இலங்கையைப் பல்வேறு காலங்களில் சோழர், நாயக்கர், சிங்களர் என பல அரச மரபினைச் சார்ந்த மன்னர்கள் ஆண்டு வந்துள்ளனர். ஐரோப்பியர்கள் வருவதற்கு முன்பே (1520) இலங்கையின் மத்திய பகுதியில் உள்ள கண்டியைத் தலைநகரமாகக் கொண்டு சேன சம்பந்த விக்கிரமபாகு 1469ல் கண்டியில் தன் அரசினை அமைத்தார். இவருடைய ஆட்சி காலம் சுமார் 42 ஆண்டுகளாகும். இவரைத் தொடர்ந்து ஆறு சிங்கள அரசர்கள் கண்டியை ஆட்சி புரிந்துள்ளனர்.
பொ.பி.1707 முதல் பொ.பி.1739 வரையிலான காலத்தில் கண்டியை ஆண்ட விக்ரமபாகு நரேந்திரசிங்கனுக்கு மணமுடிக்க பொருத்தமான பெண்கள் கண்டியில் கிடைக்கவில்லை. எனவே பட்டத்து அரசியாக சூரிய வம்சத்தைச் சேர்ந்த பிற தேசத்து அரச குடும்பங்களிலிருந்து பெண் எடுப்பதற்காகத் தூதுவர்களை அருகில் உள்ள தமிழ்நாட்டின் மதுரைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்பொழுது பொ.பி.1709-இல் மதுரையை நாயக்க மன்னர்கள் ஆண்டு கொண்டிருந்தனர். அவர்கள் சூரிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அந்தக் குடும்பத்திலிருந்து ஒரு பெண்ணை மணம் புரிந்து நரேந்திர சிங்கன் அரசி ஆக்கிக் கொண்டார்.
இவருக்கு ஆண் வாரிசு இல்லாததால் தனக்குப் பிறகு நாடாள வேண்டுமென்று மனைவியின் சகோதரனை மதுரையிலிருந்து அழைத்து வந்து பட்டத்திற்கு உரியவனாக்கினார். அவர்தான் பிற்கால இலங்கையின் முதலாவது தமிழ் வழி வந்த மன்னர். அவர் பெயர் ஸ்ரீ விஜய நரசிங்கன். பொ.பி.1739-இல் தொடங்கி பொ.பி.1747 வரை அவர் கண்டியை அரசாண்டார்.
தென்னிந்திய மதுரை நாயக்கர் மரபில் பிறந்த இவரே கண்டி நாயக்கர் மரபை இலங்கையில் தோற்றுவித்தார். இப்படியாகக் கண்டி இராச்சியம் மதுரை நாயக்கர்களுக்குக் கிடைத்தது. எட்டு ஆண்டுகள் வரை ஆட்சி புரிந்த ஸ்ரீ விஜய ராஜசிங்கன் வாரிசின்றி இறந்துவிடவே மன்னரின் மைத்துனரும் பட்டத்து ராணியின் தம்பியுமான கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் தன் 16வது வயதில் அரசுரிமை பெற்று கண்டியைப் பொ.பி.1747 முதல் பொ.பி.1782 வரை 35 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி புரிந்தார்.
இவருடைய மறைவுக்குப் பின் அவரது பட்டத்தரசியின் மகன்களில் ஒருவரான இராஜாதிராஜ சிங்கன் என்னும் மன்னன், பொ.பி. 1782 முதல் பொ.பி.1798 வரையிலான காலங்களில் ஆட்சியை ஏற்றுத் திறம்பட நிர்வகித்தார்.
இவருடைய ஆட்சிக் காலத்தில் கண்டியைத் தவிர இலங்கையின் மற்ற பகுதிகள் ஆங்கிலேயர்கள் கைப்பற்றியிருந்தனர். மக்கள் செல்வாக்கு நிரம்பிய மன்னர் என்பதால் ஆங்கிலேயர்கள் கண்டியைக் கைப்பற்றவில்லை.
