“திரைகடலோடியும் திரவியம் தேடு” என்பது முன்னோர் வாக்கு.
சமூகம் வளர்ச்சியடைய வாணிகத் தொடர்புகள் அவசியம். தமிழர்கள் புதிது புதிதாக கண்டுபிடிப்புகளில் ஆர்வம் உள்ளவர்கள். மேற்கே கீரீஸ், ரோம் முதல் எகிப்து, சீனம் வரையில் கடலோடியப்பிழைப்பு நடத்தினர். மேலும் பாலஸ்தீனம், மெசபடோமியா, பாபிலோனியா ஆகிய நாடுகளுடன் வாணிகத்தொடர்பில் இருந்தனர். ஏலம், இலவங்கம், இஞ்சி, மிளகு ,பொன், வெள்ளி, யானைத்தந்தம், குரங்குகள், மயில் தோகை அகில் மரங்கள், இரத்தினங்கள் ஆகியன முக்கிய ஏற்றுமதிப் பொருளாக இருந்தன. வாணிகத்தொடர்பால் என்னென்ன விளைவுகள் உண்டாகின்றன? என்று இக் கட்டுரையின் கீழ் பார்ப்போம்.
துறை முகங்களும் அதன் அமைவிடங்களும்
இந்தியத்துறைமுகங்கள் வரலாற்றுக்காலத்தில், கிழக்குக்கடற்கரை மற்றும் மேற்குக்கடற்கரைகளில் அமைந்திருந்தது. இவை அனைத்திலிருந்தும் வர்த்தகம் நடைபெற்றதற்கான சான்றுகள் உள்ளன.
தென்னிந்தியாவிலிருந்து வட இந்தியாவிற்கும் கடற்கரை ஓரத்தில் சென்று வர்த்தகம் கடலின் மூலமாகவே செய்துள்ளனர், அதன் பிறகே நிலவழியில் வர்த்தகம் நடைபெற்றுள்ளது. மேலும் கடல் துறைமுகங்கள் இரு வகையாகப் பிரித்துக் கையாண்டிருக்க வேண்டும். ஏனெனில் பழங்காலத்தில் கடற்பயணங்கள் கப்பல் அல்லது பெரிய நாவாய்களின் வழியே இருந்தது இங்கு நினைவு கூறத்தக்கது. ஆகவே நிர்வாக வசதிக்காகப் பயணத்துறை முகங்களும் , சரக்கு துறைமுகங்களும் தனித்தனியேப் பிரித்துக் கையாண்டிருப்பர் என்பது என் கருத்து.
1. காவிரிபூம்பட்டினம்
காவிரியாறு வங்காள விரிகுடாவில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ள, சங்க காலத் துறைமுகமாகும். இது சோழர்களின் கட்டுப்பாட்டிலிருந்தது. காவிரிபூம்பட்டினம் பற்றியக் குறிப்புகள் பட்டினப்பாலையில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தென்கிழக்காசியா மட்டுமல்லாது மற்ற நாடுகளிலிருந்தும் என்னென்ன பொருட்கள் வந்து இறங்கின என்பதை அறியலாம்.
காலம் கிமு-300-கி.பி 300வரை கிபி 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவாரப் பாடல்களில் இப்பகுதி குறிப்பிடப்படுகிறது.
“நீரின் வந்த நிமிர் பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறிமூடையும்” (பட்டிணப்பாலை185)
வாணிகம் நிமித்தமாக மணிமேகலை யவணர்கள் வந்து வாழ்ந்ததாகப் பட்டினப்பாலைக் குறிப்பிடுகிறது. யவண இருக்கை என அழைக்கப்பட்டதாகக் (சில ம்பு 5-10).குறிப்பிடுகிறது. இந்த நகரை உருவாக்கியவர்களை யவணத் தச்சர் என அழைக்கப்பட்ட ரோமானிய நாட்டுச் சிற்பிகள் பயன்படுத்தப்பட்டதை மணிமேகலையில் காணலாம் (19.107.108).
