நான் 1982-ல் தமிழ்ப் பல்கலைக்கழகப் பணியில் சேர்ந்தது முதல் கண்ணில் கண்ட அடிமை ஆவணங்களை (கல்வெட்டு, ஓலை) சேகரிக்கத் தொடங்கினேன். மொத்தம் 50 ஆவணங்கள் கிடைத்துள்ளன. (அனைத்தும் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன).
செம்மொழியான நம் செந்தமிழ் வழங்கும் நம் தாய்த்திரு நாட்டில் “அடிமைச் சமுதாயம்” என ஒன்று இருந்தது வரலாற்றில் எழுதப்பட வேண்டும். அப்போது தான் நாட்டு வரலாறு முழுமை பெறும். அம்முயற்சிக்கு இச்சிறு நூல் உதவக் கூடும். இவை நாட்டு வரலாற்றில் ஒரு கூறு.
வரலாற்றுப் பணியில் செ.இராசு
புத்தகப் பொருளடக்கம்
- அகிலமெங்கும் அடிமை முறை
- நம் நாட்டில் அடிமைகள்
- தமிழ் இலக்கியங்களில் அடிமைகள்
- அடிமை செய்தலே வாழ்வாக
- மனு தர்ம சாஸ்திரமும் ரிக் வேதமும் அடிமையும்
- அரசு அதிகாரிகளும் குறுநில மன்னர்களும் அடிமையும்
- தலைவர்க்குத் தொண்டர் அடிமை
- போர் அடிமைகள்
- அடிமை ஓலைகள்
- அடிமைகளின் விலை
- அடிமைக்குக் காரணம் பொருளாதார நிலையே
- அடிமைகளின் பெயர்கள்
- தந்தை மகனுக்குக் கொடுத்த அடிமைகள்
- பெற்ற குழந்தையை விற்ற அன்னையர்
- கடன் வாங்கிக் கல்யாணம்
- அடிமையின் குழந்தைகளும் அடிமை
- தீண்டா அடிமை
- விலைக்கு விற்கப்பட்ட கோயில் அடிமைகள்
- தானம் தரப்பட்ட கோயில் அடிமைகள்
- தாமே அடிமை ஆனவர்கள் 22
- பொதுமக்கள் இடையே அடிமை வணிகம்
- ஒரு கோயிலில் 100 அடிமைகள் 25
- தேவரடியார் இரு வகை
- மனிதர்களை விலைக்கு வாங்கலாம்
- அடிமை பற்றிய குறிப்பு
- கம்பர் வரலாற்றில் அடிமை
- செய்தித்துளிகள்
- பொட்டுக்கட்டல்
அடிமை ஆவணங்கள்
- பறையடிமை விலை ஓலை
- சகோதரி குடும்பத்தை விற்ற சகோதரர்கள்
- பறையர் குடும்பம் 7 பேர் 82 வராகன்
- 5 வயது பெண் குழந்தை விலை 2 புதுச்சேரி ரூபாய் 100 ரூபாய்க்கு வாங்கிய பெண்ணை 8 ரூபாய்க்குத் தாசி விற்றாள்
- 4 பறையடிமைகள் விலை 16 பொன்
- பறையர் குடும்பம் விலை 80 பொன்
- 1% ரூபாய் ஒரு சேலைக்கு ஒரு வயது ஆண் குழந்தை 112
- குழந்தை கேசவன் விலை 4 ரூபாய் 10
- பெற்ற குழந்தைகளும் அடிமை
- மணமான மகளை விற்ற தந்தை
- தீண்டா அடிமை மூவர் விலை 113 பணம்
- 10 அடிமைகட்கு 1000 காசு
- பறையர் பேரில் அடிமைச் சாசனம்
- வெள்ளாட்டி குடும்பம் கோயிலுக்கு விற்பனை
- 6 அடிமை 13 காசு
- 15 பேருடன் தன்னையும் விற்ற பெண்
- மட அடிமை ஆன கல்தச்சர் குடும்பம்
- குடும்ப அடிமைகள் விற்பனை
