சில வருடங்களுக்கு முன்பு ஆனந்த விகடனில்தான் “கோச்சை” என்ற வார்த்தையை முதலில் வாசித்த அனுபவம் எனக்கு. தவறாக சொல்லவில்லை என்றால் ஒரு வேளை ஆடுகளம் திரைப்படம் வந்த நேரமாக இருக்கலாம்.
ஆனால் ஆடுகளத்திற்கு முன்பே, மிகச் சிறிய வயதிலேயே எனக்கு ஓரளவு சேவல்கட்டு பற்றித் தெரியும்.
“காலங்காத்தால எதுக்கு இந்தக் கிளாந்தான்காரனுங்க சேவக்கோழிய புடிச்சிக், கம்முக்கட்டுல வச்சிக்கிட்டு அலையறானுங்க…”
“அது சண்டைச் சேவலு, பழக்கத்துக்கு உடுறானுங்க.”
அம்மாவும் அப்பாவும் பேசிக்கொள்ளும் போது, நாலடி அகலமும் ஆறு அல்லது ஏழு அடி நீளமும் கொண்ட ரயில்வே குடியிருப்பின் முன்பக்க ஹாலிலிருந்து எங்கள் வீட்டு வாசலுக்கு நேரே நின்றுகொண்டிருக்கும் இரண்டு மலாய்க்கார பெரியவர்களையும் அவர்களது கக்கத்தில் இருக்கும் சேவலையும் பார்ப்பது அப்படி ஒன்றும் சிரமம் இல்லை. சில நேரங்களில் எங்கள் வீட்டு வாசலுக்கு நேரே அந்தச் சேவல்களைப் பொருதவிட்டும் வேடிக்கைப் பார்ப்பார்கள்.
ஆக, என் சிறு வயதிலேயே கிளாந்தான் மாநில மலாய்க்காரர்கள் சேவல்சண்டை நடத்தியிருப்பதைப் பார்த்துவிட்டேனாக்கும். (அப்பா ரயில் ஓட்டுனர் என்பதால், நாங்கள் குடியிருந்த பகுதியில் வசித்த மலாய்க்காரர்கள் பெரும்பாலோர் கிளாந்தான் மாநிலத்திலிருந்து (மலேசியாவின் கிழக்குக்கரை மாநிலங்களில் ஒன்று)
மாற்றலாகி இங்கே வந்தவர்களாக இருப்பார்கள்.) அதன் பிறகு எண்பதுகளில் எங்களின் இந்தோனிசிய பங்காளிகள் மலேசியாவிற்கு வந்து சேர்ந்தார்கள் இல்லையா? அவர்கள் இந்த இடம் என்றில்லாமல், நினைத்த இடத்திலெல்லாம் கோழிகளை மோதவிட்டுக் கூட்டம் சேர்த்ததையும் பார்த்திருக்கிறேன்.
சேவல்களின் குப்பைமேட்டுச் சண்டையானது தனது வாழ்விடத்தைக் காப்பாற்றிக்கொள்ளவும், தனது துணை மீதான ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ளவுமாக நடைபெறும் ஒன்று. இப்படி குப்பைமேட்டில் போர் புரியும் சேவல்கள் தாங்களாகவே நிறுத்திக் கொண்டாலன்றி யார் போய் தடுத்தாலும், சண்டையை நிறுத்தாது என்பதையும் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். (வீட்டில் கோழி, ஆங்சா, வாத்து, வான் கோழி, முயல் எல்லாம் வளர்த்திருக்கிறோம்.)
