இந்து நாகரிகம் உலகின் மூத்த நாகரிகங்களில் ஒன்றாகும். இற்றைவரை இது தனது இருப்பைக் காலதேச வர்த்தமானங்களைத் தாண்டித் தக்கவைத்துக் கொண்டது மட்டுமன்றித் தனது பரவலைப் பூகோளத்தின் புதிய நிலப்பரப்புக்களை நோக்கியும் சமகாலத்தில் அகலித்துக் கொண்டுள்ளது
இந்து நாகரிகம் ஒரு வாழ்வியல் மட்டுமன்று. அது ஒரு அறிவுப்புலம் தனது பண்பாட்டிலுள்ள அத்தனை உபகூறுகளுக்குமுரிய விசேடித்த பனுவல்களையும் வரலாற்று மூலங்களையும் கொண்ட உலகின் ஒரேயொரு வாழும், புராதன நாகரிகம் என்ற பெருமையும் இதற்குண்டு.
இலங்கைப் பல்கலைக்கழகங்களில் இந்து நாகரிகத்தினைக் கற்கப்புகும் மாணவர்கள் தமது முதலாவது வருடத்தின் முதலாம் அரையாண்டில் “இந்து நாகரிகம் ஓர் அறிமுகம்” என்ற தலைப்பில் அமையப்பெற்ற பாடம் கற்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படும். அந்த குறித்த பாட அலகில் கற்பிக்கப்படும் விடயங்களைத் தன்னகத்தே உள்வாங்கிக் கட்டமைக்கப்பட்டதாக இந்நூல் அமையப்பெற்றுள்ளது.