நாயக்கர் என்ற சொல் எங்கிருந்து வந்தது ?

நாயக்கர் என்ற சொல் “நியோகி” என்ற சாளுக்கிய நாட்டு நிர்வாக சொல்லில் இருந்து பெறப்பட்டது என்பர். இது சாளுக்கிய அரச நிர்வாகத்தில் இருந்த பிரமணர்களை குறிப்பிட்டது. நியோகி (நி+யோகி) என்ற சொல்லுக்கு யோகங்களை அதாவது வழிபாட்டு சடங்குகள் பூசை செய்தல் போன்றவற்றை கைவிட்டு, அரச நிர்வாக, மற்றும் வேறு பணிகளுக்கு சென்றவர்கள் என்று பொருள். தென்னிந்தியாவில் குறிப்பாக ஆந்திர கர்நாடக அரசுகளில் நியோகி பிராமணர்கள் அதிக அளவில் காணப்பட்டனர். சில பிராமணர்கள் வணிகர்களாகவும் இருந்துள்ளனர். “நிர்வாகி” என்ற சொல்லுக்கும் இதற்கும் தொடர்புள்ளது என்பது எனது கருத்து.
பிற்காலத்தில் விஜயநகர பேரரசில் நாயக்கர் என்ற பட்டம் தரித்தும் பல பிராமணர்கள் நிர்வாகத்தில் இருந்துள்ளனர். படைத் தலைவர்களாகவும், மந்திரிகளாவும், விஜயநகர ஆட்சியில் கோட்டைக் காவலர்களாகவும் பிராமணர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழக பிராமணர்கள் போல அல்லாமல் தெலுங்கு மரபை கொண்ட இந்த நியோகி பிராமணர்கள், அக்ரகாரங்கள் போன்ற தனிக் குடியிருப்பிலோ, தனிதெருக்களிலோ வாசிக்காமல் மக்களோடு மக்களாக இருந்தனர்.
 
ஆனால் நாயக்கர் (நாயகம்) என்ற சொல் நிர்வாகத்தில் இருந்த சூத்திர வர்ண ஆட்சியாளர்களைக் குறிப்பிட்டது எனக் கூறப்படுகிறது. இதற்கு தலைவர் என்று பரதநாட்டிய சாஸ்திரம் முதலில் பொருள் குறிப்பிடுகிறது. நிர்வாகத்தில் நாயக்கர் முறை துவங்கியவர்கள் குப்தர்கள் என்றும், அதனை பெருவாரியாக செயல்படுத்தியவர்கள் காக்கத்தேய அரசி ருத்ரமாதேவி என்றும் கூறப்படுகிறது. இது படைகளுக்கு தலைவர்கள் என்பதை குறித்து. இவர்களின் முக்கிய வேலை அரசருக்கு தேவையான படைகளை அவரவர் பகுதியில் நிறுத்தி, நிர்வகித்து தேவையான பொழுது அனுப்புவது. சோழர் காலத்திலும் தண்டம் எனப்படும் படைகளுக்கு தலைவராக இருந்தவரை தண்ட நாயக்கர் எனக் குறிப்பிடப்படுகின்றனர்.
 
சோழர் காலத்தில் துவங்கி, விஜயநகர ஆட்சியின் போது இடங்கை வலங்கை பிரச்சனை பெரிதாகி ஒரு கிளர்ச்சி ஏற்பட்டது. அந்த கிளர்ச்சிக்கு பிறகு ஆளுநர் போன்ற மகாமண்டலேஸ்வர் மற்றும் அரச நிர்வாகிகளுக்கு பதிலாக, நாயக்கர்களுக்கே நாட்டின் பகுதிகளை ஆளும்படி விட்டுவிடும் முறை பின்னாளில் ஏற்பட்டது. இதனை நாயக்கத்தனம் என்பர். விஜயநகர ஆட்சியில் மன்னரிடமிருந்து நிலபரப்பை நாயக்கதானமாக பெற்ற படைத் தலைவர்கள் “நாயக்கர் பட்டம்” பெற்றனர். தமிழகத்தின் ஒவ்வொரு பகுதிகளிலும் இருந்த இந்த நாயக்கர் நிர்வாக குழுவினர் “நாயக்கபாடிகள்” என்று அழைக்கப்பட்டுள்ளன. பல்வேறு இனக்குழுக்களிலிருந்து வந்த சுமார் 20% தமிழக நாயக்கர்கள் விஜயநகர பேரரசில் பணியாற்றி உள்ளனர் என நொபொரு கராஷிமா அவர்கள் குறிப்பிடுகின்றார்.
 
மதுரை திருமலை நாயக்கர் காலத்தில் விஜயநகர பேரரசில் இருந்து விடுபட்ட பிறகு, மண்டலங்கள் பாளையங்களாகப் பிரிக்கப்பட்டு பாளையக்கார முறை தோன்றியது. நாயக்கர் ஆட்சிக்கு பிறகு நவாபின் ஆட்சிக் காலத்தில் இந்த பாளையக்காரர்கள் அவர்களுக்கு வரி கட்டுபவர்களாக மாறினார், அதில் சிலர் அடிக்கடி கிளர்ச்சி செய்பவர்களாகவும் இருந்துள்ளனர்.
 
ஆங்கிலேயர் ஆட்சி மாற்றத்தில் இந்த சண்டை வலுத்தது. பாளையக்காரர்கள் இணைந்து வீர சங்கம் அமைத்து ஆங்கிலேயருக்கு எதிரான போரில் தோல்வியுற்றதால், விஜயநகர நாயக்கர் ஆட்சியின் கடைசி ஆட்சிமுறையான பாளையக்கார ஆட்சிமுறை ஒழிந்தது. அதன் பின்பு, ஆங்கிலேயரின் அதிகாரத்தின் கீழே படைகள், ஆயுதங்கள் வைத்துக்கொள்ள அதிகாரம் இல்லாத ஜமீன்தாரி நிலவுடமை முறை தோன்றியது.

One comment

Leave a Reply