இடைக்காலத் தமிழ்நாட்டில் நாடுகளும் ஊர்களும் (கி.பி.800-1300)
எ.சுப்பராயலு, கௌ.முத்துசங்கர், பா.பாலமுருகன்
தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர்
இந்த நிலப்படத்தொகுப்பு புதுச்சேரி ஃபிரஞ்சு ஆய்வு நிறுவனத்தில் செய்த தென்னிந்திய வரலாற்று முறை நிலப்படத்தொகுப்பின் (Historical Atlas of South India) ஓர் இணை விளைவாகும். கி.பி.800 முதல் 1300 முடிய உள்ள கல்வெட்டுகளில் குறிக்கப்படும் ஊர்களும் அவற்றை உள்ளடக்கிய நாடுகளும் 30 நிலப்படங்களில் கொடுக்கப்பட்டுள்ளன. 13 படங்கள் நாடுகளை மட்டும் கொண்டுள்ளன. மற்றவை அவற்றில் அடங்கிய ஊர்கள் தொடர்பானவை.
பெரும்பாலான ஊர்கள் 12-13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. சில பகுதிகளில் ஊர்கள் நெருக்கமாகக் காணப்படுவதால் சில படங்கள் விரிவுபடுத்தப்பட்டு துணைப் படங்களில் அவை காட்டப்பட்டுள்ளன. இறுதியில் நாடு மற்றும் ஊர்களின் சொல்லடைவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிலப்படமும் கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு (1A, IB …) அக்கட்டங்களை மையமாக வைத்து நாடு மற்றும் ஊரின் இருப்பிடம் சுட்டப்பட்டுள்ளன. இச்சொல்லடைவுகளை வைத்துக் குறிப்பிட்ட நாடு அல்லது ஊரைத் தேடலாம்.