கல்வெட்டுக்கலை – பொ. ராசேந்திரன், சொ. சாந்தலிங்கம்; பக்.240; ரூ. 250;
பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையம், மதுரை.இனம், மொழி, பண்பாட்டின் ஆணிவேர்களை அலசி ஆராய உதவுபவை இலக்கியங்களும் கல்வெட்டுகளும். நாட்டின் வரலாற்றை எழுதுவதிலும் அவை முக்கியப் பங்காற்றுகின்றன. அவற்றில் கல்வெட்டுகள், கால ஓட்டத்தில் தேய்ந்து போனாலும் உள்ளதை உள்ளபடி சொல்பவை.இலக்கிய வளர்ச்சியை அறிந்து கொள்ள கல்வெட்டுகள் உதவுவதால், “கல்வெட்டு கற்பது’ ஒரு கலையாகவே போற்றப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் வளர்ந்துவரும் துறையாக கல்வெட்டியல் மாறியுள்ளது. அதைக் கற்போரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.
அந்த வகையில், கல்வெட்டுக்கலை குறித்து எல்லோருமே அறிந்துகொள்ள ஏதுவாக மிக எளிமையுடன் எழுதப்பட்டுள்ளது இந்நூல். தமிழ் எழுத்துகள், கருத்தெழுத்து, ஒலிஎழுத்து, குறியீடு போன்றவற்றை விளக்கி, கல்வெட்டுகளின் பொதுஅமைப்பு, கல்வெட்டுகளில் காலக் கணக்கீடு, கல்வெட்டுகளைப் படியெடுக்கும் முறை, அவற்றை நூலாக்கும் பணி போன்றவற்றையும்,”கல்லில் எழுத்துபோல’ படிப்போர் மனதில் ஆழமாகப் பதியும் வண்ணம் எடுத்துரைக்கின்றனர் நூலாசிரியர்கள்.மேலும், மாங்குளம், புகளூர், அறச்சலூர், வைகைக்கரை, மானூர் எனப் பல்வேறு கல்வெட்டுகள் குறித்து விரிவாகவும், வியக்கத்தக்க செய்திகளையும் சொல்லுகின்றன இந் நூலில் உள்ள கட்டுரைகள்.ஓலைச்சுவடிகள் தொடர்பாகவும் கட்டுரை ஒன்று உள்ளது. மன்னர்களின் மரபுவழிப் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது, ஆராய்ச்சி மாணவர்களுக்கும், வரலாற்று ஆர்வலர்களுக்கும் பயனுள்ள நூல்.