இந்தியாவில் உணவை உணர்வுப்பூர்வமாகக் கொண்டாடுகிற ஒரே மாநிலம் கேரளாதான்… அவர்கள் அளவுக்கு ரசனையாக சமைக்கவோ சாப்பிடவோ முடியாது. இலையை விரித்துப் பரிமாறினால் வகை வகையாக, வண்ண வண்ணமாக நிரப்பி திகைக்க வைத்துவிடுவார்கள். கேரள உணவைப் பொறுத்தவரை பாலக்காடு, மலபார், கொங்கணி என மூன்று தனித்தன்மை கொண்ட பிரிவுகள் உண்டு. பாலக்காடு சைவத்துக்குப் பெயர் பெற்றது. மலபார் கடலுணவுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. கொங்கணியைப் பொறுத்தவரை அது கேரளாவோடு தொடர்பற்ற தனியிழை. பாலக்காட்டு உணவுக்கும் மலபார் உணவுக்கும் இருக்கும் பொதுத்தன்மை தேங்காய்.
வடகர்நாடகா, தென்கர்நாடகா, உடுப்பி, சரஸ்வத், குடகு, மங்களூர் என கர்நாடகத்தில் தனித்தன்மை வாய்ந்த உணவுப்பண்பாடுகள் உண்டு. வட கர்நாடகாவில் சைவமே பிரதானம். சித்திரபுரா, ஷிமோகா, மங்களூர் வட்டாரத்தில் கடலுணவுகள் பேர் போனவை. குடகு பகுதியில் கொடாவா மக்களின் பாரம்பர்ய உணவுகள் வாழ்நாள் முழுவதும் நினைவில் ஒட்டியிருக்கும், கடம்புட்டு, நூல்புட்டு, அக்கிரொட்டி, நெய்ச்சோறு போன்றவை இந்த மண்ணின் தனித்தன்மை வாய்ந்த உணவுகள். பாண்டவாபுரா கோதி அல்வா, சாம்ராஜ் நகர் போண்டா சூப், ஸ்ரீரங்கப்பட்டணம் அக்கிரொட்டி, பெல்காம் குந்தா, மத்தூர் வடா, தாவணகெரே பென்னாதோசை, மைசூர் பாகு, மங்களூர் கப் இட்லி, கார்வார் பலா இலை இட்லி, பிடதி தட்டே இட்லி, தார்வார் பேடா என கர்நாடகத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு பாரம்பர்ய உணவு உண்டு.
வரலாறு, அவற்றின் செய்முறை, சேர்மானம், சுவை என எல்லாத் தகவல்களும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.