தமிழ் மரபு அறக்கட்டளையின்
புதிய வெளியீடு
————————–++—–+———+————+-
“தமிழர் புலப்பெயர்வு: உலகளாவிய பயணங்கள், குடியேற்றங்கள், வரலாறு” எனும் நூலினை முனைவர் க. சுபாஷிணி, தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை மூலம் வெளியிட்டிருக்கிறார். ராயல் அளவில் 370 பக்கங்கள், விலை
ரூ 500, நேர்த்தியான தயாரிப்பு. வரலாறு நெடுக புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு இந்நூலினைக் காணிக்கையாக்கியிருக்கிறார்.
தமிழர்கள் இன்று 160 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளனர். தமிழர்களுக்கென்று ஒரு தனி நாடு இல்லை என்றாலும், தமிழர்கள் இல்லாத நாடு இல்லை எனலாம். உலகம் தழுவிய நாடுகளில் தமிழர்களின் இருப்பும் வாழ்வும் பெருமதியானதாக உருவெடுத்துள்ளன. இச்சூழலில் தமிழர்கள் இன்று “உலகத் தமிழர்” எனும் ஒரு புதிய அடையாளத்தை ஏற்றுள்ளனர்.
தமிழர்களின் இந்தப் பல நூற்றாண்டுக் காலப் புலப்பெயர்வை இந்நூலில் முனைவர் சுபாஷிணி ஆராய்ந்துள்ளார். இதனை நூலாசிரியர் பல்துறை கண்ணோட்டத்துடன் அணுகியிருக்கிறார். ஒரு புதிய வரலாறெழுதியலையும் சாத்தியப்படுத்தி இருக்கிறார். சுபாஷினி அவர்கள் தொகுத்துள்ள தரவுகளும், அவற்றை ஆழ்ந்து அலசும் நுட்பத் திட்பங்களும், எடுத்துரைக்கும் நடையியலும் தனித்துவமானவை. ஒரு தேர்ந்த முறையியலை இந்த நூலில் கையாண்டிருக்கிறார்.
இந்த நூல் ஒரு புதிய வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கிறது. மிகக் கடுமையான தேடுதலையும் உழைப்பையும் இதில் காண முடிகிறது. உலகத் தமிழர் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய நூல் இது. அறிவின் பயனாக இந்த நூல் மிளிர்கிறது.
நூலாசிரியர் சுபாஷினி அவர்கள் பல சிறப்புகளையும் விருதுகளையும் பெற்றவர். அவரது தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகம் பல சிறந்த நூல்களை வெளியிட்டுள்ளது. அனைத்தும் அறிவுப் பெட்டகங்கள். அவற்றில் “தமிழர் புலப்பெயர்வு” முதல் வரிசையில் நிற்கிறது. முனைவர் சுபாஷணியின் ஆய்வுப் பணிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்.