உயர் வகைக் குதிரைகள், நிலம் வழியாகக் கொண்டு வரப்பட்ட மிளகு, வடக்கு மலையிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட அறியவகை வைரக்கற்கள் மற்றும் பொன், மேற்குத்தொடர்ச்சி மலைகளிலிருந்து அல்லது மேற்குப்பக்கமாக உள்ள மலைகளிலிருந்து பெறப்பட்ட சந்தனம், தெற்கே கடலிலிருந்து எடுக்கப்பட்ட முத்து, கிழக்குப்பகுதியில் உள்ள கடலில் இருந்து பெறப்பட்ட பவளம் ஆகிய அனைத்தும் இத்துறைமுகத்தின் வழியே வெளிநாடுகளுக்கு அனுப்பப் பட்டது. சில பொருட்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதிச் செய்யப்பட்டன.
கங்கை, காவிரி வளத்தால் விளைந்த பொருட்கள், காழகத்தில் உற்பத்தி செய்த உலோகப் பொருட்கள், பிற இடங்களிலிருந்து பெறப்பட்ட பல அரியவகைப் பொருட்கள், இத்துறைமுகத்திற்கு வந்து சென்றதை மேற்கண்டப் பாடல் எடுத்துரைக்கின்றது. இதன் மூலம் கடல் வாணிகம் மிகவும் செழிப்பாகவும், எப்போதும் சுறுசுறுப்பாகவும் இயங்கிக்கொண்டு இருந்ததையும் நாம் அறியலாம். இதன் மூலம் நாட்டிற்கு நல்ல வருமானம் கிடைத்திருக்கின்றது. ஏற்றுமதி இறக்குமதி வரி வசூல் செய்யப்பட்டிருப்பதை நாம் அறியலாம். சுங்கவரி விதித்திருந்ததைப் பட்டினப்பாலை பாடல் வரிகள் குறிப்பிடுகின்றன.”நீரின்றும் நிலத்தோற்றவும், நிலத்தினின்று நீர்பரப்பவும்” துறைமுகத்தின் மூலம் நிறைய வருவாய் பெற்றதோடு, புகார் நகரம் செல்வச் செழிப்போடு இருந்திருப்பதையும் நம்மால் உணரமுடிகின்றது. பல வகையான கப்பல்கள் வந்தன.
மேலும்,
“கூம்போடு ….
மீப்பாய் களையாது மிசைபாரம் தோண்டாது…” (அகநானூறு255:1-6)
சிறிய படகுகள் மட்டுமல்லாதுப் பெரிய கலன்களும் பாய்மரத்தில் கட்டப்பட்டிருந்தது. பாய்கள் களையாமலும் இறக்கப்பட்டன. இரவில் வந்து செல்லும் கப்பல்களுக்கு வழிகாட்டும் விதமாகக் கப்பல்களுக்குத் திசையினை உணர்த்தக் கலங்கரை விளக்கம் இருந்ததை “இலங்கு நீர், விரைப்பானர் கலங்கரை விளக்கம்” (சிலம்பு. 212:6) என்ற பாடல் வரியின் வாயிலாக அறியலாம்.
2. கொற்கை:
கொற்கைத் துறைமுகத்தில் முத்து வாணிகம் சிறப்பாக நடைபெற்றது, என்று புவியியல் அறிஞர்களான, தாலமி, பெரிப்ளூசு, பினைனி போன்ற வேற்று நாட்டவர்களின் குறிப்பிலிருந்து அறியலாம். கடல் வணிகம் முற்காலப் பாண்டியர்களின் ஆட்சியிலும், பிற்காலப்பாண்டியர்களின் ஆட்சியிலும் சிறந்து விளங்கியுள்ளது. முத்து ஏற்றுமதி நல்ல லாபகரமானத் தொழிலாக இருந்துள்ளது. மேலும் துறைமுகத்தின் மூலமும் சுங்க வரியாக வருமானம் ஈட்டியுள்ளனர். அதனால் தான் பாண்டியர் ஆட்சிக்காலத்தில் 25க்கும் மேலான துறைமுகங்களைக் கையாண்டுள்ளனர் என்பது தெளிவு.
