விளவங்கோடு வட்டம் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக விளவங்கோடு உள்ளது.
”மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே “
என்னும் தொல்காப்பிய நூற்பாவிற்கேற்ப நால்வகை நிலங்களால் சூழப்பெற்று இயற்கை எழிலுடன் காட்சியளிக்கிறது இவ்வட்டாரம். இவ்வட்டார மக்கள் பேசும் பேச்சுவழக்கினை ஆராயுங்கால் பெரும்பாலானச் சொற்கள் சங்க இலக்கியச் சொற்களாக உள்ளன. நாகரிக வளர்ச்சியின் காரணமாக இச்சொற்கள் அழிந்து போகாவண்ணம் பாதுகாப்பது தமிழர்தம் கடமையாம். இவ்வட்டாரப் பண்பாட்டுக் கூறுகள் சங்ககால பண்பாட்டுக் கூறுகளுடன் ஒத்தமைந்துள்ளன என்பதை இந்நூல் எடுத்தியம்புகிறது.