- தன்னையும் குடும்பத்தையும் காசுக்கு விற்ற பெண்
- தந்தை தந்த அடிமைகளை 700 காசுக்கு விற்ற பெண்
- பறையடிமை 150 பணம்
- வெள்ளாட்டி நல்லதாய் விலை 50 பணம்
- அடிமை ஆச்சன் விலை 14 ரூபாய்
- தாயும் மகளும் அடிமையாக விற்பனை
- மகனை 30 பணத்திற்கு விற்ற தீண்டா அடிமை
- வெள்ளாட்டி இளையாள் விலை 25 பணம் 29
- நாகன் அடிமைக்குச் சாமீன் சீட்டு
- கடன் வாங்கிக் கல்யாணம் மனைவி
- கடன் வாங்கிக் கல்யாணம் கடனுக்காக அடிமை
- 6 ரூபாய் 10 கலம் நெல்லுக்கு கணவனும் மனைவியும் அடிமை
- திருமணத்திற்கு ரூபாய் 13 ஐந்து கலம் நெல் கடன்
- கிரயம் செய்யப்பட்ட பறையர் குடும்பம் 36
- இறுதிச் சடங்கிற்கு 5/2 ரூபாய் கடன் வாங்கி அடிமை
- பஞ்சத்தால் கோயிலுக்கு விற்றுக் கொண்ட குடும்பம் 39
- கோயில் பணிகட்குப் பெண்கள் அடிமை
- மட அடிமையான குடும்பப் பெண்கள்
- குடும்பப் பெண்கள் தேவரடியார் ஆதல்
- தானம் செய்யப்பட்ட உவைச்ச அடிமைகள்
- நெற்குறு சாலைக்குத் தாயாரும் 4 மகள்களும் கொடை
- தீண்டா அடிமையுடன் ஊர் கோயிலுக்குக் கொடை
- சீதனமாகக் கொடுக்கப்பட்ட அடிமைகள்
- தந்தை மகனுக்குக் கொடுத்த அடிமைகள்
- பள்ளிப்படை கோயிலில் பல அடிமைகள்
- குறுக்கைக் கோயிலில் 100 அடிமைகள் 50
- இடையர் அடிமை இருவர்
- இடைக்குடி மக்கள் விற்பனை
முன்னுரை
நம்மிடையே இரண்டு வழக்குத் தொடர்கள் உண்டு. அவை ‘தோட்டி முதல் தொண்டைமான் வரை” ‘ஆண்டான் முதல் அடிமை வரை” என்பன. இவற்றின் மூலம் தொண்டைமானும் ஆண்டஅரசரும் உயர்ந்தவர்கள் என்றும் தோட்டியும் அடிமையும் கடைசி நிலையில் உள்ள தாழ்ந்தவர் என்பதும் புலப்படும்.
தோட்டி என்பது ஒரு குறிப்பிட்ட சாதி. அடிமை என்பது தனிப்பட்ட சாதி அல்ல. எல்லாச் சாதியினரும் பிறருக்கு அடிமை ஆக இருந்துள்ளனர். ஆனாலும் அடிமை ஆவணங்கள் முழுவதையும் பார்த்த போது பறையர், பள்ளர் சமூகத்தினரே பெரும்பாலும் அடிமைகளாக இருந்துள்ளனர் என்பதைக் காண முடிகிறது.”
செப்பேடுகள் பலவற்றில் ஒரு ஊரைக் கோயிலுக்கோ அல்லது தனியார்களுக்கோ கொடுக்கும் போது ‘மேல் நோக்கிய மரம் கீழ்நோக்கிய கிணறு மாவடை மரவடை ஏரி குளம், குளப்பரப்பு தேன்படுவரை மான்படு காடு, மீன்படு சுனை, பொன்படு குட்டம் பள் பறை முதலியன” கொடுத்தோம். இதன் மூலம் பள், பறை (பள்ளர், பறையர்) உரிமையுடைய தனி மனிதர் எனக் கருதாமல் ஊரில் உள்ள பொருளாகவே கருதப்பட்டனர் என்று தெரிகிறது.
