Description
வரலாறு என்பது போர், ஆட்சி, மற்றும் காலத்தைக் குறிக்கும் வெறும் பதிவுகள் மட்டுமல்ல. அது மனிதர்களின் தேடல், துணிச்சல், மற்றும் கனவுகளின் கதை. புதிய நிலங்களையும், அறியப்படாத கலாச்சாரங்களையும், புதிரான உயிரினங்களையும் கண்டறியும் தாகத்தில், எண்ணற்ற பயணிகள் கடல்களைக் கடந்து, மலைகளைத் தாண்டி, சவால்களை எதிர்கொண்டனர். அவர்கள் தங்கள் பயணங்களின் மூலம் உலகை நாம் பார்க்கும் விதத்தை மாற்றியமைத்தனர். அவர்களின் பயணங்கள் இல்லை என்றால், உலகம் உருண்டையானது, இந்தியாவுக்குக் கடல் வழி உண்டு போன்ற பல அறிவியல் உண்மைகளை நாம் அறிந்திருக்கவே முடியாது.
பயணம் என்பது மனிதர்களைப் பிணைக்கும் ஒரு சக்தி வாய்ந்த பாலம். வெவ்வேறு மொழிகள் பேசினாலும், வெவ்வேறு வாழ்க்கை முறைகளைக் கொண்டிருந்தாலும், நாம் அனைவரும் அடிப்படையில் ஒரே மனிதர்கள் என்பதை இந்த உலகப் பயணங்களே நமக்கு உணர்த்தின. ஆனால் அதே நேரத்தில், பயணங்கள் சில சமயங்களில் பிளவுகளுக்கும், ஆக்கிரமிப்புகளுக்கும் காரணமாக இருந்திருக்கின்றன. வாஸ்கோ ட காமாவின் இந்தியாவுக்கான பயணம் போர்ச்சுகலுக்கு செழிப்பைக் கொடுத்தது, ஆனால் இந்தியா காலனி நாடாக மாற வழி வகுத்தது.
இந்த பயணக் கதைகளில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது ஒன்றுதான். பயணமோ, அதற்கான வாகனமோ குற்றமில்லை; அதைப் பயணிக்கத் தூண்டும் மனிதனின் நோக்கம்தான் முக்கியமானது. கடல் எல்லோருக்கும் ஒரே மாதிரியான வரவேற்பைத் தருகிறது, கப்பல் எல்லோருக்கும் சமமாகவே இடம் தருகிறது. ஆனால் பயணிகளின் கனவுகள் வேறுபட்டவை. சிலருக்கு அது ஆய்வு, சிலருக்கு அது வணிகம், சிலருக்கோ அது கொள்ளை.
இந்தப் புத்தகம், சுட்டி விகடன் இதழில் சென்றதும் வென்றதும் என்ற தலைப்பில் வெளிவந்த தொடரின் தொகுப்பு. வரலாற்றை ஒரு சுமையாக உணரும் இளம் வாசகர்களுக்கு, அதை ஒரு கதைபோல் எளிமையாகவும், விறுவிறுப்பாகவும் அறிமுகப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம். பயணங்களின் வழியாக உலகைப் புரிந்துகொண்ட 13 சாகசப் பயணிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளை இதில் காணலாம். ஒவ்வொரு பயணியைப் பற்றியும் பல நூல்கள் உள்ளன. இது அவர்களின் கதைகளை மேலும் தேடிப் படிக்க உங்களுக்கு ஒரு தொடக்கப் புள்ளியாக அமையும் என்று நம்புகிறோம்.
இந்த நூல் சாத்தியமானதற்கு, வாய்ப்பளித்த சுட்டி விகடன் பொறுப்பாசிரியர் திரு. கணேசன் அவர்களுக்கும், தொகுத்துச் செம்மைப்படுத்திய திருமதி. சுஜாதா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
நூல் அட்டவணை
- வாஸ்கோ ட காமா: இந்தியாவைக் கண்டுபிடித்த கதை
- செங் ஹே: இளவரசரும் கைதியும்
- மார்கோ போலோ: பயணிகளின் பயணி
- இபின் பதூதா: ஒரு சுதந்திரப் பறவையின் கதை
- கிறிஸ்டோபர் கொலம்பஸ்: அமெரிக்காவைக் கண்டுபிடிக்காதவர்
- அமெரிகோ வெஸ்புகி: அமெரிக்காவை நிஜமாகவே கண்டுபிடித்தவர்
- பார்த்தலோமியா டயஸ்: ஆப்பிரிக்காவைச் சுற்றி வந்த கதை
- மெகல்லன்: உலகைச் சுற்றிய கப்பல்
- ஜேம்ஸ் குக்: கண்டுபிடிக்காமல் புகழ்பெற்றவர்
- ஜான் கபோட்: கண்டுபிடித்ததும் காணாமல் போனதும்
- சார்லஸ் டார்வின்: இயற்கையின் ரகசியம்
- வால்டர் ராலே: தங்க வேட்டை
- சார்லஸ் வில்லியம் பிபி: கடலுக்குள் ஒரு பயணம்




