Description
வரலாற்றுப் புகழ்பெற்ற காஞ்சிபுரத்தைப் பற்றிய சமகாலப் பார்வையுடனான பதிவுகள் குறைவு என்கிற குறையைத் தீர்க்கிறது இந்த நூல். காஞ்சியின் கலைச்செல்வங்களை அறிமுகப்படுத்தி, காமாட்சி அம்மன் கோயிலில் கிடைத்த புத்தர் சிலை போன்ற தகவல்களுடன் பெüத்த காஞ்சி, ஜைன காஞ்சியின் சிறப்புகள் தனித்தனியே தரப்படுகின்றன. தற்காலம் ‘சார்… ஒரிஜினல் பட்டு, குறைந்த விலை’ என்று வரவேற்கும் குரல்களால் நிரம்பியுள்ள வீதிகளில் மகேந்திரனும் சங்கமித்திரையும் மணிமேகலையும் மார்க்கோ போலோவும் யுவான் சுவாங்கும் நடந்திருக்கின்றனர் என்று இணைத்துப் பார்க்கிறார் நூலாசிரியர். அத்திவரதருக்கு இட்லி நிவேதனம் செய்யப்படும் தகவலுடன், அத்தி மரத்தின் சிறப்பையும் வேறு பல தலங்களில் வீற்றிருக்கும் அத்திமர மூர்த்தங்களைப் பற்றியும்கூட தெரிவிக்கிறார். பரஞ்சோதி என்ற சிறுத்தொண்டர் அறிமுகத்துடன் வாதாபி கணபதியைச் சுற்றியுள்ள விவாதங்களையும் குறிப்பிடுவதுடன், மகேந்திர பல்லவனின் ‘மத்தவிலாச பிரகசனம்’ மற்றும் நந்திக் கலம்பகம், காஞ்சிப் புராணம் பற்றியும் தெரிவிக்கப்படுகிறது. அறப்பெருஞ்செல்வியிலிருந்து கோயில் மண்டபம் ஏறிக் கூவிய இளையாழ்வார், ஞானப்பிரகாசர், பட்டர் பரிமேலழகர் எனப் பலரும் நூலின்வழி அறிமுகப்படுத்தப்படுகின்றனர். பதினேழு வயதில் கோயில் திருப்பணி செய்த பச்சையப்ப முதலியார் தொடங்கிய எண்ணற்ற கல்வி நிறுவனங்கள் இன்றும் அவர் புகழைப் பாடுகின்றன. விடுதலைப் போராட்ட காலமும் திராவிட இயக்கமும் காஞ்சிக்குப் பெருமை சேர்த்த பி.டி.லீ செங்கல்வராய நாயக்கர் போன்றோர் பற்றியும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைத்தறி – பட்டு நெசவு பற்றி விரிவாகவே விஷயங்களைப் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். ஒட்டுமொத்த காஞ்சிபுரம் பற்றிய நல்ல அறிமுக நூல்.