சங்க இலக்கியத்தில் சைவ சமய மூலக் கூறுகள் – பழ.முத்தப்பன்

600

Guaranteed Safe Checkout
Extra Features
  • புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 978606 8908
  • Worldwide Shipping
  • புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்னும் சங்க இலக்கியங்களில் சமயம் சார்ந்த கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. அக்கருத்துக்கள் சைவ சமயக் கொள்கைகளுக்கு மூலக்கூறுகளாக (அடிப்படையாக) எவ்வாறு அமைந்துள்ளன என்பதை ஆய்ந்து எடுத்துக் காட்டுவதன் மூலம் சைவ சமயத்தின் சிறப்பினை உணரலாம் என்ற அடிப்படையில் “சங்க இலக்கியங்களில் சைவ சமய மூலக் கூறுகள்” எனும் இந்நூல் உருவாக்கம் பெற்றது. சங்க இலக்கியங்கள் தோன்றிய காலத்தில் பௌத்தம், சமணம், சைவம், வைணவம் உள்ளிட்ட சமயங்கள் இருந்தன. இதனால் அச்சமயங்களின் மூலக்கருத்துக்களும் சங்க இலக்கியங்களில் பரவியிருப்பதை மறுக்கவியலாது. இவ்வாறு பல்வேறு சமயக் கூறுகள் இடம்பெற்றிருக்கும் சங்க நூல்களில் சைவ சமயத்திற்குரிய மூலக் கூறுகளைப் பிரித்து ஆய்வதின் மூலம் சங்ககால மக்களின் சைவ சமய உணர்வு புலப்படும் எனலாம்.

எட்டு தலைப்புக்களில் எழுதப்பெற்றுள்ள இந்நூலில், இந்திய மெய்ப்பொருள் சமயங்கள் என்பது முதல் பகுதியாகும். இதில் இந்திய மெய்ப்பொருளியல் ஆய்வில் இடம்பெறுகின்ற உலகாயதம், பௌத்தம், சமணம், ஆசீவகம், சாங்கியம், யோகம், நியாய வைசேடிகம், மீமாம்சை, ஏகான்மவாதம் என்ற சமயங்கள் எடுத்துக் கொள்ளப்பெற்று – அவ்வச்சமயங்களின் அடிப்படைக் கொள்கைகள் கிடைத்த தரவுகளால் தொகுத்துத் தரப்பெற்று, அந்தந்த சமயங்களின் அடிப்படைக் கொள்கைகள் சைவ

நூல்களில் இடம்பெற்றிருப்பதையும் சுட்டிக்காட்டி, அவ்வச் சமயக் கொள்கைகளின் மூலக் கூறுகள் எவ்வாறு இடம்பெற்றிருக்கின்றன என்ற செய்திகளும் இப்பகுதியில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. சைவ சமயம் தன் தத்துவங்களை விளக்கும் பொழுது பரபக்கம், சுபக்கம் என்று இருவகையில் அமைத்துக் கொள்ளும். பரபக்கம் என்பது பிற மதக் கருத்துக்களைக் கூறி, அவை பொருத்தமற்றவை என மறுத்துச் சைவ சமயத்தை நிலைநாட்டுவது. சுபக்கம் என்பது சைவ சமயத்தின் கொள்கைகளை விளக்கிக் கூறி அதன் சிறப்பை நிலைநாட்டுவது. எனவே, சைவ சமயக் கொள்கைப்படி சங்க இலக்கியங்களில் இடம்பெற்ற பிற மதக் கருத்துக்களும், ஆய்வின் பிற பகுதிகளில் சங்க இலக்கியத்தில் இடம்பெற்ற சைவ சமயத்தின் மூலக் கூறுகளையும் எடுத்துக்காட்ட வேண்டியிருப்பதால் இப்பகுதியில் பிற மதங்களின் கருத்துக்களும் தொகுத்துத் தரப்பெற்றுள்ளன.

சைவ சமயத்தின் தொன்மை என்பது இரண்டாவது பகுதியாகும். இதில் சைவ சமயத்தின் தொன்மையை எடுத்துக்காட்டுவதற்காக அகழாய்வுச் சான்றுகள், வேதத்தில் உருத்திரன் வழிபாடு, காஷ்மீர் சைவம், வீர சைவம், அகப்புறச் சைவம், அகச்சைவம் ஆகியவற்றின் தரவுகளைக் கொண்டு காலம் வரையறுக்க இயலாத சைவ சமயத்தின் தொன்மை எடுத்துக்காட்டப் பெற்றுள்ளது. மேலும், வேதங்களில் சிவன் இடம்பெறாமையும், காஷ்மீர சைவமும், வீர சைவமும் சைவ சமயத்தின் தொன்மைக்குத் தரவுகளாக அமைந்துள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்விரு சமயங்களுக்கும் சைவ சமயத்திற்கும் இடையே உள்ள தொடர்பினை எடுத்துக்காட்டி சைவ சமயத்தோடு தொடர்புடைய பிற அகப்புறச் சமயத்தையும், அகச்சமயத்தையும் அறிமுகப்படுத்தி சைவ சமயத்தின் தொன்மை புலப்படுத்தப் படுகின்றது.

பண்டைத் தமிழரின் தெய்வ நம்பிக்கை என்னும் மூன்றாம் பகுதி, தமிழின் முதன்மையான இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தின்வழி கிடைக்கப்பெற்ற தெய்வ நம்பிக்கைகள் குறித்த செய்திகளைத் தொகுத்துத் தருவதாக அமைந்துள்ளது.