இந்தக் காட்சியைக் குப்பைக்கோழியார் எனும் பெண்பாற்புலவர் குறுந்தொகையில் ஒரு பாடலாகக் கொடுத்திருக்கிறார்:
“குப்பைக் கோழித் தனிப்போர் போல
விளிவாங்கு விளியின் அல்லது
களைவோரிலை யாம் உற்ற நோயே” – குறுந்தொகை 305
விஷயம் இதுதான்:
தலைவிக்குத் தலைவன்மேல் காதல் வந்தாச்சு. ஆனால் வீட்டில் கட்டுக்காவல் அதிகம். அதிலும் தலைவிக்கு இவள் தோழியே காவல். தோழிப் பெண்ணோ நியாய அநியாயத்திற்குப் பயந்தவளாகையால் தலைவியானவள் தலைவனைப் போய்ச் சந்திக்க இடந்தராமல் காவலிருக்கிறாள். தலைவிக்கோ கோபமான கோபம். அந்தக் கையாலாகாக் கோபத்தில்தான் இப்படிச் சொல்கிறாள்:
குப்பை மேட்டில் சண்டையிடும் கோழிகள் சண்டையிட்டுக் கொள்ளும்போது, தடுக்கவும் விலக்கவும் யாருமற்ற நிலையில் தொடர்ந்து போரிட்டுச் செத்து விழுவது போல, என் காதல் நோயும் தலைவனைக் காண வழியின்றி, அதற்கு உதவ ஆளின்றி, இடையிட்டு அதனைக் களைவதற்கு இங்கு யாருமேயின்றி இருக்கிறது. தலைவனைக் காணாமல் காமநோயால் நான் வீழும் நிலை களைவார் இங்கு யாருமில்லை எங்கிறாள். மறைமுகமாக தன் நிலையைத் தன் பொற்றோருக்குத் தோழி மூலம் அவள் சொல்கிறாள் என்பதுதான் இங்கு செய்தி. கோழியைப் பற்றி உவமானம் கூறியதால், பாடலாசிரியருக்கும் குப்பைக்கோழியார் என்று பெயர்.
சங்ககாலப் புகார் நகரத்து மக்கள் இந்தக் கோழிகள் சண்டையிடும் விளையாட்டுகளை இரசித்திருக்கிறார்கள். சேவல்களை மட்டுமல்ல காடை, குறும்பூழ் ஆகிய பறவைகளுக்கும் போர்ப்பயிற்சியளித்து வளர்த்து வந்துள்ளனர் என்பது சங்ககால இலக்கியங்களில் காணக்கிடைக்கிறது. ’போர்வல் சேவல்’ என்று போரில் வெற்றிப் பெரும் சேவல்களை அடைமொழியிட்டுச் சிறப்பித்துள்ளனர்.
சரி. சங்ககாலத்திலிருந்து நிகழ்கால நடப்புக்கு வருவோம். மலேசியாவின் கெடா (கடாரம்) மாநிலத்தில் சேவல்கட்டு எப்படி நடக்கிறது என்று சிறிய கண்ணோட்டம் இங்கே:
சேவக்கட்டுக்கு என்றே தனியே கோழிகள் சிறப்பாக வளர்க்கப்படும். நெல், கோதுமை, இறைச்சி, கால்சியம் மாத்திரைகள் என்று போஷாக்குடன் வளர்க்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட சேவல்கள் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் இப்படிப் பராமரிக்கப்படும். போஷாக்கு ஒரு புறம் என்றால், தினம் தினம் அவற்றைச் சீண்டி ஆக்ரோஷப்படுத்துதல் ஒரு பயிற்சியாக நடக்கும்.
சேவல்களின் கால்களைக் கவனித்திருப்பீர்கள். ஒரு விரல் மட்டும் தனியே கூர்மையாக இருக்கும். அவற்றைச் சீவி மேலும் கூர்மை படுத்துகிறவர்களும் உண்டு (நேரில் பார்த்திருக்கிறேன்). ஆனால் காட்டு ஆட்டின் கொம்பை வெட்டி, கூர்மையாக்கி ஒரு சிறிய கத்திப் போல அதை உருமாற்றிச் சேவல்கள் காலில் கட்டுவது நடைமுறையில் இருக்கிறது.
இப்படிக் காலில் கத்தி சொருகப்பட்ட சேவல்கள் அல்லது கத்தி இணைக்கப்படாத சேவல்கள் என்று இரண்டு வகையான சேவல்களும் இந்த ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன.
உரிமையாளருக்கு இந்தச் சேவல்கள் ஒரு செல்லப்பிள்ளை போல. யாரைப் பார்த்தாலும் இந்தச் சேவல்களைக் கக்கத்தில் வைத்துக்கொண்டுதான் வருவார்கள். (உள்நாட்டவர், இந்தோனிசியர் என்கின்ற பாகுபாடு இதில் இல்லை).
போர் நாளில் என்ன நடக்கும் தெரியுமா?
முதலில் நன்கு பழக்கப்படுத்தப்பட்ட சேவல்கள் ஆடுகளத்திற்குக் கொண்டு வரப்படுகின்றன. அங்கே தன் எதிரி யாரென அடையாளம் கண்டபின்,
சேவல் 1: பேட்டை என்னுது தெரியுமில்ல…
சேவல் 2: பேட்டை உன்னுதா இருக்கலாம் ஆனா சேட்டை என்னுது…. தெரியுமில்ல…
மூன்றே மூன்று நிமிடங்களுக்கு இப்படித்தான் சிலிர்த்துக் கொண்டும் சீறிக்கொண்டும் நிற்பதைக் காண்கிறோம்.