ஏற்றுமதி இறக்குமதியைத் தவிர்த்து நாவாய்களைப் பழுது பார்க்கும் தொழிலையும் செய்து வந்துள்ளனர் . கப்பல்களைத் தரைப்பக்கம் அல்லது ஆழம் குறைவான பக்கத்திற்கு நகர்த்தி வந்து பழுது பார்க்க ஏதுவாகத் துறைமுகங்களுக்கு அருகில் கால்வாய்களை அமைத்து அதில் வைத்துப் பழுதுபார்க்கும் வேலைகளையும் செய்துள்ளனர்.
பாண்டியர்கள் காலத்தில் தான் மீன்பிடித் துறைமுகங்கள், வெளிநாட்டு சரக்குகளைக் கையாளும் துறைமுகங்கள், பயணத்துறைமுகங்கள் எனப் பிரித்து வைத்துள்ளனர். நான் நினைக்கிறேன் நிர்வாகம் செய்வதற்கு வசதியாக இவ்வாறு பிரித்து வைத்திருந்திருப்பர் என்று. மீன் பிடித்து விற்பதற்காகத் தனித் துறைமுகங்கள் அமைத்திருக்கின்றனர். மேலும் பிடித்த மீனை விற்றதுப் போக மீதியை உப்பிலிட்டுக் காய வைத்திருந்தனர். ஆனால் வேறுவிதப் பதனிடும் தொழில் நுட்பங்கள் வளர்ந்திருக்கவில்லை என்பது என் கருத்து.
கடற் துறைமுகங்களைத் தவிர்த்து ஆற்றுத்துறை முகங்களும் உள்நாட்டு வாணிகத்திற்குப் பயன் படுத்தப்பட்டன. மேலும் சிறிய நாவாய்கள் நடுக்கடலில் நின்ற கப்பல்களிலிருந்து சரக்குகளை எடுத்து வந்து கரையில் சேர்க்கவும் பெரிய கப்பல்களுக்கு வழிகாட்டவும் பயன்படுத்தப்பட்டன.
கடலைத்தவிர ஆறு,பெரிய குளங்கள், ஏரிகள் ஆகியவற்றிலும் அடிப்பாகம் தட்டையான சிறிய தோணிகள் மக்கள் பயணத்திற்கும் மற்றும் சிறுசிறு உள்ளூர் வணிகத்திற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு சிறப்பாகச் செயல்பட்ட துறைமுகம் இடைக்காலத்தில் வீழ்ச்சியடைந்தது. இப்பகுதியில் இருந்த “காயல்” என்றச் சிறு துறைமுகம் பின்னாளில் பெரிய அளவில் வளர்ச்சியடைந்தது.
3. முசிறி
கேரளக் கரையோரமுள்ள முசிறி என்ற நகரம் மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ள சங்க கால சேரர்களின் துறைமுகமாகும். சங்க இலக்கியங்களிலும் மேலை நாட்டு இலக்கியங்களிலும் பேசப்பட்ட துறைமுகமாகும்.
“யவனர் தந்த வினைமான் நன்கலம் பொன்னோடு வந்து ….” (அகம்.149).என்ற பாடல் மூலம் நாம் அறியலாம். கிரேக்க ரோமானியர்களின் இலக்கியங்களில் முசிறீஸ் எனக் குறிப்பிடுகின்றது. சேரமான் இமயவரம்பன் நெடுஞ்செழியன் (கி.பி 74-132) காலத்தில் இந்த நகரம் துறைமுகமானது, குறிப்பாக வியாபார நிமித்தமாக அரபு நாடுகளிலிருந்து இந்தியா வந்த கப்பல்கள் முசிறியில் வந்து இறங்கின, கடற்கொள்ளையர்களிடமிருந்து வணிகர்களைக் காப்பாற்ற சேரமன்னன் கேரள கடற் பகுதியை ஆழப்படுத்தி உதவி செய்தான் என்று கி.பி 150ல் தாலமி எழுதிய குறிப்பு சொல்கிறது.
