கிராமங்கள்தோறும் வீற்றிருக்கும் சுடலைமாடன், தீப்பாய்ந்த அம்மன், மாரியம்மன், இசக்கியம்மன் போன்ற ஊர்க்காவல் தெய்வங்கள் பற்றிய கட்டுரைகள்-கதைகளின் தொகுப்பு. திரௌபதி அம்மன், மங்கலதேவி அம்மன், தீப்பாய்ந்த அம்மன்கள், ஒத்தப்பனை சுடலையாண்டவர், எல்லைப் பிடாரி அம்மன் உள்ளிட்ட 36 கிராம தெய்வங்கள் குறித்த கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
மண்ணாலும், இரும்பாலும், மற்ற உலோகங்களாலும் செய்யப்பட்ட கிராம தெய்வங்களின் சிலைகள் உயிரற்ற பொம்மைகள் அல்ல; ஊர் மக்களின் கண்ணீரைத் துடைக்கின்ற கருணைமிக்க மனித வடிவங்கள் என்பதை ஒவ்வொரு கட்டுரையும் உணர்த்துகிறது.
மதுரை பாண்டி முனீஸ்வரர் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. பல்வேறு கதைகள் பாண்டி முனியைப் பற்றி இருந்தாலும், பேய் விரட்டும் பாண்டி முனி, சமயக் கருப்பு என அவர் குறித்து இந்நூலில் இடம்பெற்றுள்ள தகவல்கள் சுவாரசியமானவை. ஜாதி வேறுபாடின்றி அனைத்து சமூக மக்களுக்கும் குலதெய்வமாக அருள்பாலித்துவரும் சுடலைமாடன் குறித்த விரிவான கட்டுரைகள் அரிய தகவல்களைத் தருகின்றன.
இந்நூலுக்குப் பின்னணியில் பெரும் கள ஆய்வு, கடும் உழைப்பு இருப்பதை அறிய முடிகிறது.