இலக்கியமும் தற்கால பெண்ணியக் கோட்பாடுகளும்

“பழங்காலத் தமிழ் இலக்கியங்கள் தற்போதைய பெண்ணியக் கோட்பாடுகளுக்குப் பொருந்தி வருவன அல்ல” இக்கருத்தை ஆராய்ந்து விளக்குக.

பொருளடக்கம்

முன்னுரை

பெண்ணியம்.

பழந்தமிழ் இலக்கியங்களில் பெண்ணியம்.

சங்க இலக்கியத்தில் பெண்களின் நிலை

இடைக்கால இலக்கியத்தில்பெண்களின் நிலை

காப்பியங்களில் பெண்களின் நிலை

பக்தி இலக்கியத்தில் பெண்களின் நிலை

சிற்றிலக்கியங்களில் பெண்களின் நிலை

முன்னுரை:

“பெண்ணாய் பிறந்திட மாதவம்  செய்திட வேண்டும்” என்பது சான்றோர் வாக்கு. இதனால் பெண்ணாய் பிறந்திட்ட அனைவரும் பெருமை அடையலாம். ஆனால் பெண்களின் உரிமைகளை முழுமையாகப் பெற்றுவிட்டார்களா? என்றால் கேள்விக் குறியே.   காலத்தையும் மக்கள் பழக்க வழக்கங்களையும், அந்தந்தக் கால இலக்கியங்களை வைத்தே நாம் அறிய முடியும். தமிழன் நாகரீகம் பெற்றவனாக வேண்டுமானால் இருந்திருக்கலாம்,  ஆனால், சமூகம் என்பது எப்படி இருந்தது எனில் அது ஆண்களின் ஆதிக்க காலமாகவே இருந்திருக்கிறது. ஆண்டான் அடிமை மாதிரியான ஓர் உறவு முறை. ஆண்டாண்டு காலமாக பெண் ஆணுக்கு என்றில்லை, அனைவருக்கும் அடிமையாகவே இருக்கிறாள். குடும்பப் பொறுப்புகள் ,பிள்ளைபெறுதல் ,அன்பு,பாசம் என எல்லா நற்குணங்களைப் பெற்றிருந்தாலும் ஏதோ ஒரு ரூபத்தில் யாருக்காவது அடிமையாகவே அடுத்தவர்களின் நலன் கருதி தன்னுடைய தேவையை சுறுக்கிக் கொள்கின்ற நிலைக்குத் தள்ளப் பட்டவளாகவே பெண் இருக்கிறாள்.

 பெண்ணியம்:

கி.பி19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பெண்ணியம் என்ற கோட்பாடு நவீனத்துவத்தின் சூழமைவில் எழுந்தது, பெண்ணியம்  ஓர் அறிவார்ந்த கொள்கையாகவும் போராட்டக் கருவியாகவும்  முன் வைக்கப்பட்டது.பெண்ணின்  நிலையிலிருந்து வாதங்கள் கருத்துக்கள் சொல்வது / எழுதுவது  பெண்ணியம்.  சமூக வரலாற்றில் , மக்களில் பல பகுதியினர் ஒதுக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் வந்தனர். அதற்கான காரண காரியத்தை வெளிப்படுத்தி அதன் வழி மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும், இதுவே பெண்ணியத் திறனாய்வின் நோக்கமாகும். பெண் பற்றியப் போலியான கருத்துரு வாக்கங்களை உடைத்தெறிவதும், பெண் அடக்கு முறைகளின்  பல வடிவங்களை வெளிக் கொணர்வதும், அடக்குமுறை, வன்முறை, புறக்கணிப்புகளுக்கு ஒரு மாற்றாக, மருந்தாக பெண்நீதி தேடும் நோக்கில் எழுந்தது பெண்ணியம்.

பழந்தமிழ் இலக்கியங்களில் பெண்களின் நிலை 

1.சங்க கால இலக்கியங்களில் பெண்களின் நிலை:

இலக்கியம் ஓர் இனத்தின் அடையாளமாகவும், முகவரியாகவும், வாழ்வியலை உணர்த்தும் கண்ணாடியாகவும் விளங்குகிறது. அகத்தையும், புறத்தையும் உள்ளடக்கமாகக் கொண்டது சங்க கால இலக்கியம். சங்க கால பாடல்கள் பெண்ணின் இயல்புகள், அவள் எப்படி இயங்க வேண்டும் என பல கருத்துக்களை கூறியிறுக்கிறது அவற்றை அக்காலத்திற்குரிய பெண்மையின் விளக்கமாக கொள்ளலாம்.