செங்கல் கட்டிடங்கள், ரோம நாட்டு மது ஜாடிகள், தட்டுகள், கோப்பைகள், வட இந்தியப்பகுதியில் இருந்து வந்த சக்கரக்கருவியில் செய்த பண்டவகைகள், பச்சைவைரம் பதித்த ஜாடி வகைகள், இரும்புக்கத்திகள், கதவுக்கொண்டிகள், இரும்புத்தாதிலிருந்து இரும்பைப்பிரித்தெடுக்கும் மிஞ்சிய கழிவுகள்,சேரர்களின் சதுர,வட்ட தங்க நாணயங்கள், தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த சீனப்பீங்கான் ஆகிய பொருட்கள், அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளன.
இதன் மூலம் மேற்கண்ட பொருட்கள் இத்துறைமுகத்தின் வழியேப் புழங்கியுள்ளன என்பது தெளிவு. பெரியாறு தனது திசையை முற்றிலும் மாற்றிக்கொண்டதால், முசிறி துறைமுகம் போக்குவரத்து இல்லாமல் போயிருக்கலாம். மேலும் அதன் அருகிலேயே அமைந்தக் கூடங்கலூரில் இயற்கையாகவே அமைந்த துறைமுகமும் காரணமாக இருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து” (முசிறி-பட்டிணம்-தொல்லியல் அகழ்வு ஆராய்ச்சி கட்டுரை-மே15,2010)
ரோமானியர்களுக்குத் தேவையான அதிமுக்கியமான பொருளை ஏற்றுமதி செய்வதில் முக்கிய இடம் முசிறி துறைமுகத்தைக் குறிப்பிடுகிறார்- ரொபர்த்தோ தொம்பேர் தனது ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
4. அழகன் குளம்
அழகன் குளம் வைகை ஆறு வங்காள விரிகுடாக் கடலில் கலக்கும் இடத்திற்கு அருகில் இராமேஸ்வரம் தீவிற்கு வடமேற்கிலும் அமைந்துள்ளது. இது சங்க காலத்துறைமுகமாகும். ரோமானியக் காசுகள், மதுசாடிகள், சிவப்புநிற ரௌலட்டட் தட்டுகள், பாண்டிய நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கே உள்ள நாடுகளுடன் தொடர்புக்கு உதவிய மிக முக்கியத் துறைமுகமாகும். தமிழ் இலக்கியங்களில் இத்துறைமுகம் பற்றிய குறிப்புகள் பெரிதாக இல்லாவிட்டாலும், வெளிநாட்டு அறிஞர் தலாமியின் குறிப்புகள் உள்ளன.
இந்தத் துறைமுகத்திலிருந்து நெல் , அரிசி,உப்பு,அவழாகட்டு, பயித்தம் பருப்பு, அவரை, துவரை, ஆமணக்கு, எள், கடுகு, சீரகம், வெங்காயம், புளி, கருப்பட்டி,மஞ்சள் பாக்கு மிளகு,சுக்கு தேன் போன்ற பொருட்கள் தென்கிழக்காசிய நாடுகள் உட்படப் பல் வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
5. மதுரை
மதுரை நகரம் தற்போதைய மதுரை அல்ல, அது எங்கிருந்தது என்பதற்குச் சான்றுகள் இல்லை, ஆனாலும் தற்போதையக் கீழடி பழைய மதுரையின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. மதுரைக்கு வரும் பொருட்களாக அகில் துகில் ,ஆரம் கற்பூரம் போன்றவற்றைச் சிலம்பு குறிப்பிடுகிறது. (சிலம்பு14.107.112)
6. அரிக்கமேடு
இத்துறைமுகம் பாண்டிச்சேரிக்குத் தெற்கே எட்டு கிலோமீட்டர் தொலைவில் அரியாங்குப்பம் ஆற்றின் கரையில், வங்காளவிரிகுடாவிற்கு அருகில் அமைந்துள்ளது. கிமு 200 முதல் கி.பி 200 வரை புகழ் பெற்ற ஒரு வணிகத்தளமாக விளங்கியிருக்கிறது. இங்குச் சங்க காலச் செங்கல் கட்டிடங்களின் சிதைந்த பகுதிகள், ரோமானியப்பானை ஓடுகள், மஞ்சாடிகள் சங்க இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள வீரை முன் துறையுடன் அடையாளப் படுத்தப்படுகின்றது. அரிக்கமேட்டின் மணிகள் பாலி ,ஜாவா,வியட்நாம் மற்றும் தாய்லாந்து போன்ற தென்கிழக்காசிய நாடுகளுக்கு வணிகப்பொருள்களாக ஏற்றிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
வித விதமான வண்ண வண்ண மணிகள் செய்யும் ஆலைகளும் ,மீன் எலும்புகளால் செய்யப்பட்ட எழுத்தாணிகள் கிடைத்துள்ளன, பல ரோமானியர் மதுச்சாடிகளும், தங்கக் காசுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. இதிலிருந்து பன்னாட்டு வணிகம் நடைபெற்றது உறுதியாகின்றது.
