இலக்கியமும் சமூகமும் :
இலக்கியமும் சமூகமும் பிரிக்கமுடியாத உறவினையும் தொடர்பினையும் கொண்டது. இன்று இலக்கியத்தைச் சமூகவியல் பார்வையுடன் ஆராயவேண்டுமென்று பலரும் விரும்புகின்றனர். ஒரு குறிப்பிட்ட சமூகச் சூழ்நிலையோடும் பொருளாதாரம், சமூகம், அரசியலமைப்பு முறைகளுடனும் இலக்கியம் நெருங்கிய தொடர்புடையதாகும்.
இலக்கியத்தின் மீது சமுதாயம் செலுத்தும் செல்வாக்கையும், சமுதாயத்தில் இலக்கியம் பெற்றுள்ள இடம் மற்றும் அதன் தாக்கத்தினையும் விளக்கமாகவும் நுணுக்கமாகவும் வகுத்தும் தொகுத்தும் திறனாய்ந்து மதிப்பிடல் அவசியமான ஒன்றாகும். படைப்பாளியின் சமூகச் சூழல்களுக்கும், இலக்கியப் படைப்பின் உள்ளடக்கச் செய்திகளுக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்பும் உறவும் உண்டு. இதனை நுணுக்கமாக ஆராய்ந்து வெளிப்படுத்துவதே ‘இலக்கியச் சமூகவியல்’ (Literary Sociology) ஆகும்.