கோயில்களின் தோற்றமும் வளர்ச்சியும் :
உலகில் இறைவன் பற்றிய கருத்து உருவான பின்னர் தோன்றியதே கோயில் எனும் அமைப்பாகும். மனிதன் வேட்டை இனக்குழுவாக வாழத்தொடங்கிய பொழுது இயற்கையை வழிபடத் தொடங்கினான். தீ, இடி,மின்னல், மழை போன்ற அச்சந்தருவனவற்றையும் வணங்கினான். பின்னர் அவற்றிற்கு உருவம் அளித்தான். அவ்விறையுருவங்களை வைப்பதற்கான அமைப்பாகத் தோன்றிய சிறு அளவிலான பீடங்களே பின்னர் மிகப்பெரிய அளவிலான கோயில் வளாகங்களாகவும், சமூக மையங்களாகவும் மலர்ந்தன.
கோயிலின் முக்கிய கூறுகளான கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை ஆகிய கூறுகள் இறையுணர்வையும், கலையுணர்வையும் இணைத்து உருவாக்கப் பயன்படும் பண்பாட்டுக் கூறுகள் ஆகும்.
கலை என்பது உரிமையுடன் கூடி சுதந்திரத்துடன் அழகுணர்வை வெளிப்படுத்த முயலும். ஆனால் மதம் அளவுக்கு மீறிய கட்டுப்பாடுகளை உருவாக்கிக்கொண்டு அதனுள் செயல்படும். எதிரெதிர்த் திசைகளில் செயற்படும் இருபண்புகளின் இணைவில் தோன்றுவதுதான் மதம் சார்ந்த கலையாக உருவாகிறது.
கலையற்ற மதமோ, மதமற்ற கலையோ பண்பாட்டில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. இந்தியக் கோயிற் கலையானது அத்தகைய மதம் சார்ந்த கலையாகவே வளர்ந்து வந்துள்ளது.
மறைந்துபோன ஒரு நாகரிகத்தினை அறிய உதவும் சான்றாக விளங்குவன கட்டடங்களும், அவைகளின் இடிபாடு களுமே ஆகும். அழிந்துபோன பல நாகரிகங்களை இவ்வாறே அறிய இயலுகிறது.