எங்கள் ஊரில் எங்கள் வாழ்க்கை – தமிழ்க் கிராம வாழ்க்கையின் ஆழத்தையும் அழகியலையும் வெளிப்படுத்தும் ஒரு முதன்மையான ஆவணம்.
இயற்கையின் உயிர்ப்பும் சமூக உறவுகளும் நிறைந்தது கிராம வாழ்க்கை. அதன் அமைதியான சூழலும் மரபுகளால் இணைந்த சமூக உணர்வும் நல்வாழ்வின் அர்த்தத்தை நமக்கு உணர்த்துகின்றன.
தாயின் கருவறையில் பத்து மாதங்கள் இருந்த நம் முன்னோர்கள், மீதம் இருந்த வாழ்நாளை ஊர் எனும் வாழ்வறையில் வாழ்ந்தனர். தமிழ் நிலத்தில் ஐந்திணை ஊர்களும் கிராமங்களும் தமிழ்ப் பண்பாட்டு உயிரியாக இன்றும் இயங்குகின்றன.அவை தமிழ்ச் சமூகத்தில் உருவாக்கிய வாழ்வியல் மரபு தனித்துவமானது.
மானிடவியலாளர் பக்தவத்சலபாரதி தொகுத்திருக்கும் இந்த நூலில் தமிழகம், ஈழம், அயலகம் வழியாகப் புகழ்பெற்ற 54 பண்பாட்டு ஆளுமைகள் தங்களுடைய கிராம நினைவுகளை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்கள்.
அவற்றில் சமூக வாழ்க்கை, சாதிக்கட்டுமானம், உறவுமுறை, குடும்பம், வாழ்வாதாரம், சடங்கு, வழிபாடு, உணவு, கலைகள், போர், புலப்பெயர்வு எனத் தமிழர்களின் கிராமிய வாழ்வு அங்குலம் அங்குலமாக விரிவடைந்து நமக்குச் சிலிர்ப்பைத் தருகின்றன – ஏன், நம்மை வியப்பிலும் ஆழ்த்துகின்றன.
இதன் மூலம் தமிழர் வாழ்வின் தொன்மை, தொடர்ச்சி, மாற்றம் ஆகியவற்றை நாம் தெரிந்துகொள்ள உதவுகிறது இந்த நூல்.