காலனி ஆட்சியில் நல வாழ்வும் நம் வாழ்வும்

250

அலோபதி மருத்துவத்தின் வருகை, அதன் வளர்ச்சி, உள்நாட்டு மருத்துவத்தை முடக்கிய காலனிய அரசின் கொள்கைகள், சாதிபேதம் கலந்த மருத்துவமனை நிர்வாகம், மற்றும் சுகாதார சீர்கேடுகள் ஆகியவற்றை ஆழமான வரலாற்றுத் துல்லியத்துடனும், புள்ளிவிவரங்களுடனும் இந்நூல் விவாதிக்கிறது. காலனியத்தின் கொடூரமான அணுகுமுறையை காய்தல் உவத்தல் இன்றி அலசும் இந்தப் புத்தகம், மருத்துவ உலகைத் தாண்டி ஒவ்வொரு வாசகரின் சிந்தனையையும் தூண்டும் என்பதில் ஐயமில்லை.

Add to Wishlist
Add to Wishlist

Description

இந்த நூல் காலனிய மருத்துவ வரலாற்றைத் தமிழில் முன்னெடுத்துள்ள ஒரு முதன்மையான நூல், அரசியல் வரலாறு, சமூக வரலாறு, பண்பாட்டு வரலாறு, பொருளாதார வரலாறு முதலானவற்றை அறிந்து கொண்டுள்ள அளவிற்கு நாம் காலனிய காலத்தின் மருத்துவ வரலாற்றை அறிந்ததில்லை. அதிலும் தமிழில் அறியும் வாய்ப்பு கிடைக்கவில்லை . உதிரிக் கட்டுரைகளாக சில பொழுது எழுதப் பெற்றுள்ளன. வெவ்வேறு பொருள் சார்ந்து சில நூல்கள் உள்ளன. நேர்ப் பொருளில் ஒரு முழுமை நோக்கிய (holistic) பார்வையில் முழு நீள நூல் இதுவரை இல்லை. அந்த வெற்றிடத்தை இந்த நூல் நீக்குகிறது. அதனால் இந்த வகைமையில் முதல் நூல் எனும் சிறப்பைப் பெறுகிறது. நமது சூழலில் மருத்துவக் காலனியம் பற்றிய அனைத்துப் புள்ளிகளையும் இணைத்துப் பேசும் முதன்மையான நூலாக இது விளங்குகிறது.

இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கோடியான தமிழக மண்ணில், இருபது லட்சம் ஆண்டுகளாக மானுட வாழ்வின் தடங்கள் பதிந்துள்ளன. இவ்வளவு நீளமான வரலாற்றின் ஓட்டத்தில், பிரிட்டிஷ் காலனி ஆட்சியின் இருநூறு ஆண்டுகாலப் பிடிமானம், நமது மரபுகளையும் மாண்புகளையும் ஒரு அசுர வேகத்தில் புரட்டிப் போட்ட ஒரு காலகட்டமாகக் காட்சி தருகிறது. அவர்கள் இங்கே வந்து சேர்ந்தபோது, சிதறுண்டிருந்த ஏழு நூறுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை வென்றெடுத்து, ‘இந்தியா’ என்ற ஒற்றைக் குடையின் கீழ், ஒற்றை சட்டதிட்டத்தின் கீழ் வாழும் நிலையை உருவாக்கினர். இதன் விளைவாக, மக்கள் முதன்முறையாகப் ‘இந்தியர்கள்’ என்ற பொது அடையாளத்தை ஏற்றுக்கொண்டனர்.

இந்த பாரதூரமான காலனியம், நகரமயம், நவீனமயம், தொழில்மயம், மேற்கத்தியமயம் எனும் உட்கூறுகளின் வழியே, தேசத்தின் கட்டமைப்பில் வரலாறு காணாத திடீர் மாற்றங்களை நிகழ்த்தியது. இந்தக் கொந்தளிப்பான காலத்தைக் கடந்துவந்த பின்னரே, நாம் ‘பின்காலனிய’ காலகட்டத்தைப் பற்றிப் பேச முடியும். நமது இழந்த மரபுகளையும், முன்னோர்களின் சாதனைகளையும் மீட்டெடுக்க, காலனியத்தின் எல்லாத் தளங்களிலும், அதன் மருத்துவ வரலாறு உட்பட, தீவிரமான விசாரணை இன்றியமையாதது.

“வரலாறு எழுதுவது அணுகுண்டு தயாரிப்பதை விடவும் ஆபத்தானது” என்கிறார் மார்க்சிய வரலாற்றறிஞர் ஹாப்ஸ்பாம்.

மருத்துவர் சு. நரேந்திரன் அவர்களின் இந்த நூல், ‘காலனி ஆட்சியில் நலவாழ்வும் நம்வாழ்வும்’, அந்தக் கண்ணோட்டத்தை நமக்குத் தரும் ஒரு அசலான கண்திறப்பு ஆகும். அரசியல், சமூகம், பண்பாடு எனப் பல தளங்களில் காலனிய ஆய்வு நடந்திருந்தாலும், அதன் மருத்துவ வரலாற்றை முழுமை நோக்கிய (Holistic) பார்வையில், தமிழில் வழங்கும் முதல் முயற்சியாக இந்நூல் விளங்குகிறது.

சங்ககாலத் தமிழர்களின் ‘நாவிதர் அறுவை மருத்துவம்’ முதல், பல்லவர், சோழர் காலத்து மருந்தகங்கள் வரை தமிழ் மருத்துவத்தின் நீண்ட நெடிய வேர்களை இப்பிரதி ஆராய்கிறது. அதற்கும் மேலாக, அலோபதி மருத்துவத்தின் வருகை, அதன் வளர்ச்சி, உள்நாட்டு மருத்துவத்தை முடக்கிய காலனிய அரசின் கொள்கைகள், சாதிபேதம் கலந்த மருத்துவமனை நிர்வாகம், மற்றும் சுகாதார சீர்கேடுகள் ஆகியவற்றை ஆழமான வரலாற்றுத் துல்லியத்துடனும், புள்ளிவிவரங்களுடனும் இந்நூல் விவாதிக்கிறது. காலனியத்தின் கொடூரமான அணுகுமுறையை காய்தல் உவத்தல் இன்றி அலசும் இந்தப் புத்தகம், மருத்துவ உலகைத் தாண்டி ஒவ்வொரு வாசகரின் சிந்தனையையும் தூண்டும் என்பதில் ஐயமில்லை.

– முனைவர் பக்தவத்சல பாரதி,
இயக்குநர்,
புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி
நிறுவனம்,
புதுச்சேரி.

Additional information

Weight 0.6 kg