர்க்குரிய தண்ட வகைகள், துறவு பூணுதற்குரியாரை விளக்குதல், நாட்டை விட்டு வெளியேற்று தற்குரியாரைக் களைந்து நாட்டினைக் காக்கும் முறை, வேளாண்மைத் தொழிற்குப் பயன்படாத நிலங்களைப் பல் வேறு வகையிற் பயன்படுத்தல், நாட்டிற்கு வேண்டிய அரண்வகை கள், இராசவீதி முதலியவற்றின் அமைப்பு அகலம் முதலியன, நகரத்தெய்வம், கொற்றவை, திருமால் முதலிய தெய்வங்களின் திருக்கோயில்களின் அமைப்புமுறை, சுடலை முதலியன அமைய வேண்டிய இடம், உணவுப் பொருளைச் சேமித்துவைத்துப் பயன் படுத்தல், நாட்டின் வருவாய் செலவுகளைச் சீர்செய்தல், அரசியல் வினையாளர் முதலியோரையாளுதற்றிறன், முத்து பவழம் முதலியன தோன்றுமிடம், அவற்றின் உயர்வு தாழ்வுகளைக் காணும் வழி, ஆகரத்தொழிலைப் போற்றுமுறை, நால்வகைப் படைகளில் குதிரை யானை முதலியவற்றிற்குரிய உணவுவகை அளவு முதலியன. படைத் தலைவர்களின் தொழின்முறை என்பனவாதிய செய்திகள் 38 பிர கரணங்களை விரிக்கும் 36 அத்தியாயங்களால் இவ்வதிகரணத்தில் கூறப்படுகின்றன.
கல்வித்துறைக் கண்காணிப்பு, அரசியலுறுப்புக்கள் முதலிய வற்றையுடைய அரசன் குடிமக்களைத் தீய நெறியினின்றும் விலக்கி நன்னெறியிலுய்த்தலைச் செய்யவேண்டிய கடப்பாடுடையனாகலின், ‘அறநிலையாட்சி’ என்ற அதிகரணம் மூன்றாவதாக அமைந்துள்ளது. அறநிலை = தத்தமக்குரிய அறத்தின் வழி நிற்றல். ஆட்சியாவது, அங்ஙனம் அந்நெறியில் நின்று, உலகியல் வழக்குகளைத் தீர்க்கும் அரசியலதிகாரிகளின் ஆளுதற்றன்மையாம். ஏற்று நடத்தற்குரிய வழக்குகள், ஏற்றற்குத் தகுதியற்றவை, வழக்குக்கு அடிப்படையாக வுள்ள எண்வகை மணம் தாயபாகம் முதலியவற்றினியல்புகள், பணியாளர் அடிமை முதலியவரை நடத்தவேண்டிய முறை, முறை பிறழ்ந்தார்க்குரிய தண்டவகைகள் முதலியன 19 பிரகரணங்களைக்
கொண்ட 20 அத்தியாயங்களால் இம்மூன்றாம் அதிகரணம் விளக்கு கிறது.
‘சிறுபகை களை தல்’ என்பது நான்காவது அதிகரணமாகும். இதனை ‘கண்டகசோதனம்’ என முதனூல் கூறும். கண்டகம் என்பது ‘ முள் ‘ என்றும் சோதனம் என்பது அதனை ஆய்ந்து நீக்கித் தூய்மை செய்தல் என்றும் பொருள்படும். நம் உடற் பகுதியில் முள் தைத்துவிடின், களையப்படாத அம்முள் நாளடைவில் உடலை ஊறு படுத்துவதுபோன்று, நாட்டிலுள்ள தச்சர் முதலிய சிற்பிகளாலும், அரசியலதிகாரிகளாலும் குடிமக்களுக்கு நேரும் இடரினைக்களையாது விடின், நாட்டிற்கே கேடு நேர்ந்து, அரசியலறம் சிதைந்தழியுமாகலின், அத்தீங்குகளையகற்றுதற்குரிய விதிமுறைகளை விளக்குதற்கு இவ் வதிகரணம் தொடங்கப்படுகிறது. கொல்லர், தட்டார், வணிகர், அரசியலதிகாரி முதலியவர்களால் குடிமக்களுக்கு நேரும் தீங்குகள், அவற்றைக் களை தற்குரிய உபாயம், தீ, வறுமை முதலிய தெய்வத் தாலான பேரச்சங்களின் வகைகள், அவற்றைத் தடுக்குமுறை, கள்வரைக் கண்டுபிடித்தற்குரிய உபாய வகைகள், நஞ்சு, கொலை, தூக்கிடுதல் முதலியனகாரணமாக விரைவிலிறந்தாரைப் பற்றிய ஆராய்ச்சி முதலிய செய்திகள் 13 பிரகரணங்களையுடைய 13 அத்தி யாயங்களால் இந்நான்காவது அதிகரணத்திற் கூறப்படுகின்றன.