சங்கத் தொகை நூல்களில் கடவுள் வாழ்த்து என்னும் பகுதியில், எட்டுத்தொகை நூல்களில் இடம்பெற்றுள்ள கடவுள்வாழ்த்துப் பாடல்கள் மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. பத்துப்பாட்டிற்கெனத் தனி ஒரு செய்யுள் கடவுள் வாழ்த்தாக அமையாது. ஆகையால் ஆற்றுப்படை நூல்களில் கடவுள் வாழ்த்தாக முதல் பாட்டாகத் திருமுருகாற்றுப்படை அமைந்துள்ளது. அப்பாட்டில் உள்ள கருத்துக்கள் மூலக் கூறுகளில் இடம்பெறுகின்றன. எட்டுத்தொகை கடவுள் வாழ்த்துப் பாடல்களில் சைவம் சார்ந்த பாடல்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. அப்பாடல்களில் காணப்பெறும் சைவ சமயக் கருத்துகள் தொகுக்கப்பெற்றுள்ளன.

சங்க இலக்கியங்களில் இறை பற்றிய மூலக் கூறுகள் என்ற தலைப்பு, சைவ சமயத்தின் அடிப்படையான முப்பொருள்கள் பதி, பசு, பாசம் என்பன. இவை தமிழில் இறை, உயிர், தளை என்று குறிப்பிடப்பெறும். முப்பொருள்களில் தலைமையானது இறை என்ற கடவுட் பொருளாகும். சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள கடவுள், தெய்வம் என்ற பகுதிகள் எடுத்துக் கொள்ளப்பெற்று, அவை சைவ சமயத்தின் மூலக் கூறுகளாக அமைந்த சிறப்பை வெளிப்படுத்துகின்றது. சங்க இலக்கியங்களில் கடவுள் உண்டு என்பதற்கும், அவர் முதன்மையானவர் என்பதற்கும், தலைமையானவர் என்பதற்கும், நிலையானவர் என்பதற்கும் கிடைக்கப் பெற்ற தரவுகள் தொகுக்கப் பெற்றுள்ளன. மேலும், பெண் தெய்வ வழிபாடு, செவ்வேள் வழிபாடு, பிற தெய்வவழிபாடு, சிவபெருமானுக்குரிய பெயர்கள், விழாக்கள், புராண வரலாறுகள், தத்துவ நிலைகள் ஆகியவை பற்றிய தரவுகளும் தொகுத்துத் தரப்பெற்றுள்ளன. இவை சங்க இலக்கியங்களுக்குப் பின்வந்த திருமுறைகளிலும் சாத்திரங்களிலும் வளர்நிலையில் இடம்பெற்றமை குறித்தும் தொகுத்தளிக்கப் பட்டுள்ளன.

சங்க இலக்கியங்களில் உயிர்க்கொள்கை என்னும் பகுதி, உயிர் பற்றிய பிற மதக்கொள்கைகள் எடுத்துக்காட்டப்பெற்று, அவை பொருத்தமற்றவை என்பதை நிறுவுகின்றது. சைவ சமயத்தின் உயிர் பற்றிய கொள்கையை எடுத்துக்காட்டுகின்றது. மேலும், உயிருக்கும் உடம்பிற்கும் உள்ள தொடர்பு, உயிர் நிலையானது என்பது சொர்க்கம் நரகம் பற்றிய செய்திகள், சீவன் முத்தரின் செய்திகள் சங்க இலக்கியத் தரவுகளிலிருந்து எடுத்தளிக்கப்பட்டுள்ளன. இத்தரவுகளின் வளர்ச்சிநிலை திருமுறைகளிலும், சித்தாந்த சாத்திரங்களிலும் இடம்பெற்ற செய்திகளும் தொகுத்தளிக்கப் பட்டுள்ளது.

சங்க இலக்கியங்களில் பாசக்கொள்கை என்ற தலைப்பில் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்ற வினைக் கொள்கைக்குரிய தரவுகள் தொகுக்கப் பெற்று, அவை நல்வினை தீவினையாகவும், ஊழ்வினை யாகவும் திகழுகின்றன என்பது நிறுவப்பெற்றுள்ளது. இக்கொள்கைகள் திருமுறைகளிலும், சாத்திரங்களிலும் அமைந்தமையும் எடுத்துக்காட்டப் பெற்றுள்ளது.

சங்க இலக்கியங்களில் சிவத்துவம் என்னும் பகுதி, சைவ சமயத் தத்துவங்கள் அளவை, இலக்கணம், சாதனம், பயன் என்ற நான்கின் அடிப்படையில் வகுத்துக் கூறுகின்றது. இறை, உயிர், தளை என்ற முப்பொருளும் உண்டு என்பதை அளவைகளால் நிறுவும் பொருட்டு, அனுமான அளவையை மையமாகக் கொண்டு செய்திகள் தரப்படுவதுண்டு. அம் முப்பொருள்களின் இலக்கணம் என்ற பகுதியில் கூறப்படுவதுண்டு. இறையருளை அடைவதற்கு உரிய வழிகளைக் கருவிகளாகக் கொண்டு, அக்கருவிகளைச் சாதனப் பகுதியில் கூறுவதுண்டு. கருவிகளைக் கொண்டு இறைவனை வழிபட்டால் கிடைக்கக் கூடிய பேரருளைப் பயன் என்ற பகுதியில் கூறப்படுவதுண்டு. இந்த நான்கில் சாதனம், பயன் என்ற இரண்டின் அடிப்படையில் காணப்படுகின்ற செய்திகள் சங்க இலக்கியங்களில் அமைந்துள்ள நிலையினை எடுத்துக் காட்டுகின்றது. இதில் வேதம், வேள்வி, கோயில், நிலையாமை,வழிபாடு, முத்தி என்ற செய்திகள் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றிருப்பது குறித்து எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இவற்றின் வளர்நிலை திருமுறை, சித்தாந்தங்களால் நிறுவப்பெற்றுள்ளது.

Weight0.750 kg