குறுநிலத் தலைவர்கள் அரசு அதிகாரிகள், செல்வந்தர்கள், சமுதாயத்தில் மேல் நிலையில் உள்ளவர்கள், பெருநிலக் கிழார்கள் ஆகியோர் பலர் தங்களுக்கென்று சக மனிதர்களை அடிமைகளாக வைத்துக் கொண்டிருந்தனர். உலகில் பல நாடுகளில் தொன்மை முதல் இவ்வழக்கம் இருந்துள்ளது. தமிழ் ஆவணங்களில்,
“என்னுதான அடிமைகள்”
”எனக்குச் சொந்தமான அடிமைகள்
“நான் ஆண்டனுபவித்து வரும் என் அடிமைகள்
என்ற தொடர்களைக் காணுகின்றோம்.
அவர்கள் அடிமைகள் சுமை என்று கருதுகிற போதோ அடிமைகள் செய்த பணி முடிகிறபோதோ, அடிமைகள் குடும்பம் பெருகியபோதோ அடிமைகளை அல்லது மிகையான அடிமைகளைக் கோயிலுக்குத் தானம் செய்தனர், கோயிலுக்கு விற்றனர்
தேவைப்படும் வேறு தனியாருக்கு விற்றனர் பரம்பரை அடிமையாக இல்லாத சிலரும் இயற்கைச் சீற்றத்தினாலோ, பஞ்சம், அல்லது வறுமை காரணமாகவோ வாழ முடியாத போது அவர்கள் தாங்களாகவே தங்களைக் கோயிலுக்கு அடிமையாக்கிக் கொண்டனர் விலைக்கு விற்றுக் கொண்டனர். இதைத்தான் அடிமை ஆவணங்கள் கூறுகின்றன.
இலங்கை உட்படத் தென்னகம் முழுவதையும் வென்று அடிப்படுத்து ஆண்டு கங்கைவரை உள்ள நாடுகளையெல்லாம் வென்று, அலை கடல் நடவுள் பல கலம் செலுத்திக் கடாரத்தில் புலிக் கொடி நாட்டி வானளாவிய விமானம், கோபுரம் உடைய ஆலயங்கள் கட்டிய சோழர் ஆட்சி தமிழ்நாட்டில் பொற்காலம் என்று கருதப்படுகின்றது.
இக்காலத்தில் தான் அடிமை முறை கொடிகட்டிப் பறந்தது. பல கோயில்கள் அடிமைகட்கு “அஞ்சினான் புகலிடம்” ஆக விளங்கியது. கோயில்களில் அடிமைகள் கூட்டம் பெருகியது. மூன்றாம் இராசராசன் காலத்தில் மட்டும் கொறுக்கை வீரட்டானேசுரர் கோயிலில் 100 அடிமைகள் இருந்துள்ளனர்.
ஆனால் நாட்டு வரலாற்று நூல்களில் தமிழக அடிமை முறை உள்ளபடி எழுதப்படவில்லை. அரசர்கள் ஆட்சியில் பாலாறும், தேனாறும் பாய்ந்ததாகக் கூறும் சில வரலாற்று நூல்களில் தமிழக அடிமை முறை மறைக்கப்பட்டும், மறுக்கப்பட்டும் உள்ளன. சில வரலாற்று ஆசிரியர்கள் தமிழ்நாட்டில் அடிமை முறை இல்லை என்றே எழுதியுள்ளனர். 1931-3 ஆம் ஆண்டுகளில் கவிமணி தேசிக விநாயகம் சில அடிமை ஆவணங்களைத் தொகுத்தார்.
