தமிழக வேளிர்: வரலாறும் ஆய்வும்
சங்க இலக்கியங்களில் இடம்பெறுகின்ற வேளிர் ஓர் அரச குலத்தினர் ஆவர். அவர்கள் மிக முற்காலத்திலிருந்தே தமிழகத்தின் சில பகுதிகளை ஆண்டுவந்துள்ளதாகத் தெரிகிறது. உண்மையில், இவர்களே பேராசர்களான அதாவது சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர்களாக மாற்றம் பெற்றார்கள் எனவும் மூவேந்தர்கள் தமிழ் மண்ணின் ஆட்சியாளர்களாகத் தம்மை நிலைநிறுத்திக் கொண்ட பின் வேளிர்குலப்பெண்களை மணம் புரிந்துகொண்டதுடன் வேளிருக்குப்’ பல உரிமைகளையும் தகுதிகளையும் வழங்கினர் என்றும் சிலர் கருதுகின்றனர். அது தவறு. வேளிர்தாம் தொன்மை ஆட்சியாளர்கள், அவர்களில் சிலரும் வேந்தரின் மகள்களை மணம் புரிந்துள்ளதாகச் சில கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. வேளிர் சிலர் வேந்தர்களாகவும் வேந்தர் சிலர் வேளிராகவும் ஆகியிருக்கிறார்கள்.
இவ்விரு கூட்டத்தாரையன்றி வேறுபிற புதிய ஆட்சியாளர்களும் பழந்தமிழகத்தில் இருந்ததாகத் தெரிகிறது. இவர்கள் வம்ப வேந்தர் எனப்பட்டனர்?
வேளிர் குலத்தவர் அரசர் என்ற பொருளில் சங்க இலக்கியங்களில் “நாடு கிழவோர்” “கோ” அழைக்கப்பட்டுள்ளனர். ‘வேந்தரும் வேளிரும்’ என்று அழைக்கப்படும் வழக்கு அரசரும் அரச குலத்தவரும் என்று பொருள்படக்கூடும். ஆயினும் ‘வேள் அரசு’ என்று உரிமையுடையவர் வேளிர் குலத்தவரே.
பணைகெழு வேந்தரும் வேளிரும் ஒன்று மொழிந்து’
வேந்தரும் வேளிரும் பின் வந்து பணிய’
இருபெரு வேந்தரொடு வேளிர்
என்பன வேளிரும் வேந்தரும் இணைந்து செயல்பட்டனர் என்பதைத் தெரிவிப்பன.
சங்க காலத்தில் அரசகுடியின் அடையாளமாக மிளிர்ந்த வேளிர் பிற குடிகளின் எழுச்சி, ஏற்றத்தால் வீழ்ச்சி அடைந்தனர். அரசர்களும் தம் குடியைப் பேணுவதுபோல் பிற குடியினரைப் பேணத்தொடங்கிய காலநிலையில் வேளிர் பின்னடைவு பெற்றனர். காலப்போக்கில் வேளிர் குலத்தினர் தங்களின் தனி அடையாளத்தை இழந்து, தமிழ் ஆட்சியாளர்களில், அதாவது தமிழகச் சத்திரியர்களில் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட்டு விட்டனர்.
காலப்போக்கில் வேளிர் அல்லாத பிறரும் அரசுகளாகத் தோற்றம் பெற்றார்கள். இவர்கள் “உரிமை எய்தினோர்” என்று அழைக்கப்பட்டு நாலாம் குலத்திற்கு உரிமை கோரினார்கள்’ “உரிமை உடையவர்” என்பவர்க்கும் “உரிமை எய்தினோர்” என்ப வர்க்கும் மிகுந்த வேறுபாடு உள்ளது. இது பற்றி இதுவரை ஆராயப்படவில்லை.
தமிழக வீரயுகத்தை ஆய்வு செய்த ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வு எல்லையை வேந்தர்களுடன் வரையறுத்துக் கொண்டனர். வீரயுகத்தில் வேந்தர்களுக்கு முன்பாகவே ஆட்சியில் இருந்த வேளிரின் வரலாற்றைத் தெரிந்துகொள்வதற்குப் போதிய ஆய்வுத் தரவுகள் அவ்வாய்வுகளிலிருந்து கிடைக்கவில்லை.
