Description
அயோத்திதாசப் பண்டிதர் வாழ்ந்த காலம் வரலாற்றில் மிக முக்கியமான காலக்கட்டமாகும். மக்கள் கூடி வாழும் இவ்வுலகில் எத்தனை ஏற்றத்தாழ்வுகள் சாதி, மதம், இனம், மொழி, நிறம் ஆகியவற்றால் உலகம் மாறுபட்டு கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டபோது ஞான ஒளியாய் இம்மண்ணில் பிறந்து, மாபெரும் மாற்றங்கள் நிகழ்வதற்கு வித்திட்டவர் அயோத்திதாசப் பண்டிதர். கல்வி உரிமை, சாதி ஒழிப்பு, சமத்துவம், சகோதரத்துவம், இட ஒதுக்கீடு, பெண் விடுதலை, பவுத்தம், பகுத்தறிவு, இந்துமத எதிர்ப்பு போன்ற முற்போக்கு அரசியலுக்கு இந்திய அளவில் பெரும் பங்களிப்பைச் செய்தவர். தென்னிந்தியாவின் முதல் சாதி ஒழிப்புப் போராளியாகச் செயல்பட்டவர். சாதியற்ற தமிழர்கள் எனப் பதிவு செய்யுமாறு அரசுக்குக் கோரிக்கை வைத்தவர். இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலையடைய புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் பவுத்தப் புரட்சி வழிவகுத்தது. இதற்கு அயோத்திதாசப் பண்டிதரின் தமிழ்ப் பவுத்தமே முன்னோடியாக இருந்துள்ளது. பெங்களூரில் நடைபெற்ற தமது 68வது பிறந்த நாள் விழாவில், “என் பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கும், சீர்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள் பண்டித மணி அயோத்திதாசரும், தங்க வயல் ஜி. அப்பாதுரையார் அவர்களும் ஆவார்கள்” என்று தந்தை பெரியாரால் புகழப்பட்டவர். தந்தை பெரியார் இம்மண்ணில் பிறப்பதற்கு 34 ஆண்டுகளுக்கு முன்பே பகுத்தறிவுச் சிந்தனையுடனும், பன்முக அறிவோடும், அறிவியல் சார்ந்த சிந்தனையுடனும், இலக்கிய நயத்தோடும், எளிமையோடும் பிறந்த அயோத்திதாசப் பண்டிதர் தந்தை பெரியாருக்கு முன்னோடியாக இருந்திருக்கிறார். நீண்ட நெடுங்காலமாக வரலாற்றில் மறைக்கப்பட்டிருந்தவர், அறிவின் எழுச்சியால் தற்போது வரலாற்றில் மறைக்க முடியாத ஆளுமையாக உயர்ந்து நிற்கிறார்.