அ.கா.பெருமாள், செ.போஸ், க.பன்னீர்செல்வம் எம்.ஏ.கிருட்டினன், மார்க்சீய காந்தி, போன்ற ஆய்வாளர் சிலர் அடிமை ஆவணங்களைக் கண்டறிந்தனர். ஆய்வறிஞர் டாக்டர் ஆ.சிவசுப்பிரமணியம் 1984 ஆண்டு 64 பக்கம் உள்ள தமிழகத்தில் “அடிமை முறை என்ற நூலை எழுதினார். 2005-ல் அதை விரிவு படுத்தும் பதிப்பித்தார்..
நான் 1982-ல் தமிழ்ப் பல்கலைக்கழகப் பணியில் சேர்ந்தது முதல் கண்ணில் கண்ட அடிமை ஆவணங்களை (கல்வெட்டு, ஓலை) சேகரிக்கத் தொடங்கினேன். மொத்தம் 50 ஆவணங்கள் கிடைத்துள்ளன. (அனைத்தும் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன).
முழுவதையும் தொகுத்துப் பார்த்த போது அதிர்ச்சி தரத்தக்கதாகவும் வைப்பதாகவும், நெஞ்சை உலுக்குவதாகவும் பல செய்திகள் கிடைத்தன.
பஞ்ச காலத்தைப் பற்றிப் பாடப்பட்ட பஞ்சக்கும்மிகளில் தாய்மார் தாம் பெற்றெடுத்துச் சீராட்டி வளர்க்க வேண்டிய தம் மழலைச் செல்வங்களை விலை கூறி விற்ற செய்திகள் கூறப்படுகின்றன.
‘கூறை பறிகொடுத்துக் கொழுநனைத் தோற்றபஞ்சம்
கணவனைப் பறிகொடுத்துக் கைக்குழந்தை விற்றபஞ்சம்”
“தாதுவருசப் பஞ்சத்திலே ஓசாமியே தாய்வேறே பிள்ளைவேறே ஓசாமியே”
“பெண்டு பிள்ளைகளை விற்பாரும் வீட்டைப் பிரித்து வைக்கோலை விற்பாரும்” போன்ற இச்செய்திகள் மிகை அல்ல. இதனை மெய்ப்பிக்கும் வகையில் பல அடிமை ஆவணங்கள் கிடைத்துள்ளன.
கொறநாட்டுக் கருப்பாயி தன் குழந்தையை 1% ரூபாய்க்கும் 1 சேலைக்கும் விற்றுள்ளாள். புதுச்சேரி தயிலம்மை தன் பெண் குழந்தையை 2 ரூபாய்க்கு விற்றாள். திருமுல்லை வாயில் பாவாடை முதலி மனைவி நாகு தன் மகன் கேசவனை 4 ரூபாய்க்கு விற்றாள். திருக்களாம்பாளையம் பள்ளன் சின்னப் பயல் அவன் மனைவி தேவி இருவரும் தங்கள் பெண் குழந்தையை விற்றனர். இக்குழந்தைகளின் தாயார் மனம் என்ன பாடுபட்டிருக்கும்.
சாம்பான் நாகன் தன் திருமணத்திற்கு 12 பணம் கடன் வாங்கி வாங்கிய கடனுக்காகப் புது மனைவி தாயாருடன் அடிமை ஆனாள்.
அண்ணன் இறுதிச் சடங்கிற்காக 52 ரூபாய் கடன் வாங்கிய தம்பி அடிமையாகி ஆள் ஒத்திச் சீட்டு எழுதிக் கொடுத்தான்.. பல பெண்கள் தம்மையும், மகன் மகளையும் வறுமை காரணமாகக் கோயிலுக்கு அடிமையாக்கிக் கொண்டனர்.
இரு சகோதரர்கள் தங்கள் சகோதரியையும் குடும்பத்தையும் அடிமையாக விற்றனர். குடும்பத்தோடு அவள் அடிமையான பலர் தங்கள் மாமன், மருமகன், சிறிய தாயார் முதலிய உறவினர்களையும் அடிமையாக்கினர்.