7. சந்திரகேதுகர்
இந்தத் துறைமுகம் வங்க தேசத்தில் அமைந்த மிகப்பெரிய துறைமுகமாகும் கல்கத்தாவிற்கு வடகிழக்கில் அமைந்துள்ளது. இங்கு வட இந்திய மெருகேற்றப்பட்ட பானை வகைகளும், ரௌலட்டட் மற்றும் பல வகை பானை வகைகளும், பழங்கால கட்டிடங்களும் காணக்கிடைக்கின்றன. மிக நுண்ணிய துகள் வேலைப்பாடமைந்த தட்டுகள்,பானைகள் எகிப்து மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாகச் சான்றுகள் உள்ளன.
8. தாமிரலிப்தி
வடஇந்தியத்துறை முகங்களில் ஒன்று ,கங்கை நதி முகத்துவாரத்தில் அமைந்துள்ளது. தமிலுக், தம்லுக்கை என்றும் அழைக்கப்படுகின்றது. இந்தியாவின் கிழக்குப்பகுதியில் அமைந்திருப்பதால், கிழக்குப்பக்கம் உள்ள நாடுகள், தென்கிழக்காசிய நாடுகளுடன் தொடர்பு கொள்ள ஏற்றதாக இருந்திருந்தது. தென்கிழக்காசிய நாடுகளுக்குச் சென்றக் கடற் பயணிகளும் இத்துறைமுகத்தையே பயன் படுத்தினர். இங்கு சுடுமண் பொம்மைகள், பல் வேறு நாட்டுக்காசுகள், வரலாற்று தொடக்க காலச்சான்றுகள் கிடைத்துள்ளன.
9. நாகப்பட்டிணம்
தமிழகத்தின் காவிரி பூம்பட்டிணத்தின் அருகே அமைந்துள்ளது வங்காள விரிகுடாவின் கரையில் உள்ளது. குடுவையாறு கடலில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது. சங்ககாலம் முதற்கொண்டுப் பன்னாட்டு வணிக மையமாகத் திகழ்ந்துள்ளது. கீழை நாடுகளுக்கு அதாவது மலேசியா சிங்கப்பூர்,பர்மா,சீனா,இந்தோனேசியா, சுமித்ரா, ஜாவா போன்ற ஏராளமான நாடுகளைச்சேர்ந்த வியாபாரிகள் நாகைக்கு வந்து வியாபாரம் செய்துள்ளனர். கி.பி 9ஆம் நூற்றாண்றிற்குப் பிறகு பெரிய வணிக மையமாகவும், இடைக்காலத்தில் தென்கிழக்காசிய நாடுகளுடன் மிக நெருங்கிய தொடர்புடைய துறைமுகமாக விளங்கியது. நாகப்பட்டினம் துறைமுகம் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகள் பழமையான வரலாற்றைக் கொண்டதும் மற்றும் இலங்கையுடன் நெருங்கியத்தொடர்பும் கொண்டது.
“சோழ மன்னர்கள் நாகப்பட்டினம் வழியாகத்தான் இலங்கை, கடாரம், போன்ற நாடுகளை வென்றதாக வரலாறு கூறுகின்றது. நாகையிலிருந்து வெங்காயம், தானிய வகைகள் பல வண்ணக் கைவினைப் பொருட்களும் தென்கிழக்காசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன”.(#save nagapattinam port published 27/10/2017).
