கோவில்பட்டி அட்சரம் பதிப்பகம் மூலமாக கரிசல் எழுத்தின் முன்னத்திஏர் சாகித்திய அகாதமி விருது பெற்ற
கி.ராஜநாராயணன். அவர்களின் 98ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட தமிழகத்தில் இசை வளர்த்த பெண்மணிகள் என்ற இப்புத்தகத்தின் ஆசிரியர் டாக்டர் பி.எம்.சுந்தரம் எழுதிய மரபு வழி பரத பேராசான்கள் என்ற ஆய்வு நூல் 2002ஆம் ஆண்டின் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு பெற்ற நூலாகும்.
இயல் இசை நாடகம் என்ற மூன்று தமிழில் இசைக்கு உருகாத உயிர்கள் இல்லை. அப்படிப்பட்ட இசைத் தமிழை வளர்த்தெடுத்த தமிழகத்தின் பல்வேறு பெண்மணிகளுள் இருபத்தைந்து பெண்களின் வரலாற்றை அவர்களின் நிழல் படத்துடன் வெளியிட்டிருக்கிறார்கள். நடிகை ஸ்ரிவித்யாவின் பாட்டி சங்கீத கலாநிதி எம்.எல்.வசந்த குமாரியின் தாயார் மதராஸ் லலிதாங்கி முதல் பந்தணைநல்லூர் ராஜாயி,தஞ்சாவூர் பால சரஸ்வதி, எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் தாயார் மதுரை ஷண்முக வடிவு.டி.வி.ரத்னம் (1929-1984), பி.ஏ.ராஜாமணி, பி.ஏ.பெரியநாயகி உள்ளிட்டோரின் இசைப் பயிற்சியின் வரலாறு மிகவும் சுவராஸ்யமானதாக அமைத்துள்ளன.
பெண்களில் முதன்முதலாக இசை வடிவான கதை சொல்லத் தொடங்கியவர் இளையனார்வேலூர் சாரதாம்பாள் (1884-24.1.1948) ஆவார்.
திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையின் திருமண விழாவில் சாரதாம்பாளின் இசையோடு கலந்த கதா காலட்ஷேபம் நடைபெற்றுள்ளது.அதேபோல் ராஜரத்தினம் பிள்ளை திருவாவடுதுறை யை விட்டு முதன் முதலாக வெளியூரில் நாதஸ்வரம் வாசிக்க சென்றது இந்த அம்மையாரின் அழைப்பின் பேரில்தான் என்பது ஒரு முதன்மையான செய்தியாகும்.
மொத்தத்தில் தமிழ் நாட்டில் தமிழ் இசை ஆண்களை விட பெண்களால்தான் வளர்த்தெடுக்கப் பட்டுள்ளது என்பதை இப் புத்தகத்தை படித்துப் பார்த்து நாம் அறிந்து கொள்ளலாம்..