குடவாயில் பாலசுப்ரமணியன், திருவாரூர் மாவட்டம், குடவாயில் வட்டம், பெருமங்கலம் என்ற ஊரில் முனுசாமி சோழகர், அபயாம்பாள் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். கும்பகோணம் அரசினர் கல்லூரியில் பி.எஸ்சி. விலங்கியலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., வரலாறும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்ஃபில் வரலாறும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பி.எச்டி., கட்டடக்கலையும் பயின்றவர்.
கோயிற்கலைக்கும் தமிழ்மொழிக்கும் ஆற்றிவரும் பணிக்காக பிப்ரவரி 2016இல் இவர் முதுமுனைவர் பட்டம் பெற்றார்.
இவர் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தின் பதிப்பக மேலாளராக பல ஆண்டுகளாக பணிபுரிந்து உள்ளார்.இவர் 100க்கும் மேற்பட்ட பழங்கால கல்வெட்டுக்களையும், பழங்கால நாணயங்கள், செப்புத் தகடுகள், சிலைகள் போன்ற பலவற்றைக் கண்டுபிடித்து தமிழக கல்வெட்டு ஆராய்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ளார். 25க்கும் மேற்பட்ட நூல்களும் 300க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார்.