ஒரு தந்தை மணம் செய்து கொடுத்த மகளை விற்றுள்ளார். பலர் குடும்பம் குடும்பமாக எல்லா உறுப்பினர்களையும் குழந்தைகளையும் இனிப்பிறக்கும் குழந்தைகளையும் அடிமையாக்கினர்.
சிலர் கோயில்களில் திருவலகு செய்ய, மெழுக, நந்தவனப் பணி செய்ய, திருப்பதிகம் பாட, நெல்குற்றி அரிசி ஆக்க, இசைக் கருவிகள் இயக்க எனக் குறிப்பிட்ட பணிகட்கு அடிமைகளை அளித்தனர்.
பலர் ஊர்ப்பொது இடத்தில், தெருவில், ஊர் மன்றத்தில், ஆவணக் களரியில் பலர் முன்னிலையில் தங்கள் மனைவி, இளம்பெண்கள், மகன், மகள், குழந்தைகளையும் நிறுத்தி குடும்ப உறுப்பினர்களையும் சிலர் தம்மையும் “விலை கொடுத்து வாங்குவார் உண்டோ” என்று விலை கூறி விற்கும் நிலை பல இடங்களில் நடைபெற்றுள்ளது. இவ்வாறு விற்றுக்கொண்ட ஆவணங்கள் பல இத்தொகுப்பில் உள்ளன.
இன்னொரு கொடுமை இந்த அடிமைகளில் “தீண்டா அடிமை என ஒரு பிரிவினர் இருப்பது தான். இவர்கள் ஊருக்குள் இல்லாமல் ஊருக்கு அப்பால் “புறஞ்சேரி” என்ற இடத்தில் இருந்தனர். “புறஞ்சேரியில் கிடக்கும் தீண்டா அடிமை” என்று இரு ஆவணம் கூறுகிறது. இவர்கள் “கிடக்கும் / (வாழும்) இந்த இடம் கூட இவர்கட்குச் சொந்தம் இல்லை என்னுதான புலைச்சேரி நத்தம் என்கிறார் ஒருவர்.
தீண்டா அடிமைகள் ஆபரணம் எதுவும் அணியக் செருப்பு அணியக் கூடாது வீடுகளில் உலோகப் பாத்திரம் இருக்கக் கூடாது, மண்பாத்திரம் மட்டுமே இருக்க வேண்டும், ஆண்கள் இடுப்பிற்கு மேலும் முழங்காலுக்குக் கீழும் ஆடை அணியக் கூடாது நன்மை, தீமைக்கு வாத்தியம் வாசிக்கக் கூடாது, வீட்டுக்குக் காரை புசக் கூடாது, பெண்கள் மார்பை மறைக்கத் தாவணி, ரவிக்கை போடக் மழை வெயிலுக்குக் குடை பிடிக்கக் கூடாது.
செம்மொழியான நம் செந்தமிழ் வழங்கும் நம் தாய்த்திரு நாட்டில் மேற்கண்டவாறு “அடிமைச் சமுதாயம்” என ஒன்று இருந்தது வரலாற்றில் எழுதப்பட வேண்டும். அப்போது தான் நாட்டு வரலாறு முழுமை பெறும்.
அம்முயற்சிக்கு இச்சிறு நூல் உதவக் கூடும் இவை நாட்டு வரலாற்றில் ஒரு கூறு. நூலைச் சிறப்பாக வெளியிடும் ஆதிவனம் பதிப்பகத்தாருக்கு. மெய்ப்பு திருத்தத்திற்கு உதவிய திரு.எம்.பாபு அவர்களுக்கும் நன்றி.
வரலாற்றுப் பணியில்
செ.இராசு
புலவர் செ.இராசு, எம்.ஏ., பிஎச்.டி.,
முன்னாள் தலைவர், கல்வெட்டு – தொல்லியல் துறை,