முந்நூறு இராமாயணங்கள்

முந்நூறு இராமாயணங்கள்

எத்தனை இராமாயணங்கள்? முந்நூறு? மூன்றாயிரம்? சில இராமாயண காவியங்களின் முடிவில் ஒரு கேள்வி எழுப்பப்படுகிறது: எத்தனை இராமாயணங்கள் இருந்து வருகின்றன? அதற்கு விடையளிக்க பல கதைகள் உலாவுகின்றன. அவற்றில் ஒன்று இங்கு.

ஒரு நாள் இராமன் தன் அரியணையில் அமர்ந்திருக்கும் போது, அவனது மோதிரம் கீழே விழுந்தது. மண்ணைத் தொட்டதும், அந்த மோதிரம் பூமிக்குள்ளே புதைந்து காணாமல் போனது. ராமனது பக்தனான அனுமன் அப்போது அவன் காலடியில் கிடந்தான். அனுமனைப் பார்த்து இராமன் சொன்னான், ‘பார் என்னுடைய மோதிரம் காணவில்லை. கண்டுபிடி’.

எவ்வளவு சிறிய துளையென்றாலும் அனுமனுக்குக் கவலையில்லை. காரணம், அவனால் சிறிதினும் சிறியதாகவும், பெரிதினும் பெரியதாகவும் தன்னை உருமாற்றிக் கொள்ள முடியும். ஆகவே அவன் வாமன உரு கொண்டு பூமிக்குக் கீழே சென்றான்.

அனுமன் சென்றான்… சென்றான்… அதள பாதாள உலகத்திற்கே சென்றான். அப்போது அங்கே இருந்த பெண்கள், ‘அட! இங்கே பாருங்கள். வாமன குரங்கு. மண்ணின் மேலிருந்து கீழே விழுந்துவிட்டது!’ என்று கூச்சலிட்டனர். அந்தப் பாதாள உலகின் அரசனான பூதத்திற்கு மிருகங்களைச் சுவைப்பதுமிகவும் பிடிக்கும். ஆகவே அவனின் இரவு உணவுக்காக, மிதவு காய்கறிகளுடன் அனுமதெனயும் அரு தட்டில் வைத்து மற்றுப்பினர். என்ன செய்வதென்று அறியாமல் அனுமன் திகிலுற்றான்.

இதே சமயம், பாதாள உலகின் மேலே பூமியில், ராமனைப் பார்க்க வசிஷ்டரும் பிரம்மாவும் வந்தனர். ‘ராமா நாங்கள் உன்னிடம் தனியே பேச வேண்டும். நாம் பேசுவதை யாரும் கேட்கவோ அல்லது தடங்கல் செய்யவோ கூடாது. பேசலாமா? என்று கேட்டனர்.

‘தாராளமாக. நாம் பேசலாம்’ இராமன் சொன்னான்.

‘அப்படியென்றால் ஒன்று செய். நாம் பேசிக் கொண்டிருக்கையில் யாரேனும் இடையில் நுழைந்தால் அவர்களின் தலை வெட்டப்படட்டும்’ என்றனர்.

‘அப்படியே’ இராமன் வாக்களித்தான்.

இவர்களின் உரையாடலை யாரும் தடங்கல் செய்யா வண்ணம் அரண்மனை வாயிலைக் காக்க யாரால் முடியும்? அனுமனோ மோதிரத்தைத் தேடச் சென்றுவிட்டான். வேறு யாரால் முடியும்? லட்சுமணனைத் தவிர அந்த நேரத்தில் வேறு யாரும் ராமனின் நினைவில் நிழலாடவில்லை. ஆகவே, லட்சுமணனை வாயில் காக்க ஆணையிட்டான். ‘யாரையும் உள்ளே அனுமதியாதே’ இராமன் எச்சரித்தான்.

லட்சுமணன் வாயில் காத்திருக்கும் போது விஸ்வாமித்திரர் அங்கே வருகிறார். ‘நான் ராமனைப் பார்க்க வேண்டும். மிகவும் அவசரம். இராமன் எங்கிருக்கிறான் சொல்!’ என்றார்.

‘இப்போது வேண்டாம். இராமன் தற்போது சிலரிடம் உரையாடிக் கொண்டிருக்கிறான்’ லட்சுமணன்.

‘என்னிடம் இருந்து மறைப்பதற்கு ராமனிடம் என்ன இருக்கிறது. இப்போதே நான் அவனைப் பார்த்தாக வேண்டும் விஸ்வாமித்திரர்.

‘உங்களை உள்ளே விடும் முன் ராமனிடம் நான் அனுமதி கோர வேண்டும்’ லட்சுமணன்.அப்படியானால் உடனே செய்’.

