தமிழ்நாடு என்றால் வெறும் மொழியும் இனமும் ஒன்றிணைந்து இயங்குகின்ற ஒரு பெரிய நிலப்பரப்பு மட்டும் அன்று… சமயங்களும் தத்துவங்களும் சடங்குகளும் பெரும் நம்பிக்கையாகச் செயல்பட்டுவரும் உயிர் நிலம்! தமிழ் இலக்கணமும் இலக்கியமும் ஓர் இயக்கமாக வளர்ந்து வருவதுபோல், ஆதிகாலம் தொட்டு தமிழகத்தில் வளர்ந்துவரும் சமயங்களும், பல்வேறு காலமாற்றத்தைக் கடந்து, மக்கள் மனதிலும் பல மாற்றங்களை உண்டாக்கி, சர்ச்சைக்கும் ஆராய்ச்சிக்கும் உரிய பாதையாக தொடர்ந்துகொண்டு இருக்கிறது. ‘பண்பாட்டுப் பேரறிஞர்’ பேராசிரியர் தொ.பரமசிவன், சமயங்களில் புதைந்து கிடக்கும் அரசியலை, தன் புதிய ஆய்வு முறையின் மூலம் தோண்டி எடுத்து, இந்த நூலின் மூலமாக உலகின் பார்வைக்குப் படைத்திருக்கிறார். உலகில் தோன்றிய சமயங்கள் அனைத்தும் ‘பிறவாப் பெருநிலை’யைத் தேடி தத்துவங்களை உருவாக்கி இருந்தாலும், இந்தியச் சமய மரபு மட்டும், பிறப்பால் உருவாக்கப்பட்ட வருணப் பாகுபாடு, சுரண்டல், ஒடுக்குவாதம், அடிமைப்படுத்தல் போன்ற அம்சங்களைக்கொண்டு இழிவான இயக்கமாக மாறி வந்ததை இந்த நூலில் வெளிச்சமிட்டுக் காட்டி இருக்கிறார். இந்திய வைதீகம், பிறப்பால் மக்களைத் தாழ்வு படுத்தியது என்றால், பிற்பாடு வளர்ந்த சில சமயங்களும், ஆணுக்கு வேறாகவும், பெண்ணுக்கு வேறாகவும் தத்துவங்களை வகுத்துச் சொல்லி, செயல்பட்டு வந்திருக்கின்றன என்று உணர்த்துகிறார்! இந்தியத் தத்துவம், இந்தியச் சமயங்கள் ஆகியவற்றின் வரலாறு என்பது, ஒடுக்குகின்ற சாதிக்கும் ஒடுக்கப்படுகின்ற சாதிகளுக்கும் இடையிலான போராட்டம் என்பதே இந்த நூலின் கருத்து நிலை. இந்தக் கருத்தை, புத்தகங்களில் இருந்து மட்டும் தரவுகளாகத் தொகுக்கவில்லை… கல்வெட்டுகள், வழக்காறுகள், பழமொழிகள், கதைகள், நாட்டார் பாடல்கள் போன்ற வெகுஜன மக்களின் அதிகாரமற்றத் தரவுகளிலிருந்தும் தொகுத்து எழுதி இருப்பது இந்த நூலின் சிறப்பு. இதே நூலில் மற்றொரு பகுதியாக, தமிழகச் சமயங்கள் பற்றி நூலாசிரியருடன் பேராசிரியர் சுந்தர் காளியின் உரையாடல் இடம்பெற்றிருப்பது மற்றுமொரு சிறப்பு. ஆராய்ச்சி மாணவர்கள், ஆசிரியர்கள், சமய உணர்வாளர்கள் என பசி கொண்டவர்கள் வாசிக்கும்போது இது நூலாகத் தெரியாது… கடலாகத் தெரியும்!