மன்னர் ராஜாதி ராஜசிங்கரின் மனைவியர் நால்வரும் நாயக்க வம்சத்தினர் ஆவர். ஆனால் யாருக்கும் வாரிசு பிறக்கவில்லை. இதில் மூத்த அரசியல் தன்னுடைய சகோதரி சுப்பம்மாள் மற்றும் அவளுடைய மகன் கண்ணுசாமியை 1787 இல் மதுரையிலிருந்து வரவழைத்துத் தன்னுடைய அரண்மனையில் தங்கச் செய்தார். சிறுவன் கண்ணுசாமியை மன்னருக்கு மிகவும் பிடித்துவிட்டது. ஆசிரியர்களை அமர்த்திக் சிங்களமும் பௌத்தமும் அவனுக்கு கற்றுக் கொடுத்தார்.
சிங்கள மந்திரி பிலிமத்தலாவ, கண்ணுசாமி வீர விளையாட்டுகளிலும் படிப்பிலும் சுட்டியாக இருப்பதைக் கண்டு அவனிடம் நெருக்கம் காட்டினார். மன்னர் வாரிசு இல்லாத நிலையில் அவரது ஆட்சியில் மந்திரியாக இருந்த பிலிமத்தலாவுக்கு மன்னராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. இந்நிலையில் மன்னர் திடீரென்று நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். இறக்கும் முன் கண்ணுசாமிக்கு இளவரசு பட்டம் சூட்டிய விட்டு மறைந்தார்.
முதலில் கண்ணுசாமி பதவியில் அமர்த்தி, பின்பு அவரை விரட்டி விட்டுத் தானே ஆட்சியில் அமரலாம் என எண்ணத்துடன் மந்திரி பிலிமத்தலா செயல்பட்டார். மந்திரியின் ஆசை நிறைவேறாத படி ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் என்ற பட்டத்துடன் ஆட்சிக்கு வந்த தமிழ் நாயக்க மரபைச் சேர்ந்த கண்ணுசாமி, சிறப்பாக ஆட்சி புரியத் தொடங்கினார். மந்திரியின் ஆலோசனைகளைப் புறந்தள்ளி தன்னிச்சையாக ஆட்சி தொடர்ந்தார்.
கண்டி மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் நாயக்கராக இருந்தாலும் தன் ஆட்சியை பௌத்த ஆட்சியாகவே நடத்தினார். தெலுங்கு மரபை சேர்ந்தவனாக இருந்தாலும், தமிழே அவனது அரசாங்க அவை மொழியாக இருந்தது. மக்களும் அவர்களை தமிழ் மன்னர்களாகவே கருதினர். ஏரியையும், நலதா மாளிகையையும், எண்கோண வடிவில் அமைத்தான். பல பௌத்த விகாரைகளை அமைத்தார். புத்தரின் பல்லை தங்கக் கலசத்தில் வைத்துத் தனி ஆலயம் அமைத்து மக்கள் மனதில் இடம் பிடித்தான்.
தன் 20 வருட ஆட்சி காலத்தில் போர்ச்சுக்கல் மற்றும் ஆங்கிலேயர்களைக் கண்டியை நெருங்கவிடாமல் மக்கள் ஆதரவுடன் திறம்பட ஆட்சி அமைத்தார். வெறுப்புற்ற மந்திரி தந்திரமாக ஆங்கிலேயருடன் இணைந்து செயல்பட ஆரம்பித்தார்.
முதலில் மக்கள் மன்னரிடம் வைத்திருந்த அபிமானத்தைக் குறைக்கக் கண்டி மன்னர் மீது பல அவதூறுகளைப் பரப்பினான். அவரை கொடுங்கோலனாகச் சித்தரிக்கக் கதைகளை ஆங்கிலேயர்கள் பரப்பினார்.
“இலங்கை கடற்கரை பகுதியில் இருந்த வணிகர்களின் பொருட்களைக் கைப்பற்ற கண்டி மன்னார் ஆணையிட்டார்” என்ற பெரும் குற்றம் சாட்டி கண்டி மன்னர் மீது போர் தொடுத்தனர் ஆங்கிலேயர்கள். இந்த சூழ்ச்சிகளை முன்னரே அறிந்த மன்னர் தன் குடும்பத்துடன் வேறு இடம் சென்று விட்டனர். தனக்குத் துரோகம் இழைத்த பிலிமத்தலாவை சிரைச்சேதம் செய்து விட்டார் கண்டி மன்னர்.