1.1.கலைகளில் பெண்களும் : கலைகளில் ஆடல் பாடல்  கூத்து போன்றவற்றில் பங்கு கொண்ட மகளீர் பாடினியர் என அழைக்கப்பட்டனர்.அவர்கள் வெறும் ஆடல் பாடல் களில் பங்கேற்று ஒரு நாடோடி வாழ்க்கையைத்  தான் வாழ்ந்திருக்கிறார்கள்.ஆனால், ஆண் கலைஞர்கள் பாணர், பொருநர்  போன்ற மதிப்பினை பெண்கள் பெறவில்லை. இதிலிருந்து கலைகளில் மதிப்பின்மைத் தெரிகிறது.

1.2.அழகுப் பதுமைகள்:’’பெண்களை வர்ணிப்பது புலமை நெறியாக இருந்தாலும் ,அது அவளைக் காட்சிப் பொருளாக ,நுகர் பொருளாகப் பார்க்கும் ஆணாதிகப் போக்கை இனம்காட்டி நிற்கிறது.” பெண்ணை ஆண் விலை கொடுத்துப் (ஐங்.147.3), அகம்.90:9-14).பெற்றுக்கொள்வதும்,அடிமையை விலை கொடுத்துப் பெறுவது போன்றதோ என எண்ணத் தோன்றுகிறது. இங்கு பெண்ணின் மதிப்பு குறைவு தெளிவாகத் தெரிகிறது.

1.3.தொழில்களும் பெண்களும்: கள்ளினைக் காய்ச்சி விற்பதை மேற்கொண்ட பெண்கள் ( அகம் 157:1-4) அரியற் பெண்டீர் எனப்பட்டனர். பூவிற்பது, உப்பு விற்பது, மோர்,நெய் விற்பது,திணைப்புனம் காப்பது,கால்நடை வளர்ப்பது,பயிர் செய்வது, (அகம். 390.8-11)தானியங்களை எதிர்காலத்திற்க்கு சேமிப்பது(கலி.106:44-45). தொழில் சார்ந்த  பெண்கள் அவரவர் நிலம் சார்ந்த தொழில்களைச் செய்து வந்தனர்.” இவர்கள்  இலக்கிய ரீதியாக முதன்மை படுத்தப்படவில்லை. உழைக்கும் மகளீர் மரபிலக்கியங்களில் ஒதுக்கப்பட்டவர்களாவர்.”

1.4.ஆண்-பெண் உறவு நிலை: வரைவின் மகளீர் எனப் பெண்கள் அடையாளப் படுத்தப்பட்டு இருப்பதிலிருந்து, சங்ககாலப் பெண்ணடிமைத் தனத்தை அறியலாம்.  கணவன் மறுமணம் புரிந்தாலும் அதனை வாழ்த்தி வரவேற்றலும் (ஐங்.292:2-5)பெண்ணின் நற்குணங்களாகவும் கற்பு என்றும் சொல்லப்பட்டது. பரத்தையிற் பிரிந்த ஆடவன் தன் தளர் நடை புதல்வனை நினைத்து இல்லம் திரும்புகிறான்(ஐங்.66.3-4) புதல்வியை விரும்பி அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. 

“இம்மை மாறி மறுமை யாகினும்.”..எனும் பாடல் வழி பெண்ணுக்கு மட்டுமே ஒருவனுக்கு ஒருத்தி என அறிவுறுத்தப்பட்டமையை அறியலாம்

போர்களும் பெண்களும்: “பொன்போல் புதல்வர் பெறாதீர்” போர் நடக்கும் இடத்திலிருந்து வேறு இடங்களில் வைக்கப்பட்டதை அறியலாம். போருக்காக வீரமறவர்களை ஈன்று புறந்தருதலே பெண்களின் தலையாய கடமையாகக் கருதப்பட்டது. பெண்கள் என்ன ஆண் பிள்ளைகளை பெறும் எந்திரமா?.அரசன் போரில்  தோல்வியடைந்தால் மாற்றான் அரசனால் துன்புறுத்தப்பட்டனர். இப் பெண்டீரின்  கூந்தலைக் கொய்து,அதில் கயிறு திரித்து, அதனால் யானையைக் கட்டியிழுத்து (பதி.8.4-10),(பதி.5.4-10 ),அவமதிக்கப்பட்டுள்ளனர்.