வேந்தர்களுக்கு முன்பும் சமகாலத்திலும் வேந்தர்கள் ஆட்சிகளை இழந்த பின்னரும் பிற்காலத்திலும் ஆட்சிக் குடிகளாயிருந்தவர்கள்தாம் வேளிர் என்பதற்கான ஆய்வுத் தரவுகள் தற்காலத்தில் கிடைத்துள்ளன. வேந்தர்கள் போல் வேளிரும் முரசு, செங்கோல், வெண்கொற்றக்குடை, அவை, நால்வகைப் படைகள், கலைஞர்களை வாழ்வித்தல் போன்றவற்றைக் கொண்டிருந்தனர். இவற்றைச் சங்க இலக்கியங்களில் காணலாம்.
சங்க இலக்கியங்களை மையமாக வைத்து வேளிர் வரலாற்றை ஆராய்ந்த தமிழறிஞர்கள் சிலர் வேளிரைக் குறிக்கும் சில சொற்களில் உள்ள ஒலி ஒற்றுமைகளின் அடிப்படையில் அவர்கள் வேளாளராக இருக்கலாம் என்று எழுதிவிட்டனர்.
வேந்தர்களோடும் வேளிரோடும் நெருக்கமாயிருந்த கபிலர், பரணர், ஒளவையார் போன்றோரில் கபிலர் தெளிவாக வேளிரின் விழுக்குடிப் பிறப்பையும் சிறப்பையும் வீரயுகத்துக்கும் முன்பாகக் கொண்டுசென்றிருக்கிறார். அதன் அடிப்படையில் அமையும் ஆய்வுகள் வேளிரின் வரலாற்றைச் சிந்துவெளி நாகரிகத்துக்கும் இட்டுச் செல்லும் எதிர்கால ஆய்வுகளுக்கு வழி வருக்கும். இதற்கு உரையாசிரியர்களும் வழிவகை செய்துள்ளனர். வேளிரின் விழுக்குடிப் பிறப்பையும் சிறப்பையும் வேந்தர்களோடு அவர்கள் மணவுறவுகளை ஏற்படுத்திக் கொண்டதையும் பதிற்றுப்பத்தின் பதிகங்கள் தெளிவாகப் பதிவு செய்து வைத்துள்ளன. அவை போன்றே கல்வெட்டுகளும் பதிவு செய்துள்ளன.
இத்தகு தொல்லியல் சான்றுகளோடு வேளிரின் வரலாற்றை ஆராயத்தொடங்கிய தொல்லியல் அறிஞர்கள் வேளிரின் வரலாற்றில் தடுமாறியுள்ளதைக் காணமுடிகிறது. இவர்களின் ஆய்வு ஒருவகையான சார்பு ஆய்வாக அமைவதால் தமிழகத்தின் தொன்மையான இனக்குழுச் சமூகத்தின் உண்மையான வரலாற்றை இத்தகு தொல்லியல் அறிஞர்களின் ஆய்வுகளிலிருந்து அறிந்து கொள்ளக் கடினமாகவே உள்ளது. இந்நிலையில், வீரயுகக் காலக்கட்டத்தில் தொடங்கி, தொடக்ககாலத் தமிழ்-பிராமிக் கல்வெட்டுகளிலிருந்தும் அவற்றின் தொடர்ச்சியாக அமைந்த கல்வெட்டுகளிலிருந்தும் தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் போன்றவற்றிலிருந்தும் பிற்காலத் தமிழ் நூல்களிலிருந்தும் வேளிர் தொடர்பான தரவுகளையும் அவர்கள் வேந்தர்களோடு தொடர்புபடுவதையும் வேளாளர்களோடு இவ்விரு சாராரும் வேறுபடுவதையும் வேந்தர்கள் வேளிர் ஆவதையும் வேளிர் வேந்தராவதையும் தெளிவாக, வாலாற்றாய்வு முறையில் இந்நூலில் தொல்லியல் அறிஞர் நெல்லை நெடுமாறன் அவர்கள் திரட்டித் தந்திருப்பது எதிர்கால ஆய்வாளர்களுக்குப் பெரும் பயனை விளைவிக்கும் என நம்புகிறோம்.