இந்த குழப்பச் சூழலில் ஆங்கிலேயர் தங்களிடம் தஞ்சமடைந்த பிளிமத்தலாவின் மருமகனின் ஆதரவோடும், பெரும்படையுடன் கண்டியைக்கைப்பற்றி, அங்கு ஒரு கிராமத் தலைவன் வீட்டில் பதுங்கியிருந்த கண்டி மன்னரையும் அவரது குடும்பத்தாரையும் சிறைப்படுத்தி ௧௮-2-1815 அன்று கொழும்பு கொண்டுசென்று ஓராண்டு சிறை சிறை வைத்தனர் ஆங்கிலேயர்கள்.
இந்த ஓராண்டுக் காலம் தங்கள் மன்னர் கைதியாக இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், எங்கே மீண்டும் கிளர்ச்சி வந்துவிடுமோ என அஞ்சி கண்டி மன்னரையும், அவர் மனைவி வாரிசுகள் அனைவரையும் எச் எம் எஸ் கான்வாலிஸ் என்ற கப்பல் மூலம் தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்தனர். நாடு கடத்தப்பட்ட கண்டி மன்னர் குடும்பத்தினர் அனைவரும் வேலூர் கோட்டைக்குள் உள்ள கண்டி மஹால் என்ற வீட்டுக்குள் சிறை வைக்கப்பட்டனர். அவரும் அவர் குடும்பத்தாரும் சிறையிலேயே வசித்து 1836 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள் வேலூரில் மறைந்தார் இலங்கையின் கடைசி தமிழ் நாயக்க மன்னர்.
19 ஆண்டுகள் கண்டியை ஆட்சி புரிந்தும், 19 ஆண்டுகள் அரசியல் கைதியாக இருந்த கண்டி அரசருக்கும் பட்டத்தை அரசிகளுக்கும் பாலாற்றங்கரையோரம் இன்றும் கல்லறைகள் உள்ளன.
1990 ஆண்டு இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் நாயக்க மன்னனின் கல்லறையைப் பாலாற்றில் அனாதையாக இருந்தது பற்றிய தகவல்களை அறிந்த அன்றைய முதல்வர் கருணாநிதி அவர்கள், கண்டி மன்னர் கல்லறை உள்ள இடத்தில் முத்து மண்டபம் அமைத்து அந்த நினைவிடத்தைப் பாதுகாத்துள்ளார்.
1948 இல் இலங்கை சுதந்திரம் வழங்கப் பட்ட போது எந்த கொடி ஏற்றுவது என்ற கேள்வி உருவாகியது. 1815 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட கண்டி ஒப்பந்தத்தின் படி, இங்கிலாந்துக்குக் கொண்டு செல்லப்பட்ட சிகப்பு நிற பின்னணி உடைய வாள் ஏந்திய படி இருக்கின்ற சிங்கத்தைக் கொண்ட கண்டி மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜாங்க அரச கொடியே இலங்கையின் தேசயக் கொடியாக ஏகமானதாகத் தீர்மானிக்கப்பட்டது.
ஆங்கிலேயர்கள் லண்டனுக்கு எடுத்துச் சென்ற அம்மன்னனின் கிரீடம் சிம்மாசனம் மற்றும் கொடி பின்னர் இலங்கைக்குத் திரும்பி வந்தது. அவை இப்போது கொழும்பு அருங்காட்சியகத்தில் உள்ளன. அவர் வேலூர் வீட்டுச் சிறையிலிருந்தபோது அவர் பயன்படுத்திய, தந்தத்தால் ஆன பூராங் எனப்படும் வளரி, சதுரங்க காய்கள் போன்ற பொருட்கள், வேலூரில் உள்ள தமிழ்நாடு மாநில அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் ஆண்ட நாடும் அவர் மக்களும் அவரை மறந்தே போயினர். இலங்கையை ஆண்ட கடைசி மன்னர் என்ற பெயருடன் தன் உறவுகளின் கல்லறைகளோடு இன்று கவனிப்பாரின்றி தனிமையாகப் பாலாற்றங்கரையோரம் காணப்படும் அவர் நினைவிடத்தில் உறங்கிக் கொண்டிருக்கிறார்.
எழுத்து புகைப்படம் இரா.சு சரவணன் ராஜா வேலூர்
முகப்புப் படம்: பிரசன்னா வீரக்கொடி
=======================================
Heritager வலைக்காட்சி
[embedyt] https://www.youtube.com/embed?listType=playlist&list=UUisScMqRDjVXVuRw6U9y2IA&layout=gallery[/embedyt]