விளைவுகள்
ஒரு நாட்டு மக்கள் கடல் கடந்து வியாபாரம் செய்கிறார்கள் என்றால், அந்த நாட்டின் உள் நாட்டு வணிகம் சிறந்து விளங்கியிருக்க வேண்டும். தமிழகத்து வணிகம் செழித்தோங்கியிருந்தது எனலாம். வண்டி மாடுகளில், தம் பண்டங்களை ஏற்றிச்சென்று ஊரூராக விலைக் கூறுவர். இதனால் உள்ளூர் வணிகத்தின் செழிப்பை அறியலாம் மேலும் சங்க இலக்கியத்தில் தரவுகள் நிறையப் பார்க்கமுடிகின்றது.
விளைவுகள் என்று பார்க்கும் போது நன்மைகளும் உள்ளன, தீமைகளும் உள்ளன. நன்மைகளைப் பயன்கள் என்ற தலைப்பின் கீழ் வைப்பது பொருத்தமாக இருக்கும். ஆகவே வெளிநாட்டு வாணிகத்தால் என்னென்ன விளைவுகள் தமிழ் நிலத்தில் ஏற்பட்டன என்று பார்க்கலாம்.
முதலில் பொருட்களை வாங்க வரும் அல்லது விற்க வரும் வெளிநாட்டு வணிகர்கள் கடற்கரையுடன் போனதாக எந்தக்குறிப்பும் இல்லை, மாறாக அவர்கள் நாட்டிற்குள் வந்து சிறு, சிறு தொழிற்கூடங்களை வைத்திருந்திருந்தனர் எனப் பார்க்கும் போது, அவர்கள் தமிழ் மண்ணின் வளத்தைக்கண்டு இங்கேயே வாழத்தலைப் பட்டுள்ளனர், பின்னாளில் இங்குள்ள பெண்களை மணம் புரிந்துத் தமிழர்களுடன் கலந்து விட்டனர்.
”வந்தாரைவாழ வைக்கும் தமிழ் மண்“ என்ற பெயரைத் தமிழ் மண் இன்றுவரைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
பழைய வரலாற்றை எடுத்துப்பார்க்கும் போது ஆரியர்கள் முதன் முதலில் நாடோடிகளான அவர்கள் ஆடு,மாடுகளை மேய்த்த வண்ணம் நாடோடி வாழ்க்கை வாழ்ந்தனர். ஓர் இடத்தில் அவர்கள் நிலையாகக் குடியமர்ந்தது இந்தியாவில் தான். ஒரு போர் இல்லை, எந்தச் சண்டையும் இல்லை வியாபாரம் செய்ய வந்து, மெல்ல மெல்ல மொழி முதல் கலாச்சாரம் பண்பாடு மனநிலை என அனைத்தையும் ஆக்கிரமித்தனர், நம் நாகரீகத்தை நம்மிடமிருந்து அந்நியப்படுத்தி, எது தமிழர்கள் கலாச்சாரம் என்று தேடும் அளவிற்குப் புராணங்கள், இதிகாசங்கள் என அனைத்தையும் மாற்றி வைத்தனர்.
ஓர் இனத்தை அழிக்கவேண்டும் எனில் சண்டை, போர் என எதுவும் தேவையில்லை, அவர்களின் கலாச்சாரம் பண்பாடு அவர்களின் வரலாற்றை அழித்தால் போதும், அந்த இனம் தானே அழியும் அந்த முறையில் செய்வதற்குக் காரணமானது அன்னிய மக்களை நாட்டினுள் விட்டதே காரணம். மேலும் ஆரியர்கள் பலர் தமிழ்நாட்டில் நிரந்தரமாகக் குடியேறிவிட்டனர், மன்னர்களின் ஆதரவைத் தம் குடிக்கு நல்லாதரவுக்குப் பயன்படுத்திக் கொண்டனர். மக்கள் வழிபடும் கோவிலில் பூசை செய்யும் அதிகாரத்தைப் பெற்றனர், சமஸ்கிருதம் தெய்வ மொழி என்று ஏமாற்றினர்.
