இலக்கணவிளக்கம், முத்துவீரியம், சுவாமி நாதம், தொன்னூல் விளக்கம் ஆகியன அமைத்துள்ளன. இவ்வைந்திலக்கணங்களைத் தவிர அணிஇலக்கணத்தைத் தனியே விளக்கும் முதல் நூலாக நமக்குக் கிடைப்பது தண்டியலங்காரம் .
இந்நூல் வடமொழி காவியாதரிசனத்தின் தமிழ்ப்பெயர்ப்பு .தண்டியலங்காரத்திற்கு முன்பே அணி இலக்கணம் பற்றிக் கூறும் தமிழ் நூல் ஒன்று இருந்தமையை யாப்பருங்கல விருத்தி கட்டும் அணியியல் புலப்படுத்துவதாக அறிஞர்கள் கருதுவர் மறைந்துபோன நூல்களுள் அணி இலக்கண நூல்களும் அடங்கும் என மயிலை சீனி வேங்கடசாமி குறிப்பிடுவார்.
கவிதையை ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என நான்காக வகைப்படுத்திக் கூறுவர். இந்நால்வகைப் பகுப்பால் இவற்றை இயற்றும் கவிஞரும் நால்வகையினர் ஆவர்.
ஆசுகவி:
செய்யுளுக்கான பொருள், உரிய பா, அடி வரையறை, அணி இவற்றைக் கொடுத்துப் பாடுக என்றதும் புலவனால் உடன் பாடப்படும் செய்யுள். இது கடுங்கவி என்றும் அழைக்கப்படும். இங்குக் கடுமை என்பது விரைவு என்னும் பொருள் உடையது.
பொருளடி பாவணி முதலிய கொடுத்துப்
பாடெனப் பாடுவோனே யாசு கவியே (முத்துவீரியம், 1017)
மதுரகவி :
சொற்சுவை, பொருட்சுவை, தொடை விகற்பம் மற்றும் உருவகம் முதலிய அணிகளோடு சிறப்புற இயற்றப்பெறும் செய்யுள். இது இன்கவி எனவும் அழைக்கப்பெறும்
தொடையும் தொடையின் விகற்பமும் செறியச்
சொற்சுவை பொருட்சுவை தோன்ற உருவகம்
ஆதிய அணிகளோடு அணிபெறப் பாடுவோன்
மதுர கவியென வழுத்தப் படுமே (முத்துவீரியம்.1018)
சித்திரக்கவி :
மாலை மாற்று முதலான கவிகளைச் சித்திரத்தில் பொருத்தி இயற்றப்படும் செய்யுள் இது அருங்கவி, மிறைக்கவி எனவும் அழைக்கப்பெறும்.
ஏக பாத மெழுகூற் றிருக்கை
காதை கரப்புங் கரந்துறைச் செய்யுள்
கூட சதுக்கங் கோமூத் திரிமுதல்
தெரிந்து பாடுவோன் சித்திரக் கவியே (முத்துவீரியம்.1019)
வித்தாரக்கவி :
பன்மணி மாலை, தசாங்கம், மும்மணிக் கோவை முதலியன விரித்துப் பாடப்படும் பாடல். இது பெருங்கவி என்றும் அழைக்கப்பெறும்.
மறங்கலி வெண்பா மடலூர்த லியலிசை
பாசண்டத் துறை பன்மணி மாலை
தசாங்கம் மும்மணிக் கோவை கிரீடை
இவை முதலிய விரித்து இசைத்துப் பாடுவோன்
வித்தாரக் கவியாம் விளம்பிடினே (முத்துவீரியம்,1020)