மூன்று நிமிடங்களுக்குள் உசுப்பேற்றிவிட்டுக், கோழிகளின் உரிமையாளர்கள் அவற்றைப் பிடித்துக்கொண்டு போய் “தண்ணி” காட்டுகிறார்கள். தண்ணிகாட்டுதல் என்பது குளிப்பாட்டுதல் போன்ற ஒரு செயல்தான். நல்ல ஈரத்துணியால் பார்த்துப் பார்த்து ஒவ்வொரு இறக்கைகளிலும் ஈரப்படுத்துகிறார்கள். உடம்பும் ஈரப்படுத்தப்படுகிறது. அதன் பின்னரே ஆடுகளத்தில் விடப்படும்.
முதல் பதினைந்து நிமிடத்திற்கு வாழ்வா சாவா போராட்டம் நடக்கும். இந்தப் பதினைந்து நிமிடத்திற்குள் பெரும்பாலான ஆட்டம் முடிவுக்கு வந்துவிடும். எனினும் எதிராளியும் பலமாக இருக்கும் பட்சத்தில் ஆட்டம் நீடிக்கும். ஆனால் ஒவ்வொரு சுற்றும் பதினைந்து நிமிடங்களுக்கு மட்டுமே நீடிக்கும். பதினைந்து நிமிடங்களுக்கு ஆடுகளத்தில் நின்று சண்டையிட்ட கோழிகளை உரிமையாளர்கள் எடுத்து சென்று மீண்டும் “தண்ணீர் காட்டுவார்கள்”. காயங்களுக்கு “மிஞ்ஞாக் ஆங்கின்” போடப்படும். மரவேர்கள் ஊறவைக்கப்பட்ட தண்ணீரால் காயங்கள் கழுவப்படும். பதினைந்து நிமிட ஓய்வுக்குப் பின் மீண்டும் இருதரப்பும் மோதும்.
கோழி சண்டையில் வெற்றி தோல்விகள் எப்படி நிர்ணயிக்கப்படுகின்றன?
காலில் கத்தி மாட்டி விட்டிருக்கிறார்கள் இல்லையா? அந்தக் கத்திக்காயம் பட்டு எந்தச் சேவலாவது முதலில் இறந்தாலும் மற்ற கோழி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். எதிரி சேவல் செத்தால் மட்டுமல்ல, மயங்கி விழுந்தாலோ, ஆடுகளத்தைவிட்டு வெளியே ஓடிவிட்டாலோ கூட தோற்றதாக அறிவிக்கப்படும். அதிகம் ஏன், வலி தாங்காமல், ‘..க்ரோக்..’ என்று கத்திவிட்டாலே தோற்றதாகவே கொள்ளப்படும்.
உலகின் பல நாடுகளில் இந்தக் கோழிச்சண்டையைத் தடை செய்துள்ளனர். காலில் கத்தியைக் கட்டிக் கொண்டு எதிராளியோடு சண்டையிடுவதால், காயம் அடைவதால், கோழிகள் மன உளைச்சலுக்கு ஆளாவதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் கூறுகிறார்கள். இதை அவர்கள் சேவக்கட்டு என்று சொல்வதில்லை ரத்தப் போர் என்கிறார்கள்.
என்னதான் உலகின் பல பாகங்களில் இந்த ஆட்டம் தடை செய்யப்பட்டிருந்தாலும், சில இடங்களில் இது வதாட்டமாகவே இன்றளவும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.
கோச்சை என்றால் சேவல்கட்டு அல்லது கோழிசண்டையில் தோற்றுப் போன சேவல். உயிருடன் இருக்கும் பட்சத்தில் எதிராளி வீட்டு குழம்பு பானைக்கு போய்விடும். (பேசாம ஆடுகளத்திலேயே செத்திருக்கலாம்)
சரி சங்ககாலத்தில் நாம் காணும் இந்தச் சேவல்கட்டு, கடாரத்துக்கு வந்தது எப்படி? பலேம்பாங்கிலிருந்தா… அல்லது கடாரம் வென்ற சோழனோடு வந்தார்களே போர்வீரர்கள், அவர்களின் வாயிலாகவா அல்லது அண்டை நாடான தாய்லாந்திலிருந்தா? ஆராய்வதற்கு நிறைய விடயங்கள் உண்டு.