‘அப்படியும் நான் போக முடியாது. இராமன் வெளியே வரும் வரை நான் காத்திருக்க வேண்டும். நீங்களும்’.

‘இப்போது நீ உள்ளே சென்று என் வருகையை உரைக்கவில்லையெனில் அயோத்திய ராஜ்ஜியம் சாம்பலாக சாபமிடுவேன்’ என்றார் விஸ்வாமித்திரர்.

லட்சுமணன் சிந்தித்தான். ‘இப்போது நான் உள்ளே சென்றால் இறந்துவிடுவேன். செல்லவில்லை என்றாலோ, இந்த அகங்காரன் ராஜ்ஜியத்தை சாம்பலாக்கிவிடுவான். அதற்குப் பதிலாக நானே உள்ளே நுழைகிறேன்’ முடிவெடுத்தான்.

உள்ளே சென்றான். இராமன் கேட்டான், ‘என்ன விஷயம்?’

‘விஸ்வாமித்திரர் வந்திருக்கிறார்’.

‘உள்ளே வரச்சொல்’.

விஸ்வாமித்திரர் உள்ளே செல்லும்போது, அவர்களின் உரையாடல் முடிந்திருந்தது. பிரம்மனும் வசிஷ்டனும் ராமனைக் காண வந்ததற்கான காரணம், ‘இந்த உலகில் உன் வேலை முடிந்தது. உன் ராமாவதாரத்தை நீ விட்டொழித்து கடவுள்களின் உலகோடு வந்து சேரவேண்டும்’ என்பதைச் சொல்லத்தான்.

லட்சுமணன் ராமனிடம் சொன்னான், ‘அண்ணா, என் தலையைக் கொய்துவிடுங்கள்’.

‘ஏன்? என்னவாயிற்று? எங்களது உரையாடல்தான் முடிந்துவிட்டதே’ இராமன்.

நீங்கள் அப்படிச் சொல்லக் கூடாது. உங்களின் சகோதரனாக இருப்பதால் என்னை நீங்கள் தண்டிக்காமல் இருக்கலாகாது. என்னை விட்டுவிடுவதால் உங்கள் பெயருக்குக் களங்கம் ஏற்படும். உங்கள் மனைவியைக்கூட நீங்கள் விட்டு விடவில்லை. நீங்கள் அவரை வனத்துக்கு அனுப்பினீர்கள். ஆகவே நானும் தண்டிக்கப்பட வேண்டியவன், நான் அகல்கிறேன்’ லட்சுமணன் விடைபெற்றான்.லட்சுமணன், விஷ்ணு துயில் கொள்ளும் பாம்பான சேஷத்தின் இன்னொரு வடிவம். லட்சுமணன் சரயு நதிக்குச் சென்றான். வீழ்ந்தான். மாய்ந்தான்.

லட்சுமணனின் முடிவுக்குப் பிறகு, இராமன் தன் வழி நடப்பவர்களான விபீடணன், சுக்ரீவன் மற்றும் பலரையும் அழைத்துத் தன் இரு மகன்கள் லவ, குசன் ஆகியோரின் முடிசூட்டு விழாவுக்கு ஏற்பாடுகள் செய்தான். இறுதியில் ராமனும் சரயுவில் கலந்தான்.

இது அத்தனையும் நிகழ்ந்த போது, அனுமன் பாதாள உலகில்தான் இருந்தான். பூதம் தன் உணவைச் சுவைக்க ஆரம்பித்த சமயம், ‘ராமா, ராமா, ராமா…’ என்கிற முனுமுனுப்பு கேட்டது.

உடனே தன் தட்டைப் பார்த்துப் பூதம் கேட்டது, ‘யார் நீ’

‘அனுமன்’

‘அனுமன்? இங்கு ஏன் வந்தாய்?”

‘ராமனது மோதிரம் இங்கே விழுந்தது. அதைத் தேடிக் கொண்டு வந்தேன்’

இதைக் கேட்டதும் அந்த பூதம் ஒரு தட்டை எடுத்து வந்தது. அதில் ஆயிரக்கணக்கான மோதிரங்கள். எல்லாமே ராமனுடையது. அந்தத் தட்டை அனுமன் முன் வைத்துவிட்டுச் சொன்னது பூதம்.. ‘உன் ராமனின் மோதிரத்தைத் தேடி எடுத்துக் கொள்’.அந்த மோதிரங்கள் எல்லாமே ஒரே மாதிரியாக இருந்தன. ‘எது ராமனின் மோதிரம் என்று தெரியவில்லையே’ அனுமன் திகைப்புற்றான்.

