தமிழரின் பண்பாடு பழக்கவழக்கமும் இன்றைய தாக்கமும்

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் உலகிற்கு முன்னுதாரணம். தமிழர்   சிறப்பான பண்பாட்டைப் பின்பற்றியுள்ளனர். அறிவியல்அறிந்திராத பழங்காலத்தில் எல்லா முறைகளுமே அறிவியலுடன் சம்பந்தப்பட்டே இருப்பது ஆச்சரித்தை அளிக்கிறது. பண்பாடு கலாச்சாரம் எனில்  உடையுடுத்துவதிலும், உணவு உண்ணுவதிலும் இருக்கிறது என நாம் நினைக்கிறோம்.

விளையாட்டு, தெய்வங்களைக் கும்பிடுவது, நம்பிக்கை, தமிழில் சொல்லப்படாத வாழ்வியல் செய்திகளே இல்லை என்னும் அளவிற்கு ஏராளமான செய்திகள் உள்ளன. அவற்றைப் பற்றி நாம் இக் கட்டுரையில் பார்க்கலாம்.

நாட்டுப்புற விளையாட்டுகள்

விளை + ஆட்டு= விளையாட்டு. விளை என்பது விருப்பம்,  ஆட்டு  என்பது ஆட்டம் விரும்பி ஆடும் ஆட்டம் என்பதாகும்.நாட்டுப்புற விளையாட்டுகள் உடலையும் உள்ளத்தையும் மலர்ச்சியாக, புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுகின்றன.விளையாட்டுகள் சிறுவர்கள்,சிறுமியர்கள் சேர்ந்து விளையாடும்  குழு விளையாட்டுகளாக இருப்பதால் அவர்களுக்குள் ஒற்றுமையும், விட்டுக்கொடுக்கும் தன்மையும், தலைமைத்துவ பண்புகள் வளர வாய்ப்பாக அமைகிறது.

பழங்காலத்தில்  சிறுவர் சிறுமியர் விளையாடிய இவ்வகை விளையாட்டே  போர், ஒற்றுமை, தலைமைப்பண்பு, பயமின்மை போன்ற பண்புகள் வளரக் காரணமாகியது. நாட்டுப்புற விளையாட்டுகள் மரபு, நில அடிப்படையில் வெட்சி என்பது ஆனிரைகளைக் கவரும் புற ஒழுக்கம்.

கவர்ந்த ஆநிரைகளை மீட்பது கரந்தையரின் இயல்பு, இதை அடிப்படையாகக் கொண்டு கண்டு பிடிக்கப்பட்ட விளையாட்டே கபடி. அரசியலை அடிப்படையாகக் கொண்ட விளையாட்டுகள். வரலாற்றுச் செய்திகளை அடிப்படையாகக் கொண்ட விளையாட்டுகள், காலம் சார்ந்த விளையாட்டுகளின் அடிப்படையில் மழைக்காலங்களில்  ஆடு புலியாட்டம், பல்லாங்குழி,பாண்டி போன்ற விளையாட்டுகள்.

உடற்பயிற்சி விளையாட்டுகள் நொண்டி விளையாட்டு, ஆயம், சடுகுடு, சிலம்பாட்டம்,கபடி போன்றவை. சிறுவர்கள் தண்ணீரில் மூச்சுப்பயிற்சி, உடற்பயிற்சி செய்வது போன்றது ஓரி விளையாட்டு. இன்றும் தமிழக கிராம நீர் நிலைகளில் இவ்விளையாட்டு விளையாடப்படுகிறது. மூளைக்கு வேலை கொடுப்பது போன்ற விளையாட்டு தாயம், ஆடுபுலியாட்டம்.

நாட்டுப்புற பழமொழிகள்

கிராம மக்களின் முதிர்ந்த அனுபவ மொழியே பழமொழி. இது ஒரு வாய்மொழி இலக்கியமாகும். முதுசொல், நெடுமொழி, பழஞ்சொல், மூதுரை, முன்சொல் எனப் பழமொழி மிகவும் தொன்மையானது. சுருங்கச் சொல்லல்……என்று நன்னூலும். அன்றெனமொழிந்ததொன்றுபடுகிளவி……..அகநானூற்றுச் சங்கப்பாடல்ளும் சுட்டியுள்ளன.