அரசனுக்கும் நாட்டுமக்களுக்கும் இடர்விளைக்கும் உட்பகைவ ராயுள்ள சிற்றரசர் அரசியலதிகாரிகள் முதலியவரை, ஒற்றரைக் கொண்டு உணர்ந்த அரசன், அவர்களை வஞ்சக முறையால் மறைந்து ஒறுத்தடக்குவது என்னும் பொருள்பயக்கும் ‘வஞ்சித்தொறுத்தல்’ என்பது ஐந்தாவது அதிகரணமாகும்.
பொருளைக்கொண்டே நீக்குதற்குரிய துன்பத்தை அரசன் எய்தினனாக, அவனுக்குப் பொருள்நிலை குறைந்தநிலையில் குடி மக்களுக்கு எவ்வகையிலும் வெறுப்பு நேராத முறையில் அவர்களிட மிருந்து பொருளையீட்டுதற்குரிய வியக்கத்தக்க பலவகை உபாயங் கள், நற்குண நற்செயல்களையுடைய அமைச்சர் முதலிய துணைவரைப் போற்றும் முறை, அவ்வமைச்சர் முதலியோர் அரசரிடம் மேற் கொள்ளவேண்டிய ஒழுங்குகள், ஏதேனுமொரு காரணம்பற்றி அமைச்சர் முதலியோர்க்கு அரசுரிமை வந்தெய்தீன், அதை அரசன் மகனுக்கே உரியதாக்கல் என்ற தனித்தலைமையரசு முதலிய பொருள் கள், இவ்வதிகரணத்தில் தெள்ளிதிற் புலப்படுத்தப்படுகின்றன.
மேற்கூறியவாறு முதற்கூறாக அமைந்த இவ்வைந்து அதிகரணங் களால், அரசன் தன்னாட்டின் ஏமநலங்களைச் சூழ்ந்தறிந்து கையாள
வேண்டிய விதிமுறைகள் அறிவுறுத்தப்படுகின்றன. எனவே, தன்னாட்டில் எவ்வகையான இடையூறுமின்றிக் குடிமக்கள் அனை வரும் இன்புற்று வாழ்தற்கு இன்றியமையா தன வாகவுள்ள ஒழுக லாறுகளைத் தெளிவுபடுத்தும் பகுதி, ஐந்து அதிகரணங்களை யுடையது. இவ்வொழுகலாற்றினைத் ‘தந்திரம்’ என்பர் வடநூலார்.
தன்னாட்டிற்கு இன்றியமையா தனவாக வேண்டப்படும் செயன் முறைகளை முறைப்படச் செய்துமுடித்த அரசன்,தன் அரசாட்சியை மேலும் மேலும் விரிவுபடுத்திக் கொள்ளுதற்குரிய விதிமுறைகளைக் கையாளுதல் இயல்பாக வேண்டப்படுதலின், மண்டலயோனி என்ற ஆறாம் அதிகரணம் முதல் 13-ஆம் அதிகரணம் ஈறாக உள்ளதும் இரண்டாம் பகுதியாக மேற்கூறப்பட்டதுமான எட்டு அதிகரணங் களால், பகைநாடுகோடற்குரிய விதிமுறைகள் விரித்துரைக்கப் படுகின்றன. இவ்விதிமுறை ஆவாபம்’ என்று வழங்கப்படும்.
