நின்றும் நகர்ந்தும் நீராவியாலும் எண்ணெயாலும் இயங்கும் எந்திரங்களைக் கண்டுபிடித்த பிரித்தானியர் இவை ஓடுவதற்கான நில, நீர் வழி இருப்புப் பாதையையும் சாலையையும் பண்ணையாட்களின் உடலுழைப்பாலும் மக்களின் வரியாலும் உருவாக்கினார்கள். பிரித்தானிய இந்தியாவின் மதராஸ் மாகாணத்தை சென்னை, – தூத்துக்குடி, நாகப்பட்டினம் துறைமுகங்கள் வழியாக இங்கிலாந்துடன் இணைத்தார்கள். திராவிட மொழிகள் பேசும் கிராமங்களை Great Southern Trunk Road வழியாக மெட்ராஸோடு இணைத்தார்கள். இந்த நவீனப் போக்குவரத்துச் சாதனங்கள் கிராமந்தோறும் கட்டப்பட்ட சமத்துவமற்ற ஜாதிய அரசியல் பொருளாதாரக் கண்ணிகளை அறுத்து எறிந்தன. உற்பத்திக் கருவிகளான பண்ணையாட்களைக் கொத்துக் கொத்தாய் உலகெங்கும் கொண்டுசென்றதாலும் பிரித்தானியரின் நவீன அதிகாரத்தை ஆக்கிரமிக்க உழைக்காத ஒட்டுண்ணிகள் ஓடோடியதாலும் ஜாதிகள் உருமாறின. இந்த மாற்றங்கள் அனைத்தையும் இந்நூல் அலசி ஆராய்கிறது.
நவீனப் போக்குவரத்து, சமநிலையற்ற ஹிந்து சமூகத்தின் ஜாதியக் கட்டுக்களை அறுத்தபடி வளர்ந்துவந்ததை வரலாற்றுத் தரவுகள் மூலம் நிறுவும் அரிய நூல் இது. திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்கு இரயில் சென்றதை வரவேற்றுப் படைக்கப்பட்ட செந்தூர் ரெயில் வழிநடைச் சிந்து உட்பட பேருந்து, இரயில் போக்குவரத்து அனுபவங்களும் இந்நூலில் உள்ளன.