மேலும் வாழ இடம் கொடுத்த தமிழ் மக்களை இழிகுடிகளாக நினைத்தனர். சாதிகள் என்றால் என்ன வென்று அறிந்திராத அப்பாவி மக்களுக்கு நடுவில் சாதிகளைத் திணித்துத் துண்டாடினர். நோய்க்கிருமி எவ்வாறு தான் புகுந்த உடலை அழிக்குமோ அதைப்போல ஆரியர்கள் அவர்களை வாழ வைத்த தமிழர்களின் தனித்தன்மையை அழித்தொழித்தனர். அகத்திய முனிவரின் கதை, இராமயணக்கதை, கந்தப்புராணம் போன்ற பல கதைப்புனைவுகளின் மூலம் அனைத்தையும் ஆரிய மயமாக்கினர். ஆரியர்கள் தங்களின் மொழியுடன் தமிழைக் கலந்து பிராகிருதம் என்ற ஒரு புது மொழியை உருவாக்கினர்.
இந்தியர்கள் இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் அடிமையாக இருக்கக் காரணம் வெள்ளையர்கள். கிழக்கிந்தியக் கம்பெனி வியாபாரத்திற்காக நாட்டினுள் வந்ததே காரணம் இதனை யாரும் மறுக்கமுடியாது. வியாபாரம் செய்ய வந்தவர்களுக்கு நாட்டிற்குள் என்ன வேலை?. முதலில் தனக்குத் தனது பொருட்களை வைத்துக்கொள்ள இடமும் பிறகு படைகளும் என நச்சுக்கிருமிகள் போலப் புகுந்து நாடு மொத்தத்தையும் வளைத்துத் தங்களின் ஆட்சி, அதிகாரத்தின் கீழ் வைத்து மொத்த வளங்களையும் கொள்ளையடித்தனர்.
நமது நாட்டின் வளத்தைக் கேள்விப்பட்டே முகலாயர்கள் நாட்டிற்குள் படையெடுத்து வந்தனர். அவர்கள் செல்வங்களைக் கொள்ளையடித்தனர். மதமாற்றத்திற்குக் கட்டாயப்படுத்தினர்.
பயன்கள்
விளைவுகள் எவ்வளவு இருக்கோ, அதே அளவு நன்மைகளும் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. தென்கிழக்காசிய நாடுகளுக்கும் தமிழகத்திற்கும் தொடர்புகள் ஏற்படுத்தியது வணிகமாகும். வணிகர்கள் தான் பண்பாட்டுப்பரவலுக்குக் காரணமானவர்கள் இந்திய இலக்கியங்களில் தென்கிழக்காசிய நாடுகள் சுவர்ணபூமி என்று அழைக்கப்படுகிறது..
துறைமுகம் ஒரு பகுதியில் அமைந்துள்ளது என்றால் அங்குப் பல நாட்டு வணிகர்களின் புழக்கமாக இருக்கும், அந்தப்பகுதியில் வாழும் மக்கள் பல மொழிகளைக் கற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்பும் அதிகமாக இருக்கும். மொழிப் பெயர்ப்பாளர்களின் தேவையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கலாச்சார,பண்பாட்டு புரிதல் ஏற்படும்.
சேரர்களின் காலத்தில் துறைமுகங்களின் வழியே பல மதக்குருமார்கள் உள்ளே நுழைந்து மன்னனின் அனுமதியுடன் தங்களின் மதங்களை இங்கு வளர்த்துள்ளனர். கடற்கரையோரங்களில் வழியே குடியமர்ந்த டச்சுக்கார்ர்கள், பிரஞ்சுக்காரர்கள் முதலில் மதக்குருமார்களை உள்ளே அனுப்பி மதத்தைப்பரப்பவே வந்து பிறகு நாட்டை ஆண்டனர் என்பது நாம் அனைவருக்குமே தெரிந்த வரலாறு. ஆனால் அவர்கள் மதத்தைப் பரப்ப நமது தாய் மொழியைப்படிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். அதனால் பல இலக்கண நூல்கள் இயற்றினர். இந்தியாவிற்கு வருவதற்கு முன்னமே அவர்கள் அச்சு எத்திரம் கண்டு பிடித்ததினால் அச்சினில் ஏற்றிட வசதியாக இருந்தது, நிறைய ஓலைச்சுவடிகளில் இருந்தத் தமிழ் இலக்கியங்களை அச்சில் ஏற்றி புத்தக வடிவத்திற்கு கொண்டுவர வழி செய்தனர். இந்தியக்கனிம வளங்களை கொள்ளையிட்டு ஐரோப்பாவிற்குக் கொண்டு செல்ல ஏதுவாக இரயில் பாதை அமைத்துப் பல முக்கிய நகரங்களை இணைத்தனர்.