கல்வியும் விளையாட்டும்: பெண்களுக்கு கல்வி என்பது மிகச் சிறிய அளவில் கற்பிக்கப் பட்டிருக்கிறது. திணைப்புனம் காக்கும் போது பறவைகள் எண்ணுவதற்க்கு ,மோர் விற்கும் போது காசு கணக்கு பார்க்க, என்ற அளவிலேயே கற்றுத்தரப்பட்டிருக்கிறது. சிறு வயதிலிருந்தே வேலைகளிலேயே பழக்கப்பட்டு இருந்திருக்கிறார்கள். விளையாட்டும் சிறு வயதில் மட்டுமே அனுமதிக்கப்ட்டுள்ளனர், பிறகு ஆண் குழந்தைகள் மட்டுமே விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

“வினையேஆடவருக்கு உயிரே…

மனையுறை மகளிர்க்குஅடவர் உயிர்..

என்னும் குறுந்தொகைப் பாடல் வரியின் மூலம் ஆண்கள், கல்வி, தூது, பொருள்தேடல், போன்றவற்றிக்காக இடம் பெயர்ந்தனர். இவர்களைச் சார்ந்து வாழும் அடிமைகளாக பெண்கள் இல்லச் சிறையில் முடங்கிக் கிடந்தனர். ஆடவர்களை உயிராகக் கொண்டு வாழ  வேண்டும் என்று கட்டாயப் படுத்தப்பட்டுள்ளனர்.

அரசியலும் பெண்களும்: சங்ககால பெண்கள் அரசியலிலும், சொத்துடமைகளிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.ஆளுமைக்கு உரியவன் ஆணாகவே கருதப்பட்டான். “தாயின் வயிற்றிலிருந்து தாயம் எய்தி” எனும் பொருநராற்றுப்படை பாடல் மூலம் கரிகாலச் சோழன் தாயின் கருவில் இருக்கும் போதே அரசுரிமை பெற்றான் என்பதை அறியலாம்.  பாரி மன்னன் இறந்த பிறகு பாரி மகளீர் ஆட்சி அதிகாரத்தை இழந்து நிற்கதியாய் நின்றனர் என்பதை “அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்…என்ற வரிகளின் மூலம்அறியலாம்.

1.8.கற்பு: ஆண்கள் பல பெண்களுடன் உறவு வைத்துக் கொள்வது என்ற பாலியல் சுதந்திரத்தைப் பெற்று உல்லாசமாக வாழ்ந்து வந்துள்ளனர். கற்பு என்பது பெண்ணுக்கு மட்டுமே வலியுறுத்தி கட்டாயப் பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது.ஆண்கள் பரத்தமையில் திளைத்த போது கண்டிக்கவில்லை ”சேக்கை இனியர்பால் செல்வன்,… “(பரி.20.86-88)இப்பாடல் மூலம் அறியலாம்.

1.9. உடன்கட்டைஏறுதல்: ”அணில் வரிக் கொடுங்காய் வாள்போழ்ந்திட்ட

 காழ்போல் நல்விளிர்நறுநெய் தீண்டாது..” (புறம் .246) மன்னன் பூதபாண்டியன் இறந்த பிறகு அவன் மனைவி பெருங்கோப்பெண்டு, பாடிய இப்பாடல் மூலம் கைம்மை நோன்பின் கொடுமை, பெயரளவில் உயிரோடு இருந்து நடைமுறையில் செத்துக் கொண்டிருக்கும் அவலம், இதுவே இப்பாடல் முழுவதிலும் இடம் பெறும் செய்தி ஆகும். இதனாலேயே பெண்கள் கணவனின் இறப்பிற்குப் பின் வாழவேண்டும் என்ற ஆசை இருப்பினும், கைம்மை கொடுமைக்குப் பயந்தே உடன் கட்டை ஏறியிறுக்கின்றனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால், ஆண்கள் யாரும் மனைவியின் பிரிவிற்குப் பின் உடன் கட்டை ஏறியதாக  சான்றுகள் இல்லை.

1.10.தன்னை விரும்பாத பெண்ணை மடலேறி அதன் வழிப் பெறுதலும் கட்டாயத்தின் பாற்படுவதே (கலி.138.8-13) ஆனால், பெண் தான் விரும்பிய ஆடவனை மணக்கப் பெற்றோர் தடை செய்யும் சூழலில் ‘உடன் போக்கு’  செய்ய வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகிறாள். 

1.11.திருமணச் சடங்கில் பெண் மட்டுமே அதற்குரிய அடையாளமாக இழையணிதலும், (புறம்.127.5), சிலம்பு கழிதலும் (நற்.279:10-11), அமைய இத்தகைய ஆடவர்க்கின்மையும் காணப்படுகிறது. கணவன் இறந்து விட்டால், திருமணச் சடங்கின் அடையாளமாக இழைகளைக் களைகின்றனர் (புறம்224:17) கூந்தல் களைந்து, சுவையற்ற உணவை நேரம் தவறி உண்டனர் (புறம்.248).தம்  வாழ்வினை நூல் நூற்றுக் கழித்தனர்.

1.12. தென்புல வாழ்நராகிய முன்னோர்ருக்குச் செய்யும் வழிபாட்டு உரிமையும் பெண்டீருக்கு மறுக்கப்பட்டு  ஆடவருக்கு மட்டுமாக விதித்திருப்பது (புறம்.9:1-6)ஆணிலிருந்து கீழே இறக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது.முன்னோரின் பெயரைப் புதல்வன் மட்டுமே பெறுகிறான்.(கலி.75:23).

2. இடைக்கால இலக்கியங்களில் பெண்களின் நிலை:

சங்கம் மறுவிய காலத்திலும் களப்பிரர்கள் படையெடுத்து தமிழர் நாகரீகம், கலை, மொழி, ஆகியவை பின்னடைவை சந்தித்த காலத்தில்,  நீதி நூல்கள்களே இலக்கிய இடைவெளியை நிறைவு செய்தன. இக்காலத்தில் கூட யாரும் பெண்களுக்கான உரிமையைத்தர வேண்டும், அவர்களும் ஆண்களைப் போன்ற சக உயிர்,என அறிவுறுத்தவில்லை. பெண் மரபு சார்ந்த குடும்ப உழைப்பில் ஈடுபட கட்டாயப் படுத்தப்பட்டுள்ளாள், குடும்ப அமைப்பில் அவர்களின் உழைப்பு சுரண்டப்பட்டுள்ளது.

2.1.நீதி இலக்கியம்:

நீதி இலக்கியத்தில் தலைச் சிறந்தது எனப் போற்றப்படுவது திருக்குறள். திருக்குறள் எவ்வளவு தான் பெண்ணின் பெருமை பேசினாலும்,  ஆணின் மேலான்மை பார்வையிலேயே உள்ளது. ஆணுக்கு நிகரான இடத்தைப் பெண்ணுக்கு வழங்கவில்லை என்பதே பெண்ணியலார் கருத்து.

 காதல், காமம் சார்ந்த உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தாமல்  இருப்பதே பெண்ணிற்க்குப் பெருமை.” கடல் அன்ன காமம்  உழந்து.”.. என்னும் குறள் மூலம் அறியலாம். “தெய்வந்  தொழாஅள் கொழுநன்..”..கணவனுக்கு தொண்டும் பணிவிடைகளும் செய்து பெண் வாழ வேண்டும்,என்கிற பெண் அடிமைத்தனத்தையே காட்டுகிறது. “அனிச்சமும் அன்னத்தின்….”இக்குறளின் மூலம் குடும்பச்சிறையில் ஆதிக்கக் கட்டுப்பாட்டில்  இருக்கும் பெண் அடிமையை படம் பிடித்துக் காட்டுகிறது.

பெண்ணின் உடலியல் மற்றும் மனையியல் சார்ந்த ஒழுக்கத்தின் விளக்கமாகவே கற்பு எனும் சொல் விளக்கப்பட்டுள்ளது. “பெண்ணின் பெருந்தக்க யாவுள….”என்னும் குறள் மூலம் கற்பு என்பது பெண்களுக்கு மட்டும் ஒழுக்கத்தின் அடையாலமாக வைக்கப்பட்டது. இதுவே அவர்களின் விடுதலைக்கு முட்டுக்கட்டையானது. “பந்தம் இல்லாத மனைவியின் வனப்பு இன்னா..” உறவுகள் இல்லாத பெண் தனியே வாழமுடியாது ,அது ஆபத்தானது. பெண் ஆணை சார்ந்து வாழ வேண்டியவள். தன்னிச்சையாகச் செயல் பட முடியாதவள் என்பதைக் காட்டுகிறது.

3.காப்பியங்களில் பெண்களின் நிலை:

குடி மக்கள் காப்பியம்,கதை நாயகன் பெயரே காப்பியத்திற்க்கு வைத்த பெருமை, என்றெல்லாம் பேசினாலும் , பெண்ணுக்கான இடம் ஆணின் அடிமையாகவே சித்தரிக்கப்பட்டிருப்பது, மேற்கண்ட பெருமைகள் வெட்டிப்பேச்சு என்றே தோன்றுகிறது.

“அறவோர்க் களித்தலும் அந்தணர்க் கோம்பலும்…” பெண்ணிற்க்கு பொருளாதார சுதந்திரம் இல்லை அதனால் விருந்தோம்பாமல் இருந்தாள் என அறியமுடிகிறது. கணவனின் பாலியல்  ஒழுங்கீனத்தை பெண்ணால் கண்டிக்க முடியவில்லை, அப்படி கண்டிப்பது கற்பு நெறிக்குப் புறம்பானது என்றே பெண்ணுக்குப் போதிக்கப்பட்டுள்ளது. மாதவியிடம் மனக்கசப்பு ஏற்பட்டவுடன் கண்ணகியைத் தேடி கோவலன் வந்த போது இன் முகத்துடன் வரவேற்று, வாழ்க்கையை விட்ட இடத்திலிருந்து தொடங்க ஆரம்பிக்கிறாள். தான் இல்லாத போது எவ்வாறு ஆற்றியிருந்தாள் என்றோ, தன் புறவொழுக்கத்தால் அவளுக்கு ஏற்பட்ட இழிதகைமை பற்றியோ எதுவும் கூறாமல்,”வான் பொருட் குன்றம் தொலைத்த வறுமை தனக்கு நாணுத் தரும்”என்று கூறுகிறான். 

குடும்பத்துள் நடைபெரும் முக்கிய முடிவுகளில் பெண்களிடம் கலந்தாய்ந்து முடிவெடுப்பது இல்லை, ஆண்களே தன்னிச்சையாக எல்லா முடிவெடுக்கும் மரபு இங்குக் காணப்படுகிறது. கோவலன் மதுரைக்கு செல்வதைப் பற்றி கண்ணகியிடம் கேட்கவில்லை, மதுரை நெடுவழியாயிற்றே உன்னால் நடந்து வர இயலுமா?என்றும் கேட்கவில்லை. ’எழுக’ என்றான் எழுந்து அவன் பின்னே சென்றிருக்கிறாள். பின்னர் பாண்டியனிடம் தன் கணவன் கள்வன் அல்லன் என்று தர்க்கம் செய்தாளே தவிர தனக்காக சண்டையிடவில்லை. கணவனின் புகழ் காத்து அவன் பழி துடைத்தாள், கண்ணகி கற்பில் சிறந்தவள் எனப் போற்றப் பட்டாள். எனவே தெய்வமாக ஏற்றம் பெற்றாள். மணிமேகலையில் சீத்தலை சாத்தனார் “ நன்னீர்ப் பொய்கையில் நளியெரி…”என்ற பாடலின் மூலம் காப்பிய காலப் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டிருந்ததையே உணர்த்துகிறார். கணவனை இழந்த பெண்களுக்கு தண்டனை வழங்கியிறுக்கும் கொடூரமான ஆணாதிக்க முகத்தைக் காட்டுகிறது. 

சீவக சிந்தாமணியில் பலதார மணத்தை நியாயப்படுத்துகிறது. காப்பிய காலத்தில் ஆணுக்கு பல பெண்களுக்களை மணக்கும் உரிமையும், பெண்கள் பாலியலுக்கான பயன் பாட்டுப் பொருட்களாக அடையாளப்படுத்தப்பட்டு இருப்பது தெளிவாகிறது.

இராமாயணத்தில் பெண்களின் நிலை:

இராமாயணத்தில் பல பெண்களை மணம் புரிந்த தசரதன் பேரரசனாக  சித்தரித்தப்பட்டிருப்பதை பார்ரக்கிறோம்.அறுபதினாயிரம் மனைவியர்,அதில் பட்டத்தரசியர் மூவர்,ஆனால் மனைவியர் அனைவரும் தசரதனுக்காகவே வாழ்ந்தனர். இது பெண்ணடிமைத் தனத்தின் உச்சம்.

 அகலிகை கதையின் மூலம் கற்பின் எல்லை விரிவடைகிறது. கற்பு என்னும் ஒழுக்கத்தை பெண்களுக்கு மட்டுமே உரியதாக்கி வைத்திருந்த ஆணாதிக்க சமூக போக்கை காட்டுகிறது. இராமன் காப்பியத் தலைவன் . ஆயினும் நிறையத் தவறுகள்  செய்பவன். ஆணாதிக்கத்தின் மொத்த உருவம். தாய்க்கு நல்ல மகன். ஆனாலும் தாரத்தினை சந்தேகப்பட்டவன். இராமன் கால் பட்டு சாம விமோச்சனம் பெற்ற அகலிகை, தூயவளானாள் என்று சொல்லிய ராமன், தன் மனைவி சீதா பத்து திங்கள் இலங்கையில் இருந்தாள் என்பதால் நாட்டு மக்களுக்கு அவள் கற்பினள் என நிரூபிக்க அக்னிப்பிரவேசம் செய்யச் சொல்வது ஆண்களின், பெண் ஆணுக்கு அடிமை என்ற மனப்போக்கை காட்டுகிறது.  சீதையும் இராமனின் சாபத்தை தன் சாபமாக ஏற்று கானகத்திற்குச் செல்வது, தன் நலன் நோக்கா கணவனின் நலம் விரும்பும் சாதாரண அடிமைப்பெண் மனநிலையையே காட்டுகிறது.

4. பக்தி இலக்கியத்தில் பெண்களின் நிலை:

பக்தி இலக்கியங்களைப் பொறுத்தவரையில் முழுக்க முழுக்க தந்தைக் கடவுள் வழிபாடு மட்டுமே பார்க்க முடிகிறது. தாய்த் தெய்வ வழிபாடு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. தந்தைக்கடவுளை வழிபடும்  பக்தைகளாக  மட்டுமே பெண்கள் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.( காரைக்கால் அம்மையார்,ஆண்டாள் ) சைவ இலக்கியத்தில்  சிவனும் , வைணவ இலக்கியத்தில் திருமாலும் ஆணாதிக்கத் தெய்வங்களாக விளங்குகிறார்கள்.

5.சிற்றிலக்கியங்களில் பெண்களின் நிலை:

 சிற்றிலக்கியங்களில் பெரும்பான்மையும் ஆடவரின் பெருமை பேசும் பிரச்சார இலக்கியங்களாகவே திகழ்கின்றன. தெய்வீகத்தன்மை தலைமைப் பண்பும், கொண்ட  ஆடவனை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது. காதலும் விரக தாபமும் கொண்ட பெண்களின் தூது மூலம் பெண்களை காதல் அடிமைகளாக சித்தரிக்கப்பட்டுள்ளது புலனாகும்.

முடிவுரை: 

பழந்தமிழ் இலக்கியத்தில் பெண்ணின் நிலையை பெண்ணீய கோட்பாடுகளுக்குள் பொருத்திப்பார்ப்பது என்பதே ஒரு வித்தியாசமான  வரவேற்கத்தக்க முயற்ச்சியாகும்.  ஆனால், பழந்தமிழ் இலக்கியங்களில்  சொல்லப்பட்டுள்ள  பெண்களின் நிலை பெண்களுக்கு கல்வி அறிவு பெறாத நிலை, தனக்கு என்ன வேண்டும்  எனத் தெரியாமலும், தான் அடிமை படுத்தப்படுகிறோம் என்பதைக் கூட அறியாதவர்களாக இருந்திருக்கிறார்கள். 

பெண்களின் உழைப்பை உறிஞ்சிக் குடிக்கும் அட்டைகளாக குடும்பமும் சமூக அமைப்புகளும்,கருணை இல்லாத உடன்கட்டைஏறும் வழக்கம், அதையும் பெண்களே  முன்னின்று செய்யும் காட்டு மிராண்டித் தனம். வாழும் நாட்களை நரகமாக்கி விட்டு, பின் பத்தினி தெய்வ வழிபாடு அர்த்தமற்றதாகவே தோன்றுகிறது. ஆணைச்சார்ந்தே பெண்ணின் வாழ்வு, பெண்களுக்கு மட்டும் கைம்பெண், கணவனை இழந்தவள் என்கிற சொல். பரத்தை,வேசி,என்ற சொல்லுக்கு இணையாக அவளின் நட்பு கொண்ட ஆணுக்கு பரத்தையன், வேசன் என்ற பெயர், பெயரலவில் கூட கிடையாது.

கல்வி என வரும் போது, ஏதோ கொஞ்ச அளவு அடிப்படை கல்வியை கற்கவே அனுமதிக்கப்பட்டிருக்கிறாள். ஆண் வெளியூர்களில் சென்று படித்திருப்பதை பார்க்க முடிகிறது. ஆண் தான் விரும்பிய பெண்ணை மடலேறி  கட்டாயத் திருமணம் செய்ய உரிமையும், பெண் மடலேற உரிமை இல்லாமல் உடன்போக்கு செய்ததை பார்க்க முடிகிறது. பழந்தமிழ் இலக்கியம் என்று பார்க்கிற போது  அந்தக் காலத்தில் வாழ்ந்த பெண்களின் வாழ்க்கை முறை வேறு, பண்பாடு கலாச்சாரம் வேறு, ஆட்சிமுறை வேறு, இதெல்லாம் நாம் சீர் தூக்கி பார்க்கும் போது, பெண்ணியக் கோட்பாடுகள் பழந்தமிழ் இலக்கியத்திற்கு பொருந்தி வரவில்லை என்பது என் கருத்து.  

நூற்பட்டியல்

1. வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, பேரா.முனைவர்.பாக்யமேரி, பூவேந்தன் பதிப்பகம்,சென்னை-4,முதல் பதிப்பு.2004.

2. புனைவுகளும் உண்மைகளும், பேரா.க.பஞ்சாங்கம், காவ்யா,பதிப்பகம். சென்னை-24 முதல் பதிப்பு 2006.

3. திருக்குறளில் பெண்ணியம் , பதிப்பாசியர் க.சி. அகமுடைநம்பி,மீனாட்சி புத்தகநிலையம், மதுரை, முதல் பதிப்பு 2006.

4. தமிழ்க் கவிதைகளில் பெண்ணியம், முனைவர். போ. மணிவண்ணன்,நாம் தமிழர் பதிப்பகம் ,முதல் பதிப்பு 2008.

5. சங்க இலக்கிய  ஆய்வுகள் பதிப்பாசியர், அரங்க. மு.முருகையன்,கி.ரா.அறவிந்தன்.உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்,2000.

6. தமிழிலக்கியம் மரபும் புதுமையும்,நா.நளினி தேவி, காவ்யா பதிப்பகம், சென்னை,2008

7. அடிக்கருத்தியல் கொள்கைகளும் திறனாய்வு அணுகு முறைகளும்,செ.சாராதாம்பள்,பதிப்புத்துரை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ,மதுரை21,2000.

8. பெண்ணின் வெளியும் இருப்பும், பேரா. அரங்க மல்லிகா,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை-98, முதல் பதிப்பு: டிசம்பர்.2008,

9. தமிழாய்வின் பதிவுகள், முனைவர். க. இராஜசேகரன், சீதை பதிப்பகம், சென்னை-5, 2007.

10. பெண்ணிய நோக்கில்கம்பர் ,முனைவர்.ஶ்ரீ லக்ஷ்மி ,உமாபதிப்பகம், சென்னை -1, முதல் பதிப்பு 2014.

Leave a Reply