பழமொழியில் சொல்லப்படாத கருத்துக்களே இல்லை. சின்னச்சின்ன வரி வடிவங்களில் பிறர் மனம் புண்பாடத படி தங்களது அனுபவ கருத்துக்களை ழமாகவும், அழகாகவும் சொல்லிச் சென்றுள்ளனர். தன் காலத்தில்  வழக்கில் இருந்த நானூறு பழமொழிகளைத் தொகுத்து பழமொழி நானூறு என்னும் நூலை மூன்றுறையரையனார் எழுதியுள்ளனர்.

தொல்காப்பியர் காலம் தொட்டே பழமொழி வழக்கிலிருந்திருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.

உயிரினுஞ் சிறந்தன்று நாணே”(பொரு.113).

இக்காலத்தில் வழக்கத்திலுள்ள இருதலைக்கொள்ளி எறும்பு போல.. என்னும் பழமொழி அகநானூறு பாடல்களில் காணமுடிகிறது. 

இரு தலைக்கொள்ளி இடைநின்று வருந்தி…(அகநா.339.6-10).

பரிபாடலில்  களிறுபோ ருள்ள களம்போல நாளும்….(பரி.10:10-111). கழுதை புரண்ட களம் போல.. என்று இக்காலத்திற்கு ஏற்ப மாறி வந்துள்ளது.

சிலப்பதிகாரத்தில் 

“முற்பகற் செய்தான் பிறன்கேடு தன்கேடு.. பிற்பகற் கண்குறூஉம் பெற்றியகாண் நற்பகலே…(சிலப்.312629).

இக்காலத்தில்  “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்ற பழமொழி இன்றும் கிராமத்திலும், நகரத்திலும் பயன் படுத்தப் படுவதைக் காணலாம்.

திருக்குறளில் எண் இல்லாதவர் கண் இல்லாதவர், எழுத்து இல்லாதவர்

கழுத்து இல்லாதவர்.(கழக பழமொழி அகரவரிசை ப.95)
எண்ணெண்ப ஏனை எழுத்தென்பஇவ்விரண்டும்….(குறள்) 

“இறைக்க ஊறும்மணற்கேணி,ஈயப்பெருகும் செல்வம்” (க.ப.அ.,ப.72).

தொட்டணைத் தூறும் மணற்கேணி…(குறள்).

வானாக்கி வாழு முலகெல்லா மன்னவன்….(குறள்). 

“அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி” இப் பழமொழி இன்றும் வழக்கத்தில் உள்ளது.

நாலடியாரிலும் நிறையப் பழமொழிகள் காணக் கிடைக்கின்றன.”புலி பசித்தாலும்  புல்லைத்தின்னாது”

இடுக்கண் தலைவந்தக் கண்ணும் அரிமா…(நாலடி.141).

மேலும் இயற்கை, மனித குணம், விலங்குகள், பறவைகள்,மரம் செடி,சாதிமதம்,வேளாண்மை,கல்வி,பொருளாதாரம்,தெய்வ நம்பிக்கை, வானிலை. என ஏராளமான பழமொழிகள் வழக்கத்தில் உள்ளன.

நாட்டுப்புற தெய்வங்களும் வழிபாட்டு முறைகளும்:

நாட்டுப்புற மக்கள் வயல் வெளிகளில் வீடுகட்டிக்கொண்டு  இயற்கையோடு இயைந்த வாழ்கையை வாழ்ந்தனர். இயற்கை சீற்றங்களுக்குப் பயந்து  இயற்கையை வணங்கினர். (இடி, மின்னல், மழை,காற்று ஆகியவற்றால் தீங்கு ஏற்படாமல் இருக்க) .ஆவி தான் தீமைகளுக்குக் காரணம் என்றும், இறப்பிற்குப் பின் எங்குச் செல்வோம் என்கிற அச்சமுமே மக்களின் இறை நம்பிக்கைக்குப் பெரிய காரணமாக இருந்தது. நாட்டுப்புற தெய்வங்கள் கிராமத்திற்குக் கிராமம் வேறுபடும். கிராம தெய்வங்கள் இறந்த பெண்கள்,கிராமத்திற்கு நன்மை செய்து இறந்த வீரர்கள், இவர்களையே தெய்வங்களாக வழிபாடு செய்கின்றனர். வழிபாட்டு முறையும் சாதிக்கு சாதி வேறுபடும், ஆனால் இனக் குழுக்களுக்குள் ஒரே மாதிரி இருப்பதைப் பார்க்க முடிகிறது. நாட்டுப்புற தெய்வங்கள் ஆண்,பெண் தெய்வம் என்றும்,குல தெய்வம் ,ஊர் தெய்வம் என்றும்,  சாதி தெய்வம், எல்லை தெய்வங்கள் என்றும் பிரிக்கலாம். இறந்தோரின் ஆன்மாவை வழிபடுவதால், மாதா மாதம் அமாவாசை அன்று நீர் நிலைகளில் தர்ப்பணம் தருவதும்,அவர்கள் இறந்த திதியில் வழிபடுவதும்,வருடம் ஒருமுறை திவசம் தருவதும், முன்னோரின் கருணையும் பாதுகாப்பும் தங்களுக்குக் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இறந்தவரின் படங்களை வைத்து வழிபடுவது, அல்லது அவர் பயன்படுத்திய பொருட்களை வைத்து வழிபாடு செய்வது இன்றும் வழக்கத்தில் உள்ளது.கருவுற்ற பெண் இறந்து போனால், அவள் நினைவாகச் சுமைகல் நடப்பட்டு, வழிப்போக்கர்கள் தங்களின் சுமையை அக்கல் மீது இறக்கி வைத்து இளைப்பாறிச் செல்வது வழக்கமாக இருந்தது.

வீரக்கல் – போரில் இறந்த வீரர்களுக்கு நடப்படும் நடுகல். இதனை  அவ்வீரர் இறந்த மாதத்தில் வழிபாடு செய்வர்

திரௌபதை அம்மன் வழிபாடு, அங்காள பரமேசுவரி ,கூத்தாண்டவர் வழிபாடு, தமிழகத்தின் வடபகுதியிலும், ஐயனார், கருப்பண்ணசாமி வழிபாடு மதுரை இராமநாதபுரம் மாவட்டங்களில் காணப்படுகிறது.

சுடலைமாடன், இசக்கியம்மன், பிழைபொறுத்தஐயனார், முத்தாலம்மன், ஒண்டிவீரன் ஆகிய சிறு தெய்வ வழிபாடு, தென் தமிழகத்தில் இன்றும் வழக்கத்தில் உள்ளது.

நாட்டுப்புற நம்பிக்கைகள்:

நாட்டுப்புற மக்கள் பழக்கவழக்கங்களே நம்பிக்கைகளாக மாறுகின்றன. இந்த நம்பிக்கைகளே பிறப்பு முதல் இறப்பு வரை தொடர்கிறது கிராமத்தில் வாழ்பவர்களுக்கும், நகர்ப்புறத்தில் வாழ்பவர்களுக்கும் வாழ்க்கை முறையில் மாறுதல் போலவே பழக்க வழக்கங்களிலும் மாற்றங்கள் இருக்கிறன.

குழந்தை பற்றிய நம்பிக்கைகள்

குழந்தைகள் நள்ளிரவு, நடுப்பகலில் பிறக்கக் கூடாது. சித்திரை மாதத்தில் பிறந்த குழந்தை குடும்பத்தைப் பிரிக்கும் என்று நம்பினர். பரணியில் பிறந்தால் தரணி ஆள்வான் என்றும்,பூராடத்தில் பிறந்தால் போராட்டம் என்று நம்பினர். குழந்தை பிறக்கும் போது கழுத்தில் தொப்புள்கொடி சுற்றிப் பிறந்தால் தாய் மாமனுக்கு ஆகாது என்பதும் கிராம மக்களின் நம்பிக்கை. உணவு உண்ணும் போது நடுவில் நீர் அருந்தக் கூடாது. உண்ணும் போது பேசவோ படிக்கவோ கூடாது போன்ற பழக்கத்தை கடைப்பிடித்து வந்துள்ளனர். திருமணம் பேசி முடித்துவிட்டால் அதைமீறக்கூடாது. திருமணமான பெண்கள் வளையல் அணியாமல் இருக்கக்கூடாது.பெண்கள் காலை ,மாலை வீடு சுத்தம் செய்து விளக்கேற்றி வைத்தால் லட்சுமி அந்த இல்லத்தில் வசிப்பாள் என்பது நம்பிக்கை.

உழவுத்தொழிலை சார்ந்த திருவிழாக்கள், பொன்னேர் பூட்டுதல், சித்திரை திருவிழா, கார்த்திகை திருவிழா போன்றவை. திருவிழாக்கள் மாதந்தோறும் கொண்டாடும் வகையில் தமிழர்களின் வாழ்க்கை முறை அமைந்துள்ளது. சித்திரை பிறப்பிலிருந்து,பங்குனி உத்திரம் வரை.

நாட்டுப்புற சடங்குகள்:

நாட்டுப்புற மக்கள் சாதி அடிப்படையிலும், மதஅடிப்டையிலும் நிறையப் பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்கின்றனர். இவையே சடங்குகளாக காலப்போக்கில் உருவெடுக்கின்றன. காலப்போக்கில் கடைப்பிடிக்க எளிமையாகச் சடங்கு முறைகள் புதிய பரிமாண வளர்ச்சி கண்டுள்ளன. பிறப்பு முதல் இறப்பு வரை சடங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன. சடங்குகள் மூலம் ஒவ்வொறு இனத்தின் தனித்தன்மைகளை அறியலாம்.சடங்குகளை ஆராய்ந்து பார்த்தால் அதற்குப் பின்னால் உள்ள அறிவியல் உண்மை புலப்படும்.

குழந்தை பிறப்பு, பெயர்சூட்டுதல், காதுகுத்துதல், பூப்படைதல், திருமணம், வளைகாப்பு, அறுபதாம் கல்யாணம், இறப்பு, வீடு கட்டுதல், வண்டி வாகனம் வாங்குதல் போன்ற அனைத்து நிகழ்விலும் சடங்குகள்  பின் பற்றப்படுகிறது.

காது குத்துதல் என்னும் இச்சடங்கு, தாய் மாமன் மடியில் ஆண்/பெண் குழந்தைக்கு மொட்டை அடித்து காதுகுத்தும் சடங்கை நிகழ்த்துவர்.

பூப்பு நீராட்டு சடங்கு பெண்களின் வாழ்வில் முக்கிய சடங்காக நிகழ்த்தப்படுகிறது.

திருமண சடங்கு: திருமணம் ஆண்/பெண் வாழ்வில் சங்க காலத்தில் காதல் திருமணமாக இருந்தது. பின்னர் பெற்றோர் உறவு முறையிலோ,புதிய உறவிலோ பார்த்து திருமணம் செய்து வைக்கும் வழக்கு வந்தது.நல்ல நாள் பார்த்து இருவீட்டாரும் கூடி திருமணத்தை விருந்துடன் நடத்துவர். பின்னர் அழைப்பிதழ்கள் அச்சிட்டு வழங்கும் வழக்கம் வந்தது.மங்கல இசைக்கருவிகள் முழங்கி, புரோகிதர்கள் வேதம் ஓதி, மணமகள் கழுத்தில் தாலி கட்டி திருமணச்சடங்கு நிகழ்த்தப் படுகிறது. திருமணச்சடங்குகள் சாதி, இனம், மொழி வாரியாக வேறுபடுகிறது.

மனித வாழ்வில்  முடிவுப் பகுதியாக வருவது இறப்பு சடங்கு. இறந்தவருக்கு அவரவர் சாதி சமய,இன வழக்கத்தின் படி எரிப்பது அல்லது புதைப்பது வழக்கம். இறப்பு நடந்தவுடன், பங்காளிகள் முன்னின்று இறப்பை உறுதி செய்வர். பின்னரே மாமன் உறவு முறைகளுக்குச் சொல்லி அனுப்புவதே முறையாக கையாளப்பட்டு வருகிறது. பங்காளிகளும்,நண்பர்களும் அருகில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் எடுத்துவந்து  குளிக்க வைத்து  பின் புத்தாடை அணிவித்துப் படுக்கவைப்பர்.

பேரப்பிள்ளைகள் நெய்ப்பந்தம் பிடிப்பர். பிறகு பாடையில்  உடல் சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு கொள்ளி வைத்தல் சடங்கும், மறுநாள் பால் தெளித்தல், நான்காம் நாள் துக்கம், கருமாதி, முப்பது கும்பிடும் சடங்குகளும் நடைபெறுகிறது.

நாட்டுப்புற பண்டிகைகள்

மகிழ்ச்சியின் வெளிப்பாடு பண்டிகைகள்.வருடம் முழுவதும் உழைத்து வாழும் மக்கள் தங்களை மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்வது இந்த பண்டிகை நாட்களிலே தான். காது குத்துவது,திருமணம்,வளைகாப்பு, போன்றவை குடும்ப விழாக்களில் அடங்கும். கிராமத்தில் உள்ள அனைத்து சாதி பிரிவினரும் கொண்டாடும் கொண்டாடும் விழாக்கள்  பொது/ சமுதாய விழாக்கள்  ஆகும். இவ்வாறு இரண்டு வகையாக பிரிக்கலாம்.

சித்திரைத்  திருவிழா,வைகாசி விசாகம்,ஆடி பதினெட்டு,கார்த்திகை தீபம், தைப்பூசம், மாசிமகம், மகாசிவராத்திரி, பங்குனித் திருவிழா போனறவைகள் கடவுளர்களுக்கு எடுக்கப்படும் விழா பொது விழாக்களின் கீழ் வரும்.

பண்டிகைகள் வரிசையில் தைப்பொங்கல்,உழவர்கள் புது அரிசியில் பொங்கல் பொங்கி,சூரியக் கடவுளுக்கு நன்றி சொல்லும் விதமாகக் கொண்டாடப்படுவது பொங்கல். மறுநாள் மாட்டுப்பொங்கல் கால்நடைகளுக்குப் பொங்கலிட்டு படையல் போட்டு நன்றி சொல்லும் நாள். காணும் பொங்கலில் உறவினர்களைச் சந்தித்து மகிழும் நாள். தீபாவளிப்பண்டிகை ஆரியரின் வருகைக்குப் பின் வந்த பண்டிகை கிராமத்தில் கொண்டாடுவார்கள் ஆனால் பொங்கல் பண்டிகைக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் இருக்காது.

சிங்கப்பூர்,மலேசியாவில்தமிழ்ப் பண்பாடு.

புலம் பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளில் தமிழர்களின் பண்டிகைகள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக மலேசியா சிங்கப்பூரில் தீபாவளி,பொங்கல் பண்டிகை லிட்டில் இந்தியா முழுவதும் ஒரு மாதத்திற்கு முன்பே அலங்கார வேலைகள் ஆரம்பமாகி  கலைகட்டத் தொடங்கிவிடும். பள்ளிப்பிள்ளைகளுக்கு மாட்டுப்பண்ணையிலிருந்து மாடுகள்  வரவழைக்கப்பட்டு மாட்டுப் பொங்கலின் முக்கியத்துவம்  கற்றுக் கொடுக்கப்படுகின்றது. தீபாவளியும் பொங்கலும் சிங்கப்பூரில் பல இன மக்களும் சேர்ந்து கொண்டாடும் மகிழ்ச்சி கூட்டுப் பொங்கலாகவே கொண்டாடப் படுகிறது. ஒவ்வொரு சமூக மன்றங்களிலும் கோலப்போட்டிகளும், பொங்கல் பற்றிய பேச்சுப் போட்டியும், உறியடி போட்டியும் நடைபெறுகிறது. இதன் மூலம் இங்கு வாழும் மற்ற சமூகத்தினரும் தமிழர்களின் விழாக்களைப்பற்றி அறிய வாய்ப்பாகிறது.

திருவிழாக்களில் சித்திரை வருடப்பிறப்பு முதல்,பங்குனி உத்திரம் வரை தமிழர்கள் சிறப்பாகக் கொண்டாடுவதைப் பார்க்க முடிகிறது. 

இன்றைய தாக்கம்

குல தெய்வ வழிபாடு, இன்று குறைந்து வருகிறது. நகர்ப்புற வாழ்க்கையும்,புலம்பெயர்தலுமே காரணம். நாகரீக காலத்தில் நாமே நமது கலாச்சாரத்தை பெரிதாக மதிப்பு கொடுக்காமையுமே ஆகும். இன்னும் சிலருக்கு அவர்களின்  குல தெய்வமே எது எனத்தெரியாமல் இருப்பதே.

சிறுவர்கள், பெரியவர்கள் விளையாட்டுகள் மறைந்து விட்டன, கிராம மக்கள் வறட்சியின் காரணமாக நகர் புறங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் பிழைப்புத்தேடிச் செல்வதும் ஒரு காரணம். பிழைக்கச்சென்ற இடங்களில் பிள்ளைகள் விளையாட இடவசதி இல்லாததும் விளையாட்டு மறந்து போனதற்கு மற்றோர் காரணமாகும். நவீன காலத்தில் கணினி முன்பும், தொலைக்காட்சி முன்பும் அதிக நேரத்தைச் செலவு செய்ய நேரிடுகிறது. பள்ளியில் விளையாடுகிறார்கள், ஆனால் தானாக 4,5 சிறுவர்கள் சேர்ந்து கூடி விளையாடுவது அரிதாகின்றது.

குழந்தைகள் பற்றிய நம்பிக்கை அப்படியே வழக்கத்தில் உள்ளன. கண்ணேறு கழித்தல், சுற்றிப்போடுதல் போன்றவை. குழந்தை பிறந்தவுடன் ஜாதகம் கணிப்பது பலன் பார்ப்பது போன்றவைகள். திருமணம் வளர்பிறையில் தான் செய்வது என்னும் பழக்கம் இல்லை.

சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏனென்றால் அனைவரும் வேலைக்குச் செல்லும் சூழ்நிலை இருப்பதினால். பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணம் பெருவாரியாக இல்லை.காதல் திருமணம் தான். திருமணத்தில் பட்டுப்புடவை சிறப்பான இடத்தைப்பிடிக்கிறது. காது குத்துதல் கோவில்களில் நடைபெறுகிறது. ஆனால் தாய்மாமன் மடியில்  மடியில் காது குத்துவதில்லை. வளைகாப்பு முதல் குழந்தைக்கு மட்டும். பழமொழிகள் நிறையக் கிராமங்களிலேயே வழக்கத்தில் இல்லை.ஆனால் முக்கிய பழமொழிகள் நடப்பில் உள்ளன.”தாயைப்போல பிள்ளை…..””கற்றது கை மண் அளவு” போன்றவை.

தமிழர்களின் பண்பாடு, புலம் பெயர்ந்த தமிழர்கள் தங்களால் முடிந்தவரைக் காப்பாற்றிக் கொண்டே வருகின்றனர். இளைய தலைமுறையினருக்கு நமது பண்பாட்டை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்கிற பொறுப்பு மிகுந்துள்ளதே காரணம். தீபாவளி விழா,பொங்கல் விழா கொண்டாட்டங்களிலும். தேவாரம், திருவாசக வகுப்பு கூட்டங்களிலும் பார்க்க முடிகிறது. இன்றைய இளையார்களுக்கு  நவீன வசதிகளின் தாக்கம் இருக்கத்தான் செய்கிறது அதைத் தவிர்க்க முடியாது. பெற்றோர்கள் வீட்டில் தாய் மொழி பேசுவதை ஊக்குவிக்க வேண்டும். பண்பாட்டை கற்றுக்கொடுக்கவேண்டும். இதனால் நமது தலைமுறை பயன் அடையும் இது என் கருத்து. 

Leave a Reply