நமது கலாச்சாரம் உலகெங்கிலும் பரவ வாணிகம் வழி செய்தது. இராமயண மகாபாரதக்கதைகள் மட்டுமல்லாது தேவாரம் , திருவாசகம் போன்றவை தென்கிழக்காசிய நாடுகளில் பரவி இன்றும் போற்றப்பட்டு வருவது சிறப்பு. மலேயா, தாய்லாந்து, இந்தோனேசியா பிலிபைன்ஸ் போன்ற தென் கிழக்காசியாவில் கனிசமான அளவில் தமிழ் வழித்தோன்றல்கள் இன்றும் வசித்து வருகின்றனர். குழந்தைகளுக்கு இன்றும் தமிழ்ப்பெயர்கள் சூட்டியிருப்பதைக் காணலாம்.
சங்க கால துறைமுகங்களின் இன்றைய நிலை
சங்க கால துறைமுகங்கள் எதுவும் இன்று பயன்பாட்டில் இல்லை. இயற்கைப் பேரிடர்களால் அழிந்தும், பல சிதைந்தும் போய் விட்டன. தமிழகத்தில் முக்கியத் துறைமுகமாகச் சென்னையும், வெகு சில உள்ளூர் சரக்குகளைக் கையாளத் தூத்துக்குடித் துறைமுகமும் பயன்பாட்டில் உள்ளன. வட இந்தியாவில் கல்கத்தாத் துறைமுகம், மும்பை, குஜராத் போன்ற இடங்களில் உள்ள துறைமுகங்கள் பெருமளவுச் சரக்குகளை ஏற்றுமதி,இறக்குமதி செய்கின்றன.
துறைமுகங்கள் வாணிகத் தொடர்புகளுக்காக மட்டுமல்ல, உலகமெங்கும் சமூகம் நல்ல பண்பட்ட, சீர்திருத்தப்பட்டச் சமூகமாக வளர்வதற்குக் கடல்கடந்த வாணிகம் பெருந்துணையாக இருந்திருக்கின்றது என்றால் அது மிகையல்ல. வாணிகம் மட்டுமல்லாது பண்பாடு, கலாச்சாரம், அரசியல் தொடர்புகள் அனைத்திற்கும் வழி வகுக்கின்றன. சேர,சோழ பாண்டியர்களின் காலத்தில் பரிசுப் பொருட்களுடன் தூதுவர்கள் செல்வதும் வழக்கமான ஒன்றாக இருந்திருக்கிறது.
இஃது அந்த நாட்டுடன் நல்ல நட்புரவுக்கும், வாணிகத் தொடர்புக்குமே ஆகும். மேலும் இன்று வரை தென்கிழக்காசிய மக்கள் தமிழர்களின் பண்பாட்டுடன் கலந்து விட்டதற்குக் காரணம் ,சோழர்களின் காலத்தில் பல ஆண்டுகள் அவர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது தான் காரணம். மன்னர்கள் வேற்று மதம் பரவுவது இவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்திலர் போலும்.
-வாசுகி குமாரவேல்
நூல் பட்டியல்
- தொகுப்பாசிரியர் அ.வீரமணி,2011,நாகப்பட்டினம் முதல்சொர்ணதீபம் வரை தென்கிழக்காசியாவில் சோழர்களின் கடற்பயணங்கள், தென்கிழக்காசிய ஆய்வு நிலையம்,சிங்கப்பூர்.
- www.vikadan .com”.(#save Nagapattinam port published 27/10/2017).
- டாக்டர்கே..கே பிள்ளை, தமிழக வரலாறும் மக்களும் பண்பாடும்2011,உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தரமணி சென்னை -600 113.
- முசிறி-பட்டிணம்-தொல்லியல் அகழ்வு ஆராய்ச்சி கட்டுரை-மே15,2010.
- தமிழக வரலாறும் மக்களும் பண்பாடும் பக்.11