பூதம் சொன்னது, ‘எத்தனை மோதிரங்கள் இருக்கின்றனவோ அத்தனை இராமன்கள் இருந்திருக்கிறார்கள். நீ பூமிக்குத் திரும்பும் போது ராமன் அங்கு இருக்கமாட்டான். ராமனின் அவதாரம் முடிவடைந்தது. எப்போதெல்லாம் ராமாவதாரம் முடிவுக்கு வருகிறதோ அப்போதெல்லாம் அவனது மோதிரம் இங்கே விழும். அதையெல்லாம் நான் சேகரித்து வைப்பேன். நீ போகலாம்’.ஒவ்வொரு ராமனுக்கும் ஒவ்வொரு இராமாயணம் இருக்கிறது என்று எடுத்துக்காட்டவே இந்தக் கதை அவ்வப்போது சொல்லப்படுகிறது.

இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாக எண்ணற்ற இராமாயணங்கள் தெற்கிலும் தென்கிழக்காசிய நாடுகளிலும் ஏற்படுத்திய தாக்கங்கள் நம்மை ஆச்சர்யத்துக்கு உள்ளாக்குகின்றன.

அன்னாமிஸ், பாலி, வங்காளம், கம்போடியன், சீனம், குஜராத்தி, ஜாவா, கன்னடம், காஷ்மீரி, கோட்டானீஸ், லாவோஷியன், மலாய், மராத்தி, ஒடியா, பிராகிருதம், சமஸ்கிருதம், சந்தாலி, சிங்களம், தமிழ், தெலுங்கு, தாய், திபேத்திய மொழி எனப் பல்வேறு மொழிகளில் பல்வேறு வகையான இராமாயணக் கதைகள் இருந்து வருகின்றன.

நூற்றாண்டுகளாக மேற்சொன்ன மொழிகளில் சில ஒன்றுக்கு மேற்பட்ட இராமாயணக் கதைகளைத் தன்னுள் உருவாக்கிக் கொண்டுவிட்டன. சமஸ்கிருதம் மட்டுமே கவிதையாகவோ, காவியமாகவோ, புராணமாகவோ இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட இராமாயணக் கதைகளைக் கொண்டிருக்கிறது. இவற்றுடன், நாடக வடிவிலோ,நாட்டிய நாடக வடிவிலோ, மரபு சார்ந்தோ அல்லது நாட்டார் வழக்காற்றியல் சார்ந்தோ புனையப்பட்டவற்றையும் கணக்கில் கொண்டால், இராமாயணங்களின் எண்ணிக்கை விண்ணைத் தொடும். மேலும், கற்சிற்பங்கள், செப்புப் பட்டயங்கள், பொம்மலாட்டங்கள், நிழல் கூத்து அல்லது பாவைக் கூத்து என தெற்கு மற்றும் தென்கிழக்காசிய கலாச்சாரங்களில் உள்ள இராமாயணப் புனைவுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

காமில் பல்க் எனும் இராமாயணம் கற்ற மாணவர் ஒருவர் முந்நூறு இராமாயணங்கள் இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்.

நிற்க, பதினான்காம் நூற்றாண்டிலேயே, குமாரவியாசா எனும் கன்னடப் புலவர் மகாபாரதக் காவியத்தை, தான் எழுதுவதற்கான காரணம், ‘இந்தப் புவியைத் தாங்குகிற பிரபஞ்ச சர்பம் பூமியில் உலாவுகின்ற இராமாயணக் கதைகளின் எண்ணிக்கையைத் தாங்க முடியாமல் புலம்பியதைக்கேட்டதால்தான்’ என்று சொன்னார் என்றால், அதில் நாம் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

பல்வேறு மொழிபெயர்ப்புகளும் மெத்தப் படித்த கல்வியாளர்களும் அளித்த தகவல்களுக்காகக் கடன்பட்ட இந்தக் கட்டுரையில், எனக்காகவும் மற்றவர்களுக்காகவும் பல்வேறு கலாச்சாரங்களில், மொழிகளில், சமயச் சடங்குகளில் உள்ள இந்த முந்நூறு இராமாயணங்கள் ஒன்றுக்கொன்று எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளன என்பதைப் பற்றிச் சொல்லப் போகிறேன்… எவை மொழிபெயர்க்கப்பட்டன, இடமாற்றப்பட்டன, நிலைமாற்றப்பட்டன என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

முந்நூறு இராமாயணங்கள் – ஏ.கே. இராமானுஜன் தமிழில்: ந. வினோத்குமார்
விலை: ₹100
Buy this book online:https://heritager.in/product/moonuru-raamayanangal/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908

Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4

தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://heritager.in/product-category/books/tamil/history/

#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers