அறிஞர் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான், கம்பராமாயணத்தின் கதை மாந்தர்களை, கம்பன் படைத்த வண்ணமே படிக்கக் கற்றுக் கொடுக்கும் கட்டுரைகளை, அந்தக் காலத்தில் பிரபலமாக வெளிவந்த ‘ஆனந்தபோதினி’ இதழில் தொடர்ந்து எழுதி இருக்கிறார். கவிதை நடை துள்ள, கலைநயம் மிளிரக் கம்பனது தொடர்களைக் கொண்டே விளக்கிச் செ(1)ல்கிற நடையில் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் எளிமையும் இனிமையும் ததும்பி வழிகின்றன; படிப்பவர்களுக்கு இன்பம் பயக்கின்றன.
சுமார் 25 வயதில் அவர் எழுதிய அந்தக் கட்டுரைகளைத் தொகுத்து, பகுத்து, பதிப்பித்து முதன்முதலாகத் தமிழ்கூறு நல்லுலகிற்குத் தந்திருக்கிறார், பேராசிரியர், பேச்சாளர், எழுத்தாளர், கவிஞர் கிருங்கை சேதுபதி. படைப்புத் தளத்திலும், பாரதியியலிலும் கம்பனிலும், ஈடுபாடு கொண்ட இளைஞர் கிருங்கை சேதுபதி, சுயமாய் எழுதி வெளியிடும் காலத்தில், இதுபோல் நயம்பட வுரைத்த நல்லோர்களின் எழுத்தோவியங்களைத் தொகுத்து வெளியிடுவதும் சிறந்த தமிழ்த் தொண்டுதான். அதனைத் திறம்பட ஆற்றிவரும் நூலாசிரியர் பேராசிரியர் முனைவர் கிருங்கை சேதுபதியைப் பாராட்டுகிறேன். இன்னும் பன்னூல்கள் படைத்துத் தமிழன்னையின் பொன்னடிகளுக்குச் சூட்டிப் புகழ்பெற வாழ்த்துகிறேன்.
கிருங்கை சேதுபதி