கோயிற்கட்டடக்கலைக் கூறுகளில் சாளரங்கள் அலங்கார வேலைப்பாட்டிற் காகவும், பயன்பாட்டுத் தேவைக்காகவும் இடம்பெறும் ஒரு கூறாகும். துவக்க காலத்தில் எளிமையாக இருந்த இவை காலம் செல்லச் செல்லப் புதிய வடிவங்களைப் பெற்று நன்கு வளர்ச்சியடைந்தன. சாளரம் என்பது கருவறையின் வெளிச் சுவரிலும் அர்த்தமண்டபச் சுவரிலும் இடம்பெறும்.
சாந்தார வகைக் கோயில்களின் கருவறையானது மூடிய திருச்சுற்றுடன் விளங்கும். இதில் அஷ்டாங்க விமானக் பள்ளங்களி கோயில் எனில் இரண்டு திருச்சுற்றுகள் இடம்பெறும். இத்திருச்சுற்றுகளுக்குள் காற்றும் வெளிச்சமும் வேண்டியே சாளரங்கள் இடம்பெறுகின்றன. . திருச்சுற்று இல்லாத கருவறைச் சுவரில் சாளரம் இடம்பெறாது. சில கோயில்களில் சாளரம் போன்ற அமைப்பு செதுக்கப்பட்டிருக்கும். இதில் துவாரங்கள் இருக்காது. இவை போலிச் சாளரங்கள் எனப்படும்.
சாளரம்
சாளரங்கள் தமிழகத்துக் கோயில்களில் பல்லவர் காலம் தொட்டே இடம்பெற்று வந்துள்ளன. ஆனால் அக்காலத்தில் இவை வடிவவியல் உருவ அமைப்புகளையுடைய சாளரங்களாக அமைக்கப்பட்டுள்ளன. பிற்காலத்தில் சாளரங்கள் பல்வேறு அமைப்புக்களில் செதுக்கப் பட்டதோடு அவற்றின் இடையிடையே சிறு அளவிலான சிற்பங்களையும் இடம் பெறச் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
– அம்பை மணிவண்ணன்
ஜன்னல் சாளரம் தமிழ் பெயரா?
ஒரு வெளிநாட்டு சொல், தமிழில் நிலை பெறுவது என்பது இயல்பான ஒன்று. ஆனால் தமிழா அல்லது வேற்று மொழி சொல்லா என்பது கூட தெரியாத அளவுக்கு எல்லோராலும் அறியப்படும் சொற்கள் தமிழில் வெகு சொற்பமானவை.
பெரும்பாலும் வடமொழிச் சொற்கள் தமிழில் மிகுதியாக காணப்படும். அவற்றை தமிழில் இருந்து நாம் வேறுபடுத்தி காண்பது மிக அரிது. அவ்வப்போது தமிழறிஞர்கள் இவற்றை நமக்கு சுட்டிக்காட்டி அதற்கான சரியான தமிழ் பதத்தை நமக்கு தெரிவித்தனர்.
கட்டடக்கலையில் பல தமிழ்ச் சொற்கள் இருந்தாலும் மரபுச் சொற்களை நாம் பெரும்பாலும் வடமொழியிலிருந்து வழங்குகின்றோம். அவ் வடமொழிக்கும் தமிழில் இருந்தே பல கலைச் சொற்கள் சென்றது என அறிஞர்கள் உறுதிபட கருதுகின்றனர்.
அவ்வாறு நாம் இன்று பயன்படுத்தும் வீட்டு கட்டடக்கலையின் முக்கிய உறுப்பான ஜன்னல் என்ற பெயர் ஒரு போர்த்துகீசிய சொல் (Janela) என்றால் நம்ப முடிகின்றதா. ஜன்னல் என்பதை நாம் தமிழ்ப்படுத்தி சன்னல் என கூறுவோம். சில இடங்களில் தமிழ்ப்படுத்தப்பட்ட சொல்லான “சாளரம்” (வடமொழியில் ஜாலகா) என ஜன்னல் அழைக்கப்படுகின்றது.
ஆனால் சங்க இலக்கியமான சிலப்பதிகாரம், தமிழ் வழி சொல்லான “காலதர்” என ஜன்னலை குறிப்பிடுகின்றது.
“மான் கண் காலதர் மாளிகை”. எனும் சிலப்.5, 8 வரியில் வரும் சொல்லில் “காலதர்”= கால் (காற்று) + அதர் (வழி) என்பதை குறிக்கும். அதாவது மானின் கண்கள் போன்ற துளைகளுடைய, காற்று செல்லும் வழி கொண்ட மாளிகை என்பதை இப்பாடல் உணர்த்துகின்றது.
ஆடுமாடுகளும் காட்டு விலங்குகளும் சென்று நீரை அருந்தும் சேறு நிறைந்த பல பாதைகள் குளத்தின் அருகே இருக்கும் என்பதை உணர்த்தும் “உண்ணீர் மருங்கின் அதர் பல ஆகும்” – புறநானூறு 204 எனும் பாடலில் “அதர்” என்பது வழி என்பதை குறிக்கும்.
எனவே ஜன்னல் என்ற போர்த்துக்கீசிய சொல்லுக்கு நிகரான, தமிழ்ச் சொல் “காலதர்” என்பதாகும்.
தமிழில் இருக்கும் சில போர்த்துக்கீசிய சொற்கள்: அலமாரி, மேஜை, மேஸ்திரி, சாவி, வராந்தா, குசினி (சமையலறை), பீப்பாய், பீடி.
படம்: சாளரம், ஆய்ஹோலே, கருநாடகம்.
தளி பாரம்பரியக் கலை மற்றும் கட்டடக்கலை கூடம்.
கோயில் கலை தொடர்பான பணியில் உள்ளோர் அதிகம் வாங்கி பயனடைந்த முனைவர். அம்பை மணிவண்ணன் நூல் தொகுப்பு மூன்று,
- தமிழக கோயில் கலை வரலாறு (புதிய பதிப்பு)
- கோயில் ஆய்வும் நெறிமுறைகளும்
- திருக்கோவில் அமைப்பும், திருவுருவ அமைதியும்
விலை: Rs. 710 + Shipping | Buy Online: https://bit.ly/3FeaeGv
அழைக்க/WhatsApp: +91 9786068908