வெற்றிவிரும்பும் அரசன், பகைவர், நடுவன், அயலான் என்ற நால்வகை உறுப்புக்களின் தொகுதி, மண்டலம் எனப்படும். இது சந்தி விக்கிரகம் முதலிய அறுவகைக் குணங்களுக்கு மூலகாரண மாயிருத்தலின் மண்டலயோனி எனப்பட்டது. அரசு, அமைச்சு முத லிய எழுவகை அங்கங்களுக்குள தாம் நிறைவு இத்தன்மைத்து, பகை வரைக் களை தற்குரிய காலம் இடம் முதலியன இவை என்பவற்றை மண்டலயோனி என்ற ஆறாம் அதிகரணம் இரண்டு பிரகரணங்களைக் கொண்ட இரண்டு அத்தியாயங்களால் விளக்குவதாகும்.
அரசன்,
பகைவரைத் தன்வயப்படுத்திக்கொள்ள விரும்பும் அவர்களின் ஆற்றல் முதலியவற்றிற்கேற்ப, சந்தி விக்கிரகம் முதலிய அறுவகைக் குணங்களில் ஒன்றையோ, இரண்டு முதலியவற்றையோ, ஏற்றல் வேண்டும் என்பதைக் கூறும்பொருட்டு அறுவகைக் குணங் கள் என்ற ஏழாம் அதிகரணம் அடுத்து வைக்கப்படுகிறது. இதில், பகை களை தற்குரிய உபாயங்களான சந்தி முதலியவற்றிற்குள தாம் ஏற்றத்தாழ்வுகள், அவ்வுபாயங்களை யேற்றற்குரிய காலம் முதலியன, மேற்சேறற்குரியார் பலராயவிடத்து, மேற்சேறற்குரிய விதிமுறை, முதலியன கூறப்படுகின்றன.
‘விதனம் விளம்பல்’ என்பது எட்டாவது அதிகரணமாகும். விதனங்கள் துன்பந்தருவன. இவற்றின் இயல்பு, இருப்பிடம் முத லியவற்றைப் பற்றிக் கூறுதல் என்பது இதன் பொருள். பகைவ னது விதனத்தில் மேற்சேறல், பகைவனுக்கும் தனக்கும் ஒரே காலத் தில் விதனமிருப்பின், அவ்விதனங்களின் வன்மை மென்மைகளை
யாராய்தல், இவ்வாராய்ச்சியில், பல்வேறு முன்னையாசிரியரின் கொள்கைகளைக் கூறி மறுத்து, நூலாசிரியர் தம் கொள்கையைக் கூறுதல், வேட்டம், கடுஞ்சொல் முதலிய எழுவகை விதனங்களால் உண்டாம் குற்றங்கள், அவற்றின் சிறுமை பெருமைகள், நெருப்பு, நீர், வறுமை முதலியவற்றால் நேரும் துன்பங்களின் காரணங்கள், வகைகள், அவற்றைத்தடுத்தற்குரிய உபாயங்கள், அரசன் அமைச்சர் முதலியோர், பல்வேறுவகைப்படைகள் இவற்றுக்குளதாம் விதனங் களின் இயல்பு நீக்குமுறை முதலிய செய்திகள் இவ்வதிகரணத்தில் புலப்படுத்தப்படுகின்றன.
பகைவனுடன் போர் செய்ய முயலும் அரசன், போர் குறித்துச் செல்லுமுன் ஆராய்ந்து செய்யவேண்டிய செயன்முறைகளைப் பற்றிக் கூறுவதான ‘போர்ச்செலவு மேற்கொள்வோன் செயல்’ என்ற அதிகரணம் ஒன்பதாவதாகும்.
போர்ச்செலவு வகைகள், போர் வகைக்கேற்ற பருவங்களின் வரையறை, போர் குறித்துச் செல்லுமுன் தன்னாட்டின் பகுதிகளிற் காவலமைக்கும் முறை, படைகளை யியக்கும் நெறி, படைகளின் முயற்சி, எதிர்ப்படை வகுத்தலைப்பற்றிய விதிகள், போர்க்காலத்தில் உண்டாம் இடர்கள், அவற்றைக் களையும் முறை, முதலியவை இதில் 12 பிரகரணங்களைக் கொண்ட ஏழு அத்தியாயங்களால் கூறப்படு கின்றன.
போர் குறித்துப் புறப்படவேண்டிய நிலையிலுள்ள அரசன், போருக்கு முன்னும் பின்னும் மேற்கொள்ளவேண்டிய செயன்முறை களைப் போர்நிகழ்ச்சி என்ற பத்தாவது அதிகரணம் விளக்குவதாகும்.
பகைப்படையை நோக்கிச் செல்லும்போது, நீரற்ற பாலைவனம் முதலிய கடும்வழிச்செலவு முதலியவற்றால் தன் படைக்குண்டாம் துன்பங்களைப் போக்கிக் காத்தல், பாசறை யமைக்கும் முறை, படை களின் தன்மைக்கேற்ற போர்க்களவியல்புகள், போர் அணிவகுப்பு என்பவற்றின் வகைகள், பகைப்படையைத் தாக்குமுறை என்பவை இந்த அதிகரணத்தில் உரைக்கப்படுகின்றன.
குழூஉச்செயல் என்பது பதினோராவது அதிகரணமாகும். அம்பு, வாள் முதலிய படைக்கருவிகளைத் தம்மிடத்தே வைத்துக்கொண்டு, ஒன்றுகூடி அரசற்கு அடங்காது ஒழுகுவோரது கூட்டம், குழூஉ எனப்படும். அரசன், ஒறுத்தல் வேறுபடுத்தல் முதலிய உபாயங் களை மேற்கொண்டு, அக்குழுவினரால் நேரும் பல்வேறு இடர்களைப்
போக்கும் நெறிகள் இதில் புலனாகின்றன. இது 2 பிரகரணங்களை விளக்கும் ஒரு அத்தியாயத்தைத் தன்பாற் கொண்டுள்ளது.
அடுத்தது ‘ஆற்றலிலான் செயல்’ என்ற அதிகரணமாகும். ஆற்றல், படை முதலியவற்றால் தன்னினும் மிக்கான் ஒரு அரசன், தன்னுடன் சந்தியை விரும்பாதபோது, குறைந்த ஆற்றலுள்ள அரசன் மேற்கொள்ளவேண்டிய செயன்முறைகள் என்பது இதன் பொருள்.
தலையிடை கடையாய தூதுவரின் இயல்பு முதலியன, சந்தி செய்தற்குரிய விதிகள், அறிவுரை முதலியவற்றால் பகைவரைத் தன் வயப்படுத்தல், தீ, நஞ்சு முதலியவற்றைக்கொண்டு பகைவரைத் துன்புறுத்தும் முறைகள், பகைவருக்கு உணவுப்பொருள் முதலியவை கிட்டாதபடி தடை செய்தல் முதலியன இதில் 9 பிரகரணங்களை யுடைய 5 அத்தியாயங்களால் விரித்துணர்த்தப்படுகின்றன.
பகைவருடைய அரணை அடைதற்குரிய உபாயங்கள் என்னும் பொருள் தான ‘பகையரண் எய்தும் வழி’ என்ற அதிகரணம் பதின் மூன்றாவதாகும்.
பகை
அச்சுறுத்தல் முதலிய உபாயங்களை மேற்கொண்டு, யரணின்கண் உள்ளாரைத் தன்வயப்படுத்தற்குரிய வஞ்சக முறை கள், பகைவரை வெளியேற்றுதற்குரிய உபாயங்கள், பகைநாட்டின ருக்குத் தன்பாலுள தாம் ஐயுறவு முதலியவற்றை நீக்கி நம்பிக்கை யூட்டுதற்குரிய நெறிவகைகள் முதலியவற்றை இவ்வதிகரணம் விளக்கிக் கூறுவதாகும்.
இதுகாறும், தன்னாட்டைக் காத்தல், பகைநாடு கோடல் என்ற இரு பயனையடியொற்றி, மேற்கொள்ளவேண்டிய செயன்முறைகள் தனித்தனியே விளக்கப்பட்டன. இனி, அவ்விரண்டுக்கும் பொதுவாக வேண்டப்படும் செயன்முறைகளை, ‘மறைவுச் செயல்’ என்ற 14-ஆம் அதிகரணம் விளக்கிக் கூறும். இவ்வதிகரணம் மூன்றாம் பகுதியாக மேற் கூறப்பட்டது. பகைவரையழித்தற்குரிய மருந்து மந்திரம் முதலியவற்றைப் பகைவர் அறியாவாறு மறைவாக உப யோகித்தல் என்பது இதன் பொருள். பக்கத்திற்கு ஒருமுறை புசித்தல், திங்களுக்கொருமுறை புசித்தல், உருவமாறுபாடு, குட்டம் முதலிய
தொத்துநோய்வகைகளை யுண்டாக்குதல், உண்டான அவற்றை யகற்றுதல், இருளிலும் பொருளைக் காண்டல், பிறர்க்கு உருவம் தோன்றாவாறு இயங்குதல், காவலர் முதலியோரை உறங்கச்
செய்தல் முதலிய பலவகைச் செயல்களுக்குரிய மருந்துவகைகளையும், மந்திரவகைகளையும் இவ்வதிகரணம் விளக்கிக் கூறுகின்றது.
இனி, இப்பதினான்கு அதிகரணங்களால் கூறப்படும் பொருட் டொகுதியினை இனிது விளங்கிக்கொள்ளுதற்கு இன்றியமையாதன வாக வேண்டப்படும் முப்பத்திரண்டு உக்திகளை, இலக்கணங்களா லும் உதாரணங்களாலும் விளக்கிக் கூறும் நான்காம் பகுதியாகப் பதினைந்தாம் அதிகரணம் அமைந்துள்ளது. இவ்வாற்றான் நூற் பொருளமைதி ஒருவாறு கூறப்பட்டது.
தமிழ்மொழியினைச் சிறப்புற்று விளங்கச் செய்யும் நூல்களை முதனூல், வழிநூல் என்ற இரு கூறாகப் பகுப்பர். இவ்விரண்ட னுள் வழிநூல் என்பது தொகுத்தல், விரித்தல், தொகைவிரி, மொழி பெயர்த்ததர்ப்பட யாத்தல் என்று நால்வகைப்படும். இந்நான்கனுள் இறுதியிற் கூறப்பட்ட மொழிபெயர்த்ததர்ப்பட யாத்தல் என்பது பிறமொழியிலுள்ள பொருட்டொகுதியினை அவை கிடந்தவாற்றானே தமிழ்மொழியால் விளக்கிக் கூறுவதாகும். மொழிபெயர்த்தல் என்ற பெயரே, பொருட்பிறழ்ச்சி சிறிதேனும் ஏற்கற்பாலதன்று என்பதைப் புலப்படுத்தும். தமிழ்மொழியின் ஆக்கத்தில் நோக்கங் கொண்ட முன்னையாசிரியர், அதற்கு வேற்றுமொழிப் பொருளைத் தமிழில் மொழி பெயர்த்துரைத்தலையும் ஒன்றாக எண்ணி, அதனை வழிநூல்களின் வகையுட்படுத்திக் கூறுவாராயின், தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு இம் மொழிபெயர்ப்பின் இன்றியமையாமைதெள்ளிதிற் புலனாம். இச் சிறப்புப் பற்றியன்றோ, மேனாட்டவர் தந்தம் மொழி களுக்கு வளர்ச்சியைக் கருதி, திருக்குறள், சாகுந்தலம் முதலிய பிற மொழி நூல்களைத் தம் மொழிகளில் மொழிபெயர்த்துள்ளார்கள்!