தமிழகத்தில் மண்டிக் கிடந்த இருள் அகற்றப் பேரொளிப் பிழம்பாய்ப் பிறந்த மகான். சமூகத்தைப் பண்படுத்திச் சீர்திருத்தும் வகையில் சமய மறுப்பு, சடங்கு மறுப்பு, உருவ வழிபாடு மறுப்பு ஆகியனவே தமது சன்மார்க்க நெறியின் கோட்பாடு என 1870களிலேயே முழங்கியவர்.
தமிழ்நாட்டில் முதன்முதலாக எளிய மக்களுக்குத் திருக்குறள் வகுப்பு நடத்தியவர். முதன்முதலாக முதியோர் கல்வியை ஏற்படுத்தி ஊக்குவித்தவர். முதன்முதலாக மும்மொழிப் பாடசாலை (தமிழ், வடமொழி, ஆங்கிலம்) நிறுவியவர் எனப் பல முன்னோடித் திட்டங்களுக்கு மூல ஊற்றாய்த் திகழ்ந்தவர்.
பசிப்பிணி மருத்துவர், உரைநடையின் முன்னோடி, கல்வெட்டு ஆராய்ச்சிக்கு வித்திட்டவர், எழுத்துச் சீர்திருத்தத்தின் படிக்கல், சித்த மருத்துவர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், சொற்பொழிவாளர் எனத் தன் வாழ்வியங்கியலில் பல்துறை வித்தராகச் செயல்பட்ட வள்ளலாரின் வாழ்வையும் வாக்கையும் ஆய்வுக்குட்படுத்தி அரிய பல உண்மைகளை வெளிக்கொணர்ந்த கட்டுரைகளின் தொகுப்பாக முகிழ்த